

Quote of the day by Bodhidharma: இன்றைக்கு இருக்கும் அவசர உலகத்தில் எந்நேரமும் ஓவர் திங்கிங் செய்து நமது மூளையை நாமே சோர்வாக்கிக் கொள்கிறோம். இதற்குத் தீர்வு தேடி பலரும் எங்கெங்கோ அலைகிறார்கள். ஆனால் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிலிருந்து சீனாவுக்குச் சென்று 'ஜென்' புத்த மதத்தைப் பரப்பிய மாபெரும் துறவி ‘போதிதர்மர்’ இதற்கு மிக எளிமையான ஒரு விடையைக் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார்.
அவர் கூறிய தத்துவத்தைப் புரிந்துகொண்டால் நமது அன்றாட வாழ்க்கையே ஒரு தியானமாக மாறிவிடும். அப்படி அவர் என்னதான் சொல்லியிருக்கிறார் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ஜென் என்பது என்ன?
"எதைப் பற்றியும் சிந்திக்காமல் இருப்பதே ஜென். இதை நீங்கள் உணர்ந்துவிட்டால், நடப்பது, உட்காருவது, படுப்பது என நீங்கள் செய்யும் அனைத்துமே ஜென் நிலைதான்" என்பது அவர் கூறிய புகழ்பெற்ற பொன்மொழி. பெரிய பெரிய புத்தகங்களைப் படித்து அறிவை வளர்ப்பதை விட, அனுபவபூர்வமாக ஒன்றை உணர்வதையே அவர் அதிகம் வலியுறுத்தினார்.
சிந்திக்காமல் இருப்பது என்றால் மூளையை முழுமையாக மரத்துப்போகச் செய்வதல்ல. தேவையில்லாத எண்ணங்களை மூளைக்குள் குப்பை போலச் சேர்த்து வைக்காமல், மனதை சுதந்திரமாக விடுவதே அதன் உண்மையான அர்த்தமாகும்.
சாதாரண வேலைகளும் தியானமே!
தியானம் என்றவுடன் கண்களை மூடிக்கொண்டு இருட்டான அறையில் தவம் செய்ய வேண்டும் என்று பலரும் நினைக்கிறார்கள். அது முற்றிலும் தவறான புரிதல். உங்கள் மனம் எவ்வித சலனமும் இல்லாமல் அமைதியாக இருக்கும்போது, நீங்கள் ரோட்டில் நடப்பது முதல், ஒரு கோப்பை டீ குடிப்பது வரை எல்லாமே ஒரு தியானமாகவே மாறும் என்று போதிதர்மர் கூறுகிறார்.
நிகழ்காலத்தில் முழுமையாக வாழ்வது மட்டும்தான் உண்மையான நிம்மதியைத் தரும். நீங்கள் செய்யும் சாதாரண வேலைகளையும் முழு ஈடுபாட்டோடு செய்யும்போது அங்கே தேவையற்ற குழப்பங்களுக்கு இடமே இருக்காது.
எப்படிப் பின்பற்றுவது?
இதை நமது தினசரி வாழ்க்கையில் கொண்டுவருவது ரொம்பவே சுலபமான விஷயம்தான். காலையில் தூங்கி எழுந்ததும் உடனே செல்போனை நோண்டாமல், சில நிமிடங்கள் அமைதியாக உட்கார்ந்து உங்கள் மூச்சுக்காற்றை மட்டும் கவனியுங்கள். சாப்பிடும்போது டிவி பார்ப்பதைத் தவிர்த்துவிட்டு, உணவின் சுவையை முழுமையாக உணர்ந்து ரசித்துச் சாப்பிடுங்கள்.
பாத்திரம் கழுவுவது, வீட்டைச் சுத்தம் செய்வது போன்ற சாதாரண வேலைகளைக் கூட கவனச்சிதறல் இல்லாமல் செய்து பழகுங்கள். வேலை பார்க்கும் இடங்களில் கூட அடுத்த நிமிடத்தைப் பற்றிய பயம் இல்லாமல் கையில் இருக்கும் வேலையை மட்டும் கவனமாகச் செய்யுங்கள்.
மனம் அமைதியாக இருக்கும்போதுதான் தெளிவான முடிவுகளை எடுக்க முடியும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எந்த ஒரு விஷயத்தின் முடிவைப் பற்றியும் அளவுக்கு அதிகமாகக் கற்பனை செய்து பயப்படுவதை விட்டுவிடுவது நல்லது.
நமது வாழ்க்கை, கடந்த காலத்தின் சோகங்களிலோ அல்லது எதிர்காலம் பற்றிய பயத்திலோ கிடையாது. இந்த நொடியில், நாம் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த நிமிடம் மட்டும்தான் உண்மையிலேயே நமக்குச் சொந்தமானது.