
முன்னுரை:-
பாவை என்னும் சொல் சங்க இலக்கியத்திலேயே பயின்று வந்துள்ளது. இச்சொல் பதுமை, அழகிய உருவம், கருவிழி, பெண், கூத்து, நோன்பு, இஞ்சிக்கிழங்கு ஆகிய பல வடிவப் பெயர்களில் வழங்கப்படுகிறது. `பாவை’ என்னும் சொல் 'நோன்பு’ என்ற பொருளில் திருப்பாவையில் வந்துள்ளது. `நாமும் நம் பாவைக்கும் செய்யும் கிரிகைகள்’ என்ற அடியில் பாவை என்பது நோன்பினையே சுட்டுகிறது. இங்கு திருப்பாவை, திருவெம்பாவை இரண்டிலும் இடம்பெற்றுள்ள ஒற்றுமை வேற்றுமைகளைச் சற்று ஆராய்வோம்.
பெயர்க்காரணம்:-
'திருவெம்பாவை' என்பதில் 'திரு' என்பது மேன்மையையும் 'எம்' என்பது உயிரையும் 'பாவை' என்பது வழிபாட்டிற்கு அமைந்த திருவுருவத்தையும் சுட்டின. 'திருப்பாவை' என்பது உவமையாகு பெயரால் பெண்களை உணர்த்தி, பின் அது பொருளாகு பெயராய்ப் பெண்களால் நோற்கப்படும் நோன்பினை உணர்த்தி, பின் அது காரியவாகு பெயராய் அந்நோன்பினைத் தெரிவிக்கும் நூலினை உணர்த்திற்று. எனவே, இது ஒரு மும்மடி ஆகுபெயர்.
பாவைப் பாடல்களின் அமைப்பு:-
இரண்டும் அமைப்பு முறையில் ஒன்றாகவே உள்ளன. மார்கழி மாதத்தில் வைகறைப் பொழுதில் பெண்கள் நீராடச் செல்கின்றனர். ஒவ்வொரு பெண்ணையும் வீடுவீடாகச் சென்று துயில் எழுப்புதல் நாடக பாணியில் அமைந்துள்ளது. அங்ஙனம் எழுப்புங்கால் இறைவனது பெருமையையும், காலைப்பொழுதின் இயல்பையும் வருணிக்கின்றனர். பின் பாவை நோன்பின் சிறப்பு, நோன்பிற்கு வேண்டிய பொருள்கள், நோன்பின் போது புலனடக்கம் வேண்டுமாதலால் நெய், பால், தயிர் போன்றவற்றை உண்ணாது விலக்கல் முதலிய செய்திகளைக் கூறுகிறார்கள்.
கண்ணனையும் சிவனையும் வணங்கித் தங்களுக்கு நல்ல கணவர்கள் வேண்டும் என்றும், மழைபெய்து நாடு வளம் பெருக வேண்டும் என்றும் இறைஞ்சுகிறார்கள். இதுவே, பாவைப் பாடல்களின் பொது அமைப்பு.
இரண்டு பாவைப் பாடல்களிலும் பெண்டிரே இடம்பெறுவர். இவர்கள் ஐந்து வயது முதல் பன்னிரெண்டு வயதுவரை உள்ளவர்கள்.
ஆண்டாள் பாசுரத்தில் இயற்கை வருணணைகள் அதிகம். மணிவாசகரது பாடலில் தத்துவம் அதிகம்.
திருப்பாவை 30 பாடல்களைக் கொண்டது. திருவெம்பாவை 20 பாடல்களைக் கொண்டது.
இரண்டுக்குமுள்ள வேற்றுமைகள்:-
திருப்பாவையில் 'பாவை’ என்ற சொல் மூன்று இடங்களில் வருகின்றது. இச்சொலுக்கு நோன்பு என்பது மூன்றிடங்களிலும் பொருள்.
'வையத்துள் வாழ் வீர்காள்
நாமும் நம் பாவைக்கு’ என்று இரண்டாவது பாட்டிலும்,
'நாங்கள் நம் பாவைக்குச்
சாற்று நீர் ஆடினால்’ என்று மூன்றாவது பாட்டிலும் காணப்படுகிறது.
பாவை நோன்பல்ல, பாவை என்பதற்கே நோன்பு என்று பொருள்.
பதின்மூன்றாவது பாசுரத்தில்
'பிள்ளைகள் எல்லோரும்
பாவைக் களம் புக்கார்’ என்று வருகிறது. பாவைக்களம் என்பது நோன்பு நோற்பதற்காகக் குறிப்பிடப்பட்ட இடம்.
திருவெம்பாவையில் பாவை என்ற சொல் இடையில் வரவே இல்லை. மேலும் நோன்பைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை.
பறையும் பிறவும்:-
பறை என்ற சொல் திருப்பாவையில் பதினோர் இடங்களில் காணப்படுகிறது. 'பறை' என்பதற்கு 'விரும்பிய பொருள்' என்று பலவிடத்தும் பறை 'வாத்தியம்' என்று சிலவிடத்தும் பொருள்கொள்ள வேண்டியிருக்கிறது.
திருப்பாவையில் சிறப்பித்துக் கூறப்படும் பறை என்ற சொல் திருவெம்பாவையில் இடம்பெறவே இல்லை.
நோன்புக்கு வேண்டிய பொருள்கள்:-
'மாலே மணிவண்ணா' என்ற திருப்பாவை 26ஆம் பாசுரம் நோன்பிற்கு வேண்டிய பொருள்கள் பலவற்றை விரித்துப் பேசுகிறது. இரண்டாவது பாசுரம் நோன்புக்குச் செய்யவேண்டிய காரியங்களைக் கூறுகிறது. இருபத்தேழாவது திருப்பாவை ஆடை, அணி, உணவு முதலியவற்றைச் சிறப்பித்துக் கூறுகிறது.
நோன்புக்கு சங்கு, பறை, விளக்கு, கொடி, விதானம், பல்லாண்டு பாடுவோர் இவையெல்லாம் வேண்டும். பாவைநோன்பு நோற்பார் நெய் உண்ணலாகாது; பால் குடித்தல் கூடாது; மை தீட்டல் தகாது; மலர் முடித்தலாகாது; கைவளையும், தோள்வளையும், காதுத்தோடும், நூபுரமும் பிறவும் அணிய வேண்டும். நெய்யில் முழுக்காட்டிய பாற்சோற்றை முழங்கை வழியாக நெய் வழியும்படி சாப்பிடவேண்டும் என்கிறது திருப்பாவை.
இவையெல்லாம் திருவெம்பாவையில் சொல்லப்படவேயில்லை.
இரண்டுக்குமுள்ள ஒற்றுமைகள்:
மார்கழி நீராடல்:-
சங்க இலக்கியங்களில் கூறப்படும் தைந்நீராடலே பாவைப் பாடல்களில் பேசப்படும் மார்கழி நீராடலாகும். திருவெம்பாவைக் கடைசிப்பாட்டு 'மார்கழி நீராடலே ஓர் எம்பாவாய்' என்று முடிகிறது. திருப்பாவை முதற்பாட்டே 'மார்கழித் திங்கள்' என்றே தொடங்குகிறது. மேலும் இரண்டிடங்களில் 'மார்கழி நீராட மகிழந்தேல் ஓர் எம்பாவாய்' என்றும் 'மார்கழி நீராடுவான்' என்றும் கூறுகிறது. எனவே மார்கழி மாதத்து நீராடும் முறையைப் பற்றி, திருப்பாவை, திருவெம்பாவை இரண்டும் ஒருங்கு உரைக்கின்றன.
துயில் எழுப்பல்:-
துயில் எழுப்பல் பற்றி இரு பாவைப் பாடல்களும் பரக்கப் பேசுகின்றன. இவற்றில் இரண்டுக்கும் நிறைந்த ஒற்றுமை இருக்கின்றது.
திருவெம்பாவையில் 'ஆதியும் அந்தமும்' என்று முதற்பாட்டில் இருந்து 'கோழி சிலம்ப' என்ற எட்டாவது பாடல் முடிய உறங்குபவரை எழுப்பும் பாசுரங்களே.
திருப்பாவை 'புள்ளும் சிலம்பினகாண்' என்ற ஆறாவது பாசுரத்தில் இருந்து `எல்லே இளங்கிளியே’ என்ற பதினைந்தாவது பாசுரம் முடிய பத்துப்பாடல்கள் உறங்குபவரை எழுப்பும் பாசுரங்கள். உறங்குபவரை எழுப்பும் முறைகள் இருபாவைப் பாடல்களிலும் மிக நயமாக அமைந்திருக்கின்றன. அப்பாடல்களில் சிறப்பாக நகைச்சுவை ததும்புகிறது.