பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அதிசயங்களும் காமதேனுவின் தல வரலாறும்!

பேரூர் பட்டீஸ்வரர் - Peroor Patteeswarar
பேரூர் பட்டீஸ்வரர் - Peroor Patteeswarar
ஸ்ரீவித்யா பசுபதி

எழுத்தாளர், ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுகதைகள் கவிதைகள் எழுதியுள்ளேன். பதினைந்து தொடர்கதைகள் எழுதியுள்ளேன். மூன்று நூல்கள் வெளியிட்டுள்ளேன். பல சிறுகதைப் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளேன். சராசரி மக்களின் உணர்வுகள் சார்ந்த சிறுகதைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம். புதுமைப்பித்தன் விருது, கி.ஆ.பெ. விஸ்வநாதம் விருது, நம்பிக்கை நாயகி, தமிழினியாள் போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளேன்.

Updated on

திருப்பேரூரில் பட்டீஸ்வரர் ஆலயத்தில் கன்றின் குளம்படித் தழும்பு கொண்ட சிவலிங்கம், தாடை சப்பட்டையான நந்தி, பிறவாப்புளி, இறவாப்பனை, புழுக்காத சாணம் போன்ற அதிசயங்கள் காணப் படுகின்றன. சுந்தரர் வருகையின்போது நாற்று நடும் சிவபெருமானை நந்தி காட்டியதால், தாடையில் அடிபட்டு மாற்றம் ஏற்பட்ட வரலாறும் இத்தலத்தின் பெருமையை விளக்குகிறது; முக்தி தரும் புனிதத் தலமாக போற்றப்படுகிறது.

ஒருமுறை பிரம்மா சிருஷ்டிக்கும் தொழிலை நிறுத்திவிட்டு, சற்று நேரம் கண்ணயர்ந்தார். இதை அறிந்த திருமால் காமதேனுவை அழைத்து, சிவபெருமானை வணங்கி சிருஷ்டி ரகசியத்தை அறிந்து, சிருஷ்டிக்கும் தொழிலைத் தொடங்கும்படி சொன்னார். காமதேனுவும் சிவபெருமானை எண்ணி பல ஆண்டுகள் தவமிருந்தது. ஆனால் சிவனருள் கிடைக்கவில்லை.

இதனை அறிந்த நாரதர் காமதேனுவுக்கு சிவனருள் கிடைக்க வழி சொன்னார்.

“திருக்கைலாயத்திற்கு நிகரான திருத்தலம் தக்ஷிண கைலாயம் எனப்படும் பேரூர் என்று சிவபெருமானே நந்திக்கு உபதேசித்ததை அருகில் இருந்து கேட்ட சுப்ரமண்யர் எனக்குச் சொன்னார்.

அதனால் நான் திருப்பேரூரில் ஓடுகின்ற காஞ்சி நதிக்கரையில் லிங்கப் பிரதிஷ்டை செய்து, தீர்த்தத்தையும் உருவாக்கி அபிஷேகம் செய்து வழிபட்டேன். எனக்கு சிவதரிசனம் கிடைத்தது. அதனால் நீயும் அங்கு சென்று உன் தவத்தைத் தொடர்ந்தால் சிவபெருமானைத் தரிசித்து மகிழலாம்,” என்று சொன்னார் நாரதர்.

காமதேனுவும் தன் கன்றான பட்டியுடன் திருப்பேரூர் வந்து காஞ்சி நதிக்கரையில் புற்றுக்குள் ஆதிலிங்க மூர்த்தியாக இருந்த சிவபெருமானை எண்ணித் தன் தவத்தைத் தொடர்ந்தது. தினமும் புற்றுக்கு பால் அபிஷேகம் செய்து சிவபெருமானை வேண்டித் தவம் செய்தது. ஒரு நாள் அங்குமிங்கும் ஓடித்திரிந்துகொண்டிருந்த பட்டியின் கால்கள் புற்றுக்குள் சிக்கிக்கொண்டன. பட்டியால் காலை எடுக்க இயலவில்லை. அதனால் தன் சிறு கொம்பால் புற்றை நெட்டித் தள்ளி தன் காலை எடுக்க முயற்சி செய்தது.

பேரூர் பட்டீஸ்வரர் - Peroor Patteeswarar
பேரூர் பட்டீஸ்வரர் - Peroor PatteeswararAi Image

அப்போது திடீரென்று புற்றுக்குள் இருந்து ரத்தம் பெருகியது. தவம் கலைந்த காமதேனு பதறியது. புற்று கலைந்து உள்ளே இருந்த சிவலிங்கம் வெளிப்பட்டது. காமதேனு சிவபெருமானை வணங்கி மன்னிப்பு கேட்டது. சிவலிங்கத்தின் திருமுடியில் கன்றின் குளம்படியும், கொம்பால் முட்டிய தடமும் பதிந்துபோயின. காமதேனு இதற்காக மிகவும் வருந்தியது.

“கன்றின் தழும்பை நான் மனதார ஏற்கிறேன். நீ கலங்காதே. கன்றின் குளம்பை சிறிது நேரம் நான் பிடித்து வைத்திருந்ததால், இத்தலம் பட்டிபுரி என்றும், நீ தவம் செய்ததால் காமதேனுபுரம் என்றும் அழைக்கப்படும். இது முக்தித் தலம் என்பதால், நீ விரும்பிய சிருஷ்டி ரகசியத்தை இங்கே உபதேசிக்க இயலாது. திருக்கருகாவூருக்குப் போ. அங்கே சென்று உன் தவத்தைத் தொடர்ந்து, நீ விரும்பியதைப் பெறலாம்,” என்று அருளினார்.

இதையும் படியுங்கள்:
நின்ற கோலத்தில் உருகிய பெருமாள்... இன்றும் இருக்கும் அந்த பாதங்கள்! எங்கே?
பேரூர் பட்டீஸ்வரர் - Peroor Patteeswarar

இந்த நிகழ்வுக்குச் சான்றாக சிவலிங்கத்தின் திருமுடியில் கன்றின் குளம்படித் தழும்பை இப்போதும் காணலாம். இதனாலேயே இத்தல இறைவனுக்கு பட்டீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது. இங்கே இன்னொரு அற்புதத்தையும் காணலாம். இத்தல நந்தி பகவானுக்கு தாடை பட்டையாக இருப்பதையும் காணலாம். அதற்குக் காரணமான வரலாற்றையும் பார்ப்போம்.

ஆனிமாதக் கிருத்திகையில் நாற்று நடும் விழா நடக்கும். அதில் பத்தாம் நாள் விழாவில் சிவபெருமானே நாற்று நடுவார். ஒருமுறை சுந்தரர் பரவை நாச்சியாருடன் சிவபெருமானைக் காண இங்கு வந்தார். அப்போது சிவபெருமான் நாற்று நட்டுக்கொண்டிருந்தார். யாரிடமும் தான் அங்கிருப்பதை தெரிவிக்கவேண்டாம் என்று நந்தியிடம் சொல்லியிருந்தார் சிவபெருமான்.

ஆனால் சுந்தரர் நந்தியிடம் வந்து “சுவாமி எங்கே?” என்று கேட்டதும், அங்கே இருப்பதாக அடையாளம் காட்டினாராம் நந்தி. தன் பேச்சை மீறியதால், பட்டீஸ்வரர் தன் கையிலிருந்த மண்வெட்டியால் அடிக்க, அந்த அடி நந்தியின் தாடையில் பட்டது. அதனால் இத்தல நந்தியின் தாடை சப்பட்டையாக இருப்பதை இப்போதும் காணலாம்.

மிகவும் சிறப்புவாய்ந்த இத்தலத்தில் உள்ள மரங்களும் அதிசயமாக உள்ளன.

பிறவாப்புளி

பட்டீஸ்வரர் ஆலய வளாகத்தில் உள்ள புளியமரம் “பிறவாப்புளி” என்று அழைக்கப்படுகிறது. இந்த புளியமரத்தின் விதைகளை எங்கு போட்டாலும் முளைப்பதில்லை. அதேபோல் இதன் இலைகள் இரவிலும் உறங்குவதில்லை என்கிறார்கள். பிறவா நிலையை இத்தலம் அருளும் என்பதை இது குறிக்கிறது.

இதையும் படியுங்கள்:
உலகின் ஒரே சங்கு வடிவ கோவில்! விஷ்ணு, சிவபெருமானாக மாறிய அதிசய வரலாறு!
பேரூர் பட்டீஸ்வரர் - Peroor Patteeswarar

இறவாப்பனை

இந்த ஆலயம் அருகே உள்ள பனை மரம் பல ஆண்டுகளாக இருக்கிறது. மிகவும் உயரமான இந்த மரத்தை “இறவாப்பனை’ என்கின்றனர்.

புழுக்காத சாணம்

காமதேனு தவம் செய்த தலம் என்பதால், இங்கு வளர்க்கப்படும் மாடுகளின் சாணத்தில் எத்தனை நாட்கள் ஆனாலும் புழுக்கள் வருவதில்லை என்கின்றனர்.

இத்தனை சிறப்புகள் நிறைந்த பேரூர் பட்டீஸ்வரரின் அருளைப் பெற்று மீண்டும் பிறவாநிலை அடைவோம்.

இக்கட்டுரையை வாசிப்பதன் மூலம் கோவை பேரூர் தலத்தின் ஆன்மீகச் சிறப்புகள், அங்கிருக்கும் இயற்கை அதிசயங்கள் மற்றும் பிறவிப் பிணியை அறுக்கும் வழிபாட்டு முறைகளை உணர்ந்து, உங்கள் ஆன்மீக அறிவையும் இறை நம்பிக்கையையும் மேன்மைப்படுத்திக்கொள்ள முடியும்.

logo
Kalki Online
kalkionline.com