சிறுகதை: எறும்பு மனிதர்கள்!

சாதாரண விஷயங்களில் திருப்தியடையாமல் பெரிய இலக்கை அடைவது எப்படி? என சிறு எறும்பின் மூலம் விளக்கும் அருமையான சிறுகதை..
தமிழ் கதைகள் | Guru and Disciple
தமிழ் கதைகள் | Guru and DiscipleImage credit: AI Image
ரெ. ஆத்மநாதன்

எழுத்தாளர் ரெ.ஆத்மநாதன் பொருளாதாரத்திலும், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். கதை, கவிதை, நாடகம் என்று முத்தமிழுக்கும் பணி செய்பவர். கதை, கவிதைகளை மாத,வார, ஆன்லைன் இதழ்களில் எழுதி வருபவர். இவரின் 4 நாடகங்கள் சென்னை, திருச்சி வானொலி நிலையங்களால் ஒலி பரப்பப் பட்டன. இளங்கலை முதலாண்டு மதுரைத் தமிழ்ச்சங்கத் தேர்வில் (1972-73) மாநில முதன்மை பெற்றவர்.பட்டி மன்றம், கவியரங்கம் ஆகியவற்றில் பங்கேற்பவர். அமெச்சூர் நாடகங்களில் நடித்தவர். தமிழக அரசின் மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறையில் ஆராய்ச்சி முன்னவராகச் சேர்ந்து, அத்துறையின் பொறுப்பு இயக்குனராக ஓய்வு பெற்றவர். “தொடர்கதைகளும் முற்றும்” என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டவர்.

Updated on
Deepam strip
Deepam strip

அந்தக் குருகுலத்தில் ஆண்டு விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன. குருகுல மாணவர்கள் அனைவருமே ஆளுக்கொன்றாய் வேலைகளைப் பகிர்ந்து கொண்டு, சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருந்தார்கள்.

பக்கத்துக் கிராமங்களிலுள்ள குருவின் பக்தகோடிகள் அனைவரும் அன்று ஒன்றாய் கூடுவார்கள்.

குரு ஆசி வழங்குவதே அன்றைய நிகழ்ச்சியின் முக்கியமான ஒன்று என்றாலும், ஆட்டம் பாட்டங்களுக்குக் குறைவிருக்காது.

இது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் தொடர் நிகழ்வுதான் என்றாலும், இந்த ஆண்டின் நிகழ்வில் உற்சாகமும், ஊக்கமும் சற்று அதிகமாகவே கொப்பளிக்கச் செய்தது. அதற்குக் காரணம் குருகுலத்தில் புதிதாகச் சேர்ந்த பக்கத்து ஊர்களைச் சேர்ந்த சிலர்தான்! குருவின் அன்பைப் பெறுவதற்கென்றே அவர்கள் அதிக அக்கறையுடன் ஓடியாடி பணிகளைப் பக்குவமாகச் செய்தார்கள்.

குருகுலத்திற்கு வரும் ஊர் மக்களுக்குக் கொடுப்பதற்காக இனிப்பு தயார் செய்யும் பொறுப்பு ரங்கனுடையது. அவன் பக்கத்து ஊர்க்காரன் என்பதால், வருகின்ற தன் ஊர் மக்களைத் திருப்திப் படுத்துவதற்காக, அதிகச் சிரத்தையுடன் லட்டு தயாரித்தான்!

தனது நண்பர்களையும் சேர்த்துக் கொண்டு, பார்த்துப் பார்த்து, அது தயாரிக்க வேண்டிய பொருட்கள் எல்லாவற்றையும் நன்கு சுத்தப்படுத்தி, பாகு பதம் பார்த்து, பக்குவமாய், பக்திச் சிரத்தையுடன் லட்டுகளைப் பிடித்து தாம்பாளத்தில் வைத்தார்கள்.

இதையும் படியுங்கள்:
சனி தோஷத்தால் அவதியா? நளன் கதையை படித்தால் போதும், தோஷம் குறையும்! ஏன் தெரியுமா?
தமிழ் கதைகள் | Guru and Disciple

அப்பொழுதுதான் அவற்றைப் பார்த்தான் ரங்கன்! சுவர் ஓரத்திலிருந்து எறும்புகள் வரிசையாக லட்டுத் தாம்பாளங்களை நோக்கிப் படையெடுத்ததைப் பார்த்ததும் அவனுக்குப் பயம் வந்து விட்டது. லட்டுகளில் எறும்பு ஏறி விட்டால் அதையே ஒரு பெருங்குறையாக யாரேனும் கூறி விட்டால் என்ன செய்வது என்று மனம் மருக ஆரம்பித்தது. இதனைத் தடுப்பது எவ்வாறு என்று அவன் யோசிக்க ஆரம்பித்தான். எந்த உபாயமும் திடீரெனப் புலப்படவில்லை.

லட்டுக்கள் என்றால் எறும்புகளுக்கு உயிரல்லவா? எப்படியும் வந்து விடுமே! நண்பர்களிடமும் என்ன செய்யலாம் என்று ஆலோசித்தான். ஆனாலும் எந்ந நல்ல முடிவையும் அவர்களால் எட்ட முடியவில்லை. சரி!குருவிடமே கேட்டு விட வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்து, குருவின் அறைக்குச் சென்றான்.

குருவோ, விழா ஏற்பாடுகளை மேற்பார்வையிடுவதற்காகச் சென்றிருப்பதாக அங்குள்ளவர்கள் கூற, அவன் அங்கேயே காத்திருந்தான். சிறிது நேரத்திற்குப் பிறகு குரு வர, அவனைக் கண்ட அவர், ”என்ன ரங்கா! லட்டுக்கள் ரெடியாகின்றனவா?” என்றார்.

குருவை வணங்கிய அவன், ”ரெடி பண்ணிக்கிட்டு இருக்கிறோம் குருவே! ஆனால், ஒரு சின்ன சிக்கல்! அதான் உங்களைத் தேடிவந்தோம்!” என்றான்.

“சிக்கலா? என்ன சிக்கல் ரங்கா?” என்ற குருவிடம், அவன் எறும்பு குறித்துக் கூறினான்.

“அட… அவ்வளவுதானே! இது ஒன்றும் பெரிய விஷயமில்லை. விடு ரங்கா!” என்று ஒன்றுமேயில்லாததைப் போல் அவர் பேச, அவனுடைய பயம் ஓரளவுக்குக் குறைந்தது. இருந்தாலும் மனம் முழுதாகத் திருப்தியடையவில்லை.

இதையும் படியுங்கள்:
நீதிக் கதைகள் 2 : சீடர்களின் சந்தேகங்கள்
தமிழ் கதைகள் | Guru and Disciple

குரு அவன் மன நிலையைப் புரிந்து கொண்டு, ”இன்னும் உனக்குத் திருப்தி வரவில்லை அல்லவா? நான் சொல்கிறபடி செய்! லட்டு வைத்திருக்கும் தாம்பாளங்களைச் சுற்றிச் சீனி (வெள்ளைச் சர்க்கரை)யைத் தூவி விடு. எறும்புகள் அந்தச் சீனியிலேயே திருப்தியடைந்து விடும்! உன் லட்டை ஒன்று கூடத் தீண்டாது! சரியா?” என்றதும், அவன் முகத்தில் முழுத்திருப்தி நிலவியது.

தமிழ் கதைகள் | Laddu, sugar and ants
தமிழ் கதைகள் | Laddu, sugar and antsImage credit: AI Image

“சரி குருவே! அவ்வாறே செய்கிறேன்! நன்றி குருவே!” என்றபடி வணங்கி விடைபெற விழைந்த அவனை நோக்கிக் குரு மேலும் சொன்னார்.

“இதில் ஓர் ஆழ்ந்த கருத்தும், மனிதர்களின் மன நிலையைப் பிரதிபலிக்கும் உயர்ந்த தத்துவமும் உள்ளது ரங்கா! சாதாரண வெள்ளைச் சர்க்கரையை விட லட்டு சுவையும் சத்தும் மிகுந்தது. ஆனால் எறும்பானது வெள்ளைச் சர்க்கரையுடனே திருப்தி அடைந்து நின்று விடுகிறது. லட்டுக்குப் போவதில்லை. மனிதர்களாகிய நாமும் அப்படித்தான்.

சீனியில் திருப்தியடைந்து விடும் எறும்பினைப் போல், சாதாரணவற்றுடனே திருப்தி அடைந்து விடுகிறோம். மேலும் உழைத்து முன்னேறினால், அந்த லட்டினைப் போன்ற இனிப்பான வாழ்வு நமக்கும் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
ஆன்மீகக் கதை: முருகன் தரிசன யாத்திரை
தமிழ் கதைகள் | Guru and Disciple

மிகச் சிலரே இந்த நுணுக்கம் உணர்ந்து செயல்பட்டு வாழ்வின் உயரத்தைத் தொடுகிறார்கள். மற்றவர்களோ, சாதாரண எறும்பினைப் போல் லட்டை அடையாமல் சீனியுடனே திருப்தி அடைந்து விடுகிறார்கள். ஆனால் நீங்களனைவரும் லட்டை அடைய முயற்சிக்க வேண்டும். சரியா ரங்கா?” குரு பேசி முடிக்க, ஓர் ஆழ்ந்த தத்துவத்தைப் புரிந்து கொண்ட திருப்தியுடன் திரும்பினான் ரங்கன்!

குரு சொன்னது ரங்கனுக்கு மட்டுமல்ல.. நமக்குந்தானே!

logo
Kalki Online
kalkionline.com