

ஒரு குரு குலத்தில் குருகுல வாசம் முடித்து புறப்பட்டனர் சீடர்கள் சிலர். அவர்கள் தங்கள் குருநாதரை வணங்கி "குருதேவா! தங்களுக்குக் குருதட்சணை தர விரும்புகிறோம். என்ன வேண்டுமோ கேளுங்கள்! எங்களால் இயலாதது எதுவும் இல்லை" என்றனர். பெருமிதத்துடன்.
தன் சீடர்கள் மேலும் பக்குவம் பெற வேண்டும் என்று நினைத்த குரு, "சீடர்களே! நமது குருகுலத்தை ஒட்டி உள்ள காட்டில் இருந்து எதற்கும் பயனற்ற பொருட்கள் சிலவற்றைக் கொண்டு வாருங்கள்" என்றார்.
காட்டுக்குச் சென்ற சீடர்கள் அங்குள்ள காய்ந்த சருகுகளைப் 'பயனற்ற பொருள்' என்று கருதினர். எனவே, தங்களது கூடையில் ஒரு மரத்தடியில் குவிந்திருந்த சருகுகளை அள்ளிப் போடத் தொடங்கினார்கள்.
அப்போது அங்கு வந்த ஒருவன், ''இந்தச் சருகுகள் என்னால் சேகரிக்கப்பட்டவை. இதைச் சாம்பலாக்கி எனது நிலத்துக்கு உரமாகப் போடுவேன். அதனால் பயிர்கள் செழிப்பாக வளரும்'' என்றான்.
சருகுக்கு இப்படி ஒரு பயனா? என்று திகைத்த சீடர்கள் அதை அப்படியே போட்டுவிட்டு, மேலும் காட்டுக்குள் சென்றனர்.
ஓரிடத்தில் மூன்று பெண்கள் உலர்ந்த சருகுகளைப் பொறுக்கிக்கொண்டிருந்தனர். அவர்களிடம் சீடர்கள் எதற்காக இவற்றைப் பொறுக்குகிறீர்கள்? என்று கேட்டனர்.
முதல் பெண்: "இவற்றை எரித்து சமையல் செய்வேன்!" என்றாள்.
இரண்டாவது பெண்: "சருகுகளை இணைத்து பெரிய இலையாக தைத்து விற்பேன்!" என்றாள்.
மூன்றாவது பெண்: "குறிப்பிட்ட ஒரு மரத்தின் மருத்துவக் குணமும் நிறைந்த சருகுகளைச் சேகரித்து, நான் மருந்து தயாரிக்கிறேன்!" என்றாள்.
இதெல்லாம் கேட்ட சீடர்கள் வியந்தனர். பின், மேலும் காட்டுக்குள் முன்னேறிச் சென்று சருகுகள் கிடப்பதைப் பார்த்து அவற்றைச் சேகரித்தனர்.
அப்போது விர்ரெனப் பறந்து வந்த பறவை ஒன்று ஒரே ஒரு சருகை எடுத்துக்கொண்டு பறந்தது.
இந்தச் சருகுகள், கூடு கட்டுவதற்குகூடப் பயன்படுகிறது என்று நினைத்த சீடர்கள், பயனற்ற சருகே கிடைக்காது! என்று ஏமாற்றத்துடன் வந்த வழியே திரும்பினார்கள்.
வழியில் ஒரு குளத்தில் சருகு ஒன்று மிதந்து வந்தது. இதையாவது எடுத்துச் சென்று குருவிடம் கொடுப்போம் என்ற எண்ணத்துடன் அதை எடுப்பதற்காக குனிந்தான் சீடன் ஒருவன். அந்தச் சருகில் இரண்டு எறும்புகள் ஓடிக்கொண்டிருந்தன.
எறும்புகள் நீரில் மூழ்கி சாகாமல் இந்தச் சருகு பாதுகாக்கிறது என்று கருதி அதையும் எடுக்காமல் குருகுலத்திற்குத் திரும்பினர்.
சீடர்களின் முகத்தைக் கவனித்த குரு தனக்குள் புன்னகைத்து ''வாருங்கள், என் அருமையான சீடர்களே.... பயனற்ற பொருளைக் கொண்டு வந்துவிட்டீர்களா?'' என்றார் ஆர்வமாக.
குருவே! பயனற்ற பொருள் என்று உலர்ந்த சருகுகளைக் சேகரிக்க எண்ணினோம். ஆனால், அவை பல வழிகளில் பலருக்கும் பயன்படுகின்றன. பயனற்ற ஒரு சருகைக்கூட இந்தக் காட்டில் எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை! என்றார்கள் வருத்தமாக.
அவர்களிடம் குரு!
"உலர்ந்த சருகே பல வழிகளில் இவ்வாறு பயன்படுமானால் பகுத்தறிவுள்ள மனிதன் உலகத்துக்கு எவ்வளவு பயன்பட வேண்டும்.
பிறருக்கு இன்பம் பயக்கும் எவ்வளவு செயல்களைச் செய்ய வேண்டும். யோசித்துப் பாருங்கள்" என்றார்.
சீடர்கள் அவர் சொன்னதன் பொருளை உணர்ந்தனர்.
எனவே, ''குருவே! உலர்ந்த சருகினால் நல்ல பாடம் கற்றுக்கொண்டோம். இனி நாங்கள் பிறருக்காகவே வாழ்வோம். அதுதான் நாங்கள் உங்களுக்குத் தரும் உண்மையான குரு தட்சினை!" என்று கூறினர்.
குருவும் மகிழ்வுடன் அவர்களை ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார்.