

அன்றைய விடியல் காவேரிப்பாக்கம் கிராமத்திற்கு ஒரு புனிதமான நாளாகத் தொடங்கியது. பக்ரீத் பண்டிகையின் தக்பீர் முழக்கங்கள் மசூதியிலிருந்து காற்றில் மிதந்துவந்தன.
ஆனால், அந்த ஊரின் பெரும் பணக்காரரான ரஹ்மான் ஹாஜியாரின் வீட்டுப் பின்புறத்தில் மட்டும் பக்திக்கு மாறான ஒரு கௌரவப் போட்டியும், அதிகாரத் திமிரும் தாண்டவமாடிக்கொண்டிருந்தது.
ரஹ்மானின் இருபது வயது மகன் இம்ரான், சென்னையில் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு அன்றைய விசேஷத்திற்காக அதிகாலையில்தான் ஊருக்குள் நுழைந்திருந்தான்.
வீடு முழுக்கப் பண்டிகைக்கால உற்சாகம் இருந்தாலும், பக்கத்து வீட்டு ராமச்சந்திரனின் வீட்டில் மட்டும் மாபெரும் சோகம் கவிழ்ந்திருந்தது. ராமச்சந்திரன் தன் வறுமையின் காரணமாக, ரஹ்மானிடம் வட்டிக்குக் கடன் வாங்கியிருந்தார்.
வறட்சியின் காரணமாகத் தவணை தட்டிப்போகவே, முந்தைய நாள் மாலை ரஹ்மான் ஆட்களை அனுப்பி, ராமச்சந்திரன் தன் உயிருக்கு மேலாக வளர்த்துவந்த பசு மாட்டைப் பலவந்தமாகக் கடனுக்காகப் பிடுங்கி வந்திருந்தார்.
அந்தப் பசு மாடுதான் ராமச்சந்திரன் குடும்பத்தின் ஒரே வாழ்வாதாரம்.
தன் வாழ்வாதாரத்தையும், தங்களின் தெய்வமாக நினைத்த பசுவையும் இழந்துவிட்டு, ராமச்சந்திரனின் குடும்பமே வாசலில் அமர்ந்து அழுதுகொண்டிருந்தது.
இதையறிந்த இம்ரான் பதற்றத்துடன் தன் தந்தை ரஹ்மானிடம் ஓடினான்.
"என்ன வாப்பா இது? பக்கத்து வீட்டு அங்கிள் கதறி அழுதுட்டு இருக்காரு. அவர் வீட்டு பசு மாட்டை இப்படி அநியாயமா பிடுங்கிட்டு வந்து கட்டியிருக்கீங்களே? இதுதான் நீங்க அல்லாஹ்வுக்குக் கொடுக்கப் போற குர்பானியா?" என்று இம்ரான் ஆவேசமாகக் கேட்டான்.
ரஹ்மான் தன் கையில் இருந்த பெரிய கத்தியைத் தீவிரமாகச் சாணை பிடித்துக்கொண்டே ஆணவமாகச் சிரித்தார். "வாய மூடுடா இம்ரான்! டவுன்ல படிச்சிட்டு வந்து எனக்கு மார்க்கம் கத்துக் கொடுக்காதே. கடனைத் திருப்பிக் கொடுக்காததால அந்த மாட்டை நான் எடுத்துட்டு வந்தேன்.
இந்த வருஷம் ஊரிலேயே பெரிய மாட்டை நான்தான் குர்பானி கொடுக்கணும்னு எல்லாரும் பேசிக்கணும். அதுக்கு இந்தப் பசு மாடுதான் கச்சிதமா இருக்கும்" என்றார் பணத்திமிருடன்.
விஷயம் காட்டுத்தீயாய் பரவ, அந்த மசூதியின் தலைமை இமாம் ஹஸ்ரத் அவர்கள் நேராக ரஹ்மானின் வீட்டுக்கு விரைந்தார். "ரஹ்மான், நீ செய்யப் போறது மாபெரும் பாவம்! உடனே அந்தப் பசுவை அவிழ்த்து ராமச்சந்திரனிடம் ஒப்படை" என்றார் கண்டிப்பான குரலில்.
ரஹ்மான் இமாமை நிமிர்ந்து பார்த்து, "இமாம் சாப், நான் காசு கொடுத்து, என் கடனுக்குப் பகரமா கொண்டு வந்த மாடு இது. இதில் தலையிட ஜமாஅத்துக்கு எந்த உரிமையும் இல்லை" என்று வறட்டு வாதம் பேசினார்.
இமாம் சற்றும் தளராமல், அங்கிருந்த இளைஞர்களுக்கும் இம்ரானுக்கும் புரியும்படி 'குர்பானி'யின் உண்மையான நோக்கத்தை விளக்கத் தொடங்கினார். "ரஹ்மான்!! 'குர்பானி' என்ற அரபு வார்த்தைக்கு 'நெருக்கம்' அல்லது 'தியாகம்' என்று பொருள். இறைவனுக்காகத் தனக்கு மிகவும் பிடித்தமான, நேசத்துக்குரிய ஒரு பொருளைத் தியாகம் செய்வதுதான் இதன் அடிப்படை. வசதியுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் ஆடு அல்லது மாட்டைப் பலியிட்டு, அதன் இறைச்சியை மூன்று பங்குகளாகப் பிரித்து, ஏழைகளுக்கும் உறவினர்களுக்கும் கொடுக்கவேண்டும் என்பது மார்க்கக் கடமை.
ஆனால், மார்க்கம் என்ன சொல்கிறது தெரியுமா? குர்பானி கொடுக்கப்படும் விலங்கின் இறைச்சியோ, இரத்தமோ இறைவனை அடைவதில்லை; உங்கள் மனதில் இருக்கும் தூய்மையான பக்தி (தக்வா) மட்டுமே இறைவனை அடைகிறது.
அண்டை வீட்டுக்காரன் பசியோடும் வலியோடும் இருக்கும்போது, அவனது வாழ்வாதாரத்தைப் பிடுங்கி, அவனது மனதை வதக்கி நீ கொடுக்கும் குர்பானியை அல்லாஹ் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டான்!" என்று இமாம் இடித்தரைத்தார்
அப்போது அங்கிருந்த ஒரு ஏழைத் தொழிலாளி, "இமாம் சாப்... ரஹ்மான் ஐயா மாதிரி லட்சக்கணக்குல சம்பாதிச்சு, பெரிய மாட்டை வெட்ட எங்ககிட்ட வசதி இல்லை. எங்ககிட்ட காசும் இல்லை, சொந்தமா ஆடும் இல்லை. அப்போ எங்களோட பக்ரீத் கடமை என்ன ஆகுறது?" என்று அப்பாவியாகக் கேட்டார்.
இமாம் அவரைப் பார்த்துப் புன்னகைத்தார். "அப்பா... இஸ்லாமிய விதிகளின்படி, குர்பானி என்பது ஒரு குறிப்பிட்ட அளவு (நிஸாப்) செல்வமும் வசதியும் உள்ளவர்களுக்கு மட்டுமே கடமையாக்கப்பட்ட ஆஎன்ற எந்தக் கட்டாயமும் மார்க்கத்தில் இல்லை. அவர்கள் அன்று புத்தாடை உடுத்தி, பெருநாள் தொழுகையில் பங்கேற்று, மற்றவர்கள் கொடுக்கும் குர்பானி இறைச்சியைப் பெற்றுத் தன் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக உணவருந்தினாலே போதும்.
இறைவனிடம் ஏழைகளின் தூய்மையான எண்ணத்திற்குத்தான் முதலிடம்" என்றார்.
இமாமின் விளக்கத்தைக் கேட்டு ரஹ்மானைத் தவிர அங்கிருந்த எல்லாரும் தலைகுனிந்தனர்
ஆனால், ரஹ்மானின் ஆணவம் அடங்கவில்லை. "யார் என்ன சொன்னாலும் சரி, கத்தி தயாராயிருக்கு. சூரியன் உதிச்சதும் இந்த மாட்டை நான் வெட்டத்தான் போறேன். என்னை யாரும் தடுக்கமுடியாது" என்று அதற்கான ஏற்பாடுகள் செய்ய தொடங்கினார்.
தந்தை சட்டம், மார்க்கம், மனிதநேயம் மூன்றையும் மீறுவதைக் கண்ட இம்ரான், இனி பேசிப் பலனில்லை என்று முடிவெடுத்தான். அவன் சட்டப்படித் தன் கடமையைச் செய்யத் துணிந்தான்.
ரஹ்மான் அதற்கான ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்த வேளையில், அடுத்த சில நிமிடங்களில், "நிறுத்துங்க ரஹ்மான்!" என்ற கம்பீரமான சத்தத்துடன் காவேரிப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் இரண்டு காவலர்களுடன் ரஹ்மானின் வீட்டுக்குள் நுழைந்தார்.
அதிர்ச்சியடைந்த ரஹ்மான், "என்ன இன்ஸ்பெக்டர் சார், பண்டிகை அன்னைக்கு என் வீட்டுக்குள்ள போலீஸோட வர்றீங்க? நல்லதா போச்சு, இருங்க பிரியாணி சாப்பிட்டுப் போங்க" என்றார் தன் பதற்றத்தை மறைத்து.
இன்ஸ்பெக்டர் கறாரான குரலில், "நான் இங்கே பிரியாணி சாப்பிட வரலை ரஹ்மான், உங்களைக் கைது செய்ய வந்திருக்கேன்!" என்றார்.
ரஹ்மான் திடுக்கிட்டார்.
"உங்க சொந்த மகன் இம்ரான்தான் எனக்குப் போன் பண்ணிப் புகார் கொடுத்துள்ளார் தமிழ்நாட்டில் 'தமிழ்நாடு கால்நடைப் பாதுகாப்புச் சட்டம் 1958' (Tamil Nadu Animal Preservation Act, 1958) அமலில் இருக்கிறது உங்களுக்குத் தெரியாதா? இந்தச் சட்டத்தின்படி, தமிழ்நாட்டில் பசு மாடு மற்றும் கன்றுகளை இறைச்சிக்காகவோ அல்லது குர்பானிக்காகவோ வெட்டுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது
சட்டத்தை மீறினால் 3 வருடம் வரை ஜெயில் தண்டனை கிடைக்கும். அதுமட்டுமில்லாமல், ஏழை ராமச்சந்திரனை மிரட்டி, அவனோட வாழ்வாதாரத்தை அநியாயமா பிடுங்கிட்டு வந்திருக்கீங்க. அதனால உங்களை இப்போ கைது செய்றோம்" என்றார்.
ரஹ்மானின் கையில் இருந்த கத்தி நழுவி கீழே விழுந்தது. "பெத்த தகப்பனையே போலீஸ்ல காட்டிக் கொடுத்துட்டியேடா துரோகி!" என்று ரஹ்மான் தன் மகனைப் பார்த்துக் கதறினார்.
இம்ரான் தன் தந்தையின் கைகளைப் பற்றிக் கண்ணீருடன் சொன்னான்: "உங்களை ஜெயிலுக்கு அனுப்பணும்ங்கிறது என் நோக்கமில்லை வாப்பா. ஆனா, பக்கத்து வீட்டு ராமச்சந்திரன் அங்கிள் நமக்கு எவ்வவளோ உதவியிருக்காரு. அவங்க தெய்வமா கும்பிடுற பசுவை நாம வெட்டுனா, அவங்க மனசு எவ்வளவு வலிக்கும்? இமாம் சொன்ன மாதிரி, மத்தவங்க மனசை வலிக்க வச்சு வர்ற புண்ணியம் நமக்குத் தேவையில்லை வாப்பா. உங்க பணத்திமிரும் வறட்டு கௌரவமும் ஒரு பாவத்துக்குக் காரணமாயிடக் கூடாதுன்னுதான் நான் போலீஸைக் கூப்பிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க" என்றான்.
மகனின் பேச்சிலும், இமாமின் வார்த்தைகளிலும் இருந்த உண்மையான மார்க்க நீதியும், மனிதநேயமும் ரஹ்மானின் வறட்டுக் கௌரவத்தை அடித்து நொறுக்கியது. தன் தவற்றை உணர்ந்த ரஹ்மான், இன்ஸ்பெக்டரிடம் தன் பிழையை ஒப்புக்கொண்டு அபராதத் தொகையைக் கட்டச் சம்மதித்தார்.
பின்னர், இன்ஸ்பெக்டர் முன் அவரே நேராகச் சென்று அந்தப் பசு மாட்டை அவிழ்த்து, பக்கத்து வீட்டு ராமச்சந்திரனிடம் ஒப்படைத்தார்.
ராமச்சந்திரனின் கைகளைப் பிடித்து, "என்னை மன்னிச்சிடு ராமு..." என்று கண்ணீர் வடித்தார். ராமச்சந்திரன் நெகிழ்ந்துபோய் ரஹ்மானைக் கட்டியணைத்துக் கொண்டான்
“சார் எங்க வாப்பா தன் தவறை உணர்ந்துவிட்டார். பசு மாட்டையும் திருப்பி கொடுத்துவிட்டார். என் புகாரை வாபஸ் வாங்கிக்கொள்கிறேன்” என்றான் இம்ரான்.
அன்று காவேரிப்பாக்கம் கிராமத்தில் எந்த மிருகமும் பலியிடப்படவில்லை. ஆனால், ரஹ்மானின் மனதில் இருந்த 'ஆணவமும் பணத்திமிரும்' பலியிடப்பட்டிருந்தது. ராமச்சந்திரனின் குடும்பமும், ரஹ்மானின் குடும்பமும் ஒன்றாக அமர்ந்து பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருக்க, இம்ரான் மசூதியைப் பார்த்துக் கைகூப்பினான். அன்றுதான் அந்த ஊரில் அல்லாஹ் ஏற்கும் 'உண்மையான தியாகமும், குர்பானியும்' நிறைவேறியதாக அங்கிருந்த அனைவருக்கும் தோன்றியது!