காந்தி தாத்தாவின் சுவாரஸ்யமான இளமைப் பருவ ரகசியங்கள்!

காந்தி தாத்தா பிறந்த நாள் (அக்டோபர் 2-ந் தேதி) முன்னிட்டு காந்தி தாத்தாவின் சுவாரஸ்யமான இளமைப் பருவ ரகசியங்கள்!
மகாத்மா காந்தி | Mahatma Gandhi
மகாத்மா காந்தி | Mahatma GandhiImage credit: Gemini AI
ஆர்.ஜெயலட்சுமி

ஆர். ஜெயலட்சுமி திருநெல்வேலி ஊர்.மங்கையர் மலரின் முப்பது வருட வாசகியும் எழுத்தாளரும் நான். எனது அம்மா முதலில் மங்கையர் மலரில் எழுதி வந்தவர் அதை தொடர்ந்து நானும் எழுதுகிறேன்

Updated on: 

குட்டீஸ்களா காந்தி தாத்தா உங்களுக்கு மிகவும் பிடித்தவர் தானே அந்த காந்தி தாத்தாவிற்கு பிறந்த நாள் என்று வருகிறது தெரியுமா? அக்டோபர் இரண்டாம் தேதி தான். 

காந்தி தாத்தா உங்களை மாதிரி சிறுவராக இருந்த பொழுது அவரின் உன்னதமான சில செயல்களை நாம் இப்பொழுது பார்ப்போமா! 

காந்தி தாத்தா வைஷ்ணவ குடும்பத்தில் பிறந்தவர். உணவு விஷயத்தில் அவர்களது குடும்பம் சுத்த சைவம். ஆனால் காந்திஜியும் அவரது அண்ணனும் வீட்டிற்கு தெரியாமல் மாமிச உணவை சாப்பிட ஆரம்பித்தனர். அப்போது காந்திஜிக்கு வயது பதினைந்து கடையில் மாமிச உணவை வாங்கி சாப்பிட்டதால் அவரது அண்ணன் இருபத்தைந்து ரூபாய் கடன் பட்டிருந்தார். இந்த கடனை எப்படி அடைப்பது? உடனே ஒரு திட்டம் தீட்டப்பட்டது. வீட்டில் இருந்த தங்கக்காப்பில் இருந்து ஒரு சிறு பகுதியை வெட்டி விற்று விடுவது என்றும் அதன் மூலம் கடனை அடைப்பது என்றும் இருவரும் முடிவு செய்தனர். அதன்படி தங்க காப்பை வெட்டி கடனும் அடைக்கப்பட்டது.

ஆனால் தான் செய்தது எவ்வளவு பெரிய குற்றம் என்ற எண்ணம் எழுந்ததும் காந்திஜியால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. பெற்றோருக்கு துரோகம் செய்வதும் திருடுவதும் மாபெரும் பாவங்கள் என்று நினைத்த காந்திஜி உடனடியாக அதற்கான தண்டனையை அடைய விரும்பினார்.

தான் செய்த குற்றத்தை தந்தையிடம் ஒப்புக்கொண்டு விடுவது என்றும் அவர் தனக்கு எவ்வளவு பெரிய தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வது என்று முடிவு செய்தார் காந்திஜி.

ஆனால், தந்தையுடன் சென்றபோது காந்திஜியின் வாயிலிருந்து வார்த்தைகள் வராமல் தொண்டைக்கே திரும்பி போய்விட்டன. நாக்கு அசைய மறுத்தது அடம்பிடித்தது. உடனே ஒரு காகிதத்தில் தான் செய்த தவறுகளை கொஞ்சம் கூட குறைக்காமல் அப்படியே எழுதியதுடன் தான் செய்த குற்றங்களுக்கு ஏற்ற தண்டனையையும் தரும்படி தந்தையாரிடம் கேட்டுக் கொண்டிருந்தார். தான் எழுதிய கடிதத்தை நோய்வாய்ப்பட்டு படுத்திருந்த தன் தந்தையிடம் தந்து விட்டு மௌனமாக அவரது காலடியில் உட்கார்ந்து விட்டார் காந்திஜி. ஆனால் கடிதத்தை படித்த காந்திஜியின் தந்தையோ காந்தியை ஒரு அடி கூட அடிக்கவில்லை; ஒரு திட்டுக் கூட திட்டவில்லை; மாறாக காந்தி செய்த தவறுக்காக கண்ணீர் விட்டு அழுதார்.

இதை பார்த்து இளம் காந்திஜியின் கண்களும் கண்ணீர் சிந்தின. தான் செய்த தவறு தானே தன் தந்தை இதயத்தின் நோகச் செய்தது என்று நினைத்த காந்திஜி இனி ஒருபோதும் திருட்டுத்தனமோ ஏமாற்றும் வேலையோ செய்வதில்லை என்று மனதிற்குள் சத்தியம் செய்தார். சிறு வயதில் தவறு  செய்வது எல்லோருக்கும் இயல்புதான். ஆனால் தான் செய்த தவற்றை தைரியமாக ஒப்புக் கொள்வதும் மீண்டும்அந்த தவற்றை செய்யாமல் இருக்கும் உறுதியும் பெறுவது காந்திஜிக்கு மட்டுமே சாத்தியம்.

*********

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: நான்கு திருடர்களும் ஒரு கிழவியும்!
மகாத்மா காந்தி | Mahatma Gandhi

ஏழாவது வகுப்பிலே அந்த சிறுவன் படித்துக் கொண்டிருந்தான். அவன் பார்ப்பதற்கு மிகவும் வேடிக்கையாக இருப்பான். உடம்பு துரும்பு போல் இருக்கும். காது அகலமாய் இருக்கும். ஆகையால் மற்ற மாணவர்கள் அவனை அடிக்கடி கேலி செய்வார்கள். இதனால் அவன் யாருடனும் சேரமாட்டான் கூடுமானவரை ஒதுங்கியே இருப்பான். அவன் படித்த பள்ளியில் தினசரி மாலை வேளையில் தேகப் பயிற்சி வகுப்பு நடக்கும் அந்த வகுப்பிற்கு ஒவ்வொரு பையனும் கட்டாயம் வரவேண்டும் இல்லாவிட்டால் தலைமை ஆசிரியர் சும்மா விடமாட்டார்.

அவர் மிகவும் கண்டிப்பானவர் சனிக்கிழமை காலையில் மட்டும் தான் பள்ளிக்கூடம் உண்டு பிற்பகலில் கிடையாது. ஆனால் அன்று கூட மாலையில் தேகப் பயிற்சி வகுப்பு உண்டு எல்லாரும் சரியாக நாலு மணிக்கு அங்கு வந்து விட வேண்டும். அன்று சனிக்கிழமை அந்த சிறுவனின் அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. காலையில் பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் அவன் அப்பாவுக்கு ஒத்தாசையாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.

அன்று மேகங்கள் சூரியனை மறைத்துக் கொண்டிருந்ததால் நேரம் தெரியவில்லை அவனிடம் அப்பொழுது கடிகாரமும் இல்லை மணி நாலுக்கு மேலாகிவிட்டது. ஆனாலும் அவன் இன்னும் நேரமாகவில்லை என்று நினைத்துக் கொண்டே. சாவதானமாக பள்ளிக்கு புறப்பட்டான். பள்ளியை நெருங்கியதும் அவன் திடுக்கிட்டான். ஏன்? தேகப் பயிற்சி வகுப்பு முடிந்து எல்லா பிள்ளைகளும் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். பாவம் அந்த சிறுவன் ஏமாற்றத்துடன் வீடு வந்து சேர்ந்தான். மறுநாள் தலைமை ஆசிரியர் அந்த சிறுவனிடம் நேற்று ஏன் தேக பயிற்சி வகுப்பிற்கு  வரவில்லை என்று கேட்டார். அவன் நடந்ததை நடந்தபடி கூறினான். ஆனால் அவன் பேச்சை தலைமை ஆசிரியர் நம்பவில்லை. ஓர் அணாவோ இரண்டணாவோ அபராதம் விதித்தார்.

ஐயோ அபராதம் கட்ட வேண்டுமே என்று அந்த சிறுவன் கவலைப்படவில்லை. ஐயோ தலைமை ஆசிரியர் நான் பொய் சொல்கிறேன் என்றல்லவா நினைத்து விட்டார் என்றுதான் எண்ணி வருந்தினான். உடனே அவனுக்கு அழுகை வந்துவிட்டது. நான் கவனக்குறைவாக இருந்ததால் தானே இப்படியாகிவிட்டது? ஒருவன் உண்மை பேசி விட்டால் மட்டும் போதுமா? போதாது கவனமாகவும் இருக்க வேண்டும் என்று தனக்குத்தானே கூறிக்கொண்டான். அன்று சிறு பையனாக இருந்தவன் பிற்காலத்தில் பெரிய மகாத்மா ஆகிவிட்டான். அஹிம்சா மூர்த்தி சத்திய சீலர் இந்தியரின் தந்தை என்றெல்லாம் உலகம் போற்றும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் இளமையில் நடந்ததுதான் இந்த மேலே கூறப்பட்ட நிகழ்ச்சி.

********

வங்காளத்தின் சுற்று பயணம் செய்தபோது  சாத்பூருக்கு வந்தார் காந்திஜி. அந்த கிராமத்து பள்ளியை பார்வையிட்டார். சிறுவர்களிடம் வேடிக்கையாக பேசினார். அப்பொழுது உங்களில் யார் சுறுசுறுப்புள்ளவன் அவன் முன்னே வரலாம் என்றார் காந்திஜி. ஐந்து சிறுவர்கள் முன்னே வந்தனர். உங்களில் முரடன் யார்? அவன் முன்னே வரலாம் என்றார் காந்திஜி.

எல்லா சிறுவர்களுமே நின்றுவிட்டனர். அவர்களை பார்த்து உங்களில் முரடன் யார் என்று கேட்டார்.

ஒரு மாணவன் நின்று கொண்டிருந்தான். அவனிடம் நீ பெரிய முரடன் என்பது எவ்வாறு என்று கேட்டார் காந்திஜி.

நான் மரத்தில் ஏறுகிறேன் ஓடுகிறேன் என்று பதிலளித்தான் அவன். பிறகு காந்திஜியின் எவ்வளவு நூற்கிறாய் என்று கேட்டார் .

எனக்கு நூற்கவே தெரியாது என்றான் அவன்.

சரி போ.. நீ சுறுசுறுப்பில் தோற்றுவிட்டாய் என்று அவனை அனுப்பிவிட்டார்.

பிறகு சிறுவர்களின் பக்கம் திரும்பி உங்களில் முட்டாள் யார்?என்று கேட்டார்.

ஒரு பையன் நின்றான் அவனிடம் நீ முட்டாளா எவ்விதம்? என்று கேட்டார்?

மகாத்மா காந்தி | Mahatma Gandhi
மகாத்மா காந்தி | Mahatma Gandhi

எனக்கு மிகுந்த அறிவு இல்லை நான் அதிகம் படிப்பதும் இல்லை என்று பதில் சொன்னான். எவ்வளவு நூற்பாய் என்று காந்திஜி கேட்டார்.

நூற்கிறேன் அதுவும் அவ்வளவு அதிகமாக நூற்பதில்லை. ஒரு மணி நேரத்தில் ஐம்பது அல்லது அறுபது கெஜம் தான் நூற்கிறேன்.

ஓடுகிறாயா? என்று கேட்டார் காந்தியடிகள்.

இல்லை என்றான் அவன்.

நீ குதித்து விளையாடுகிறாயா என்று கேட்டார் காந்தியடிகள்.

ஆமாம் என்றான் அவன்.

தைக்கத் தெரியுமா? என்றார் காந்தியடிகள்.

கொஞ்சம் கொஞ்சம் என்றான் அவன்.

பிறகு எல்லா மாணவர்களையும் ஒன்று கூட்டி பேசினார் சுறுசுறுப்புள்ள மாணவன் என்பதற்கு என்னுடைய விளக்கத்தை கேளுங்கள். நன்றாக ஓடுபவன், விளையாடுபவன், ஆடுபவன், குதிப்பவன் எல்லோரும் சுறுசுறுப்பு உள்ளவர்கள் தான்.

ஆனால் நன்றாக நூற்கத் தெரிந்தவனும் எல்லா வேலைகளிலும் முதன்மையானவனுமே உண்மையாக சுறுசுறுப்பு உள்ளவன். நன்றாக ஆங்கிலம் அறிந்தவனை நான் சுறுசுறுப்பானவன் என்று கூற மாட்டேன். ஆனால் எவன் நூற்கத் தெரிந்தவனோ அவனைத்தான் சுறுசுறுப்பானவன் என்பேன். ஏனென்றால் அவன் எப்படி நூற்க வேண்டும் என்று அறிகிறான்.

நூற்பதால் பாரத நாட்டின் வறுமை ஒழியும் என்று உணர்கிறான். அவன் தன் முன்னால் கடிகாரத்தை வைத்து குறித்த நேரத்தில் எவ்வளவு நூற்கலாம் என்றும் சிந்திக்கிறான். பிறருடன் தன்னை ஒப்பிட்டுப் பார்க்கிறான். மற்றவர்கள் எழுநூறு கெஜம் நூற்றுவிட்டால் இவன் எழுநூற்றைம்பது கெஜம் நூற்பதற்கு தேவையான ஆற்றலை ஆண்டவனிடம் கேட்பான். கடைசியில் எழுநூற்றைம்பது கெஜம் நூற்ற பின்னரே மன நிறைவு கொள்வான்.

இப்பொழுது முரடன் என்பவனைப் பற்றி பேசலாம் முரடர்களுக்கு என்றுமே திருப்தி இருக்காது. எழுநூற்றைம்பது கெஜம் நூல் நூற்ற  பிறகும் இன்னும் நூற்க்க வேண்டும் என்று நினைப்பான் நான் முன்னேறுகிறேன் என்றும் சொல்லுவான்.

முரடர்களும் சுறுசுறுப்பானவர்களும் இரு வகையினரும் நல்லவர்களே முரடர்களிடத்தில் பணிவும் இந்த சுறுசுறுப்பானவர்களிடத்தில் பணிவும் வேண்டும். சுறுசுறுப்புள்ளவன் முன்னேறுவான்; முரடன் முன்னேற முயல்வான் இருவரும் பாரத நாட்டிற்காக சேவை செய்ய உழைப்பார்கள்.

அவர்களிடம் தன்னலம் இருக்காது. அவர்களை எப்பொழுதும் பிரம்மசரிய த்தை கடைபிடிப்பார்கள். கருணை நிரம்பியவராய் இருப்பார்கள். உடன் இருப்பவர்களுக்கு சேவை செய்பவர்கள். தாய் தந்தையர் இடத்தில் பற்றுள்ளவர்களாய் இருப்பார்கள். இத்தகையவர்களைத்தான் நான் முரடன் என்றும் சுறுசுறுப்பானவன் என்றும் சொல்கிறேன் நீங்களும் இந்த மாதிரி இருங்கள் என்று நீண்ட சொற்பொழிவு ஆற்றி சிறுவர்களுக்கு அறிவுரை கூறினார்.

********

காந்திஜிக்கு அப்பொழுது வயது ஏழு ராஜ்கோட்டில் தன் பெற்றோர்களுடன் வசித்து வந்தான். காந்திஜியின் வீட்டிற்கு அருகில் ஒரு பாழடைந்த கிருஷ்ணன் கோவில் இருந்தது. அந்த கோவில் எப்பொழுது பார்த்தாலும் ஒரே இருட்டாக இருக்கும். வௌவால்கள் 'சர் சர்' என்று அங்கும் இங்கும் பறக்கும்.. பகலில் கூட கோட்டான்கள் கத்தும்.

இதனால் அந்த கோவில் வழியாக தனியாக செல்ல காந்திஜி மிகவும் பயப்படுவார். காந்திஜி இருட்டைக் கண்டு பயப்படுவதை பார்த்த தாதி ரம்பா காந்திஜியின் அச்சத்தை போக்கிட முடிவு செய்தார்.

ஒருநாள் அந்த கோவில் வழியாக காந்திஜியும் தாதி ரம்பாவும் வந்து கொண்டிருந்த பொழுது தாதி ரம்பா வாழ்க்கையில் எதற்காகவும் அச்சப்படக்கூடாது; ஒருவேளை இருட்டை பார்க்கும் பொழுது உனக்கு பயமாக இருந்தால் உடனே மனத்திற்குள் 'ஹரே ராம் ஹரே ராம்' என்று சொல்ல ஆரம்பித்து விடு; பயம் விலகி துணிவு பிறந்து விடும் என்று காந்திஜிவிடம் கூறினார். அன்றிலிருந்து காந்திஜி தனியாக செல்ல நேரும்போது எல்லாம் 'ஹரே ராம் ஹரே ராம்' என்று கூறியபடியே செல்ல ஆரம்பித்தார். ராமரின் பெயரை சொன்னதும் காந்திஜியின் மனதில் இருந்த அச்சம் விலகி துணிவு பிறந்தது. 'ஹரே ராம்' என்ற வார்த்தை காந்திஜியின் உயிரோடும் உடலோடும் கலந்து விட்டது...

*******

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: காக்கைகளின் நல் உதவி!
மகாத்மா காந்தி | Mahatma Gandhi

சபர்மதி ஆற்றங்கரையிலே எளிமையும் எழிலும் நிறைந்த ஒரு ஆசிரமம். ஆசிரமத்தின் வாசலை ஒட்டிய திண்ணையின் மீது என்னவோ ஒரு புத்தகத்தை கண்ணும் கருத்துமாக படித்துக் கொண்டிருந்தார் முனிவர். சற்று நேரத்திற்கு பின்பு பாபுஜி என்று ஒரு இனிய மழலை குரல் பரபரப்புடன் எழும்பியது. படித்துக் கொண்டிருந்த மகாத்மா திடுக்கிட்டார். யாரது என்று கேட்டவாறே நிமிர்ந்து பார்த்தார்.

கையெட்டும் தொலைவில் மிடுக்காக நின்று கொண்டு இருந்தாள் ஒரு சிறுமி. அவள் முனிவரையே வெறிக்க பார்த்தவாறு பதுமையாக நின்றாள். ஞானி முகத்தில் புன்னகை மிளிர்ந்தது குழந்தாய் ஏன் முறைத்துக் கொண்டு இருக்கிறாய் என்ன நடந்தது என்று கனிவுடன் கேட்டவரே, அந்தச் சிறுமியை அருகில் அழைத்து அவளின் முதுகை அன்புடன் வருடினார். ஓரிரு வினாடிகள் மௌனமாய் இருந்த சிறுமி சட்டென்று முனிவரை ஏறிட்டு பார்த்து கேட்டாள். பாபுஜி பொய் சொல்லலாமா, உடனே அது கூடாது பொய் பேசவே கூடாது; பொய் பேசுவது மகா பாவம் என்று நெஞ்சு பதைக்க கூறினார் மகான்.

பொய் பேசுவது மகாபாவம் என்பதை தாங்கள் அறிந்து வைத்திருக்கிறீர்கள் நான் தெரிந்து கொண்டிருக்கிறேன். ஆனால் பாபுஜி அந்த தொண்டருக்கு அதை புரிந்து கொள்ள முடியவில்லை என்று அங்கலாயித்தாள் சிறுமி. எந்த தொண்டர் அவர் அவர் எங்கு இருக்கிறார்; அவர் பொய் சொன்னாரா என்று ஏதும் விளங்காமல் பொறுமையுடன் கேட்டார் மகாத்மா பாபுஜி.

அந்த தொண்டர் நமது ஆசிரமத்தில் தான் பணியாற்றுகிறார். சற்று நேரத்திற்கு முன்னே அவர் என்னிடம் பொய் பேசினார். என்னை ஏமாற்றினார் வாருங்கள் அந்த மனிதரை காட்டுகிறேன் என்று ஏதேதோ கூறியவரே மகானின் கையை பிடித்து இழுத்தாள் சிறுமி.

குழந்தாய் பொறு  அந்த தொண்டரை அப்புறம் விசாரிக்கெல்லாம் என்று ஆதூரமாய் கூறி சிறுமியை தேற்றினார் மகாத்மா.

அன்று மாலை பிரார்த்தனை முடிந்ததும் தனிமையான இடத்தில் வந்து அமைதியாக அமர்ந்தார் ஞானி. சற்று நேரம் கழித்து ஒரு இளைஞரை அழைத்துக் கொண்டு வந்தாள் சிறுமி. மகாத்மாவை அணுகி பாபுஜி என்னை பொய் சொல்லி ஏமாற்றிய அந்த தொண்டர் இவர்தான் என்றாள்.

கருணை வடிவான மகாத்மா அந்த தொண்டரை அன்புடன் நோக்கினார். அன்பரே இந்த சிறுமி என்னவோ சொல்கிறாளே என்ன நடந்தது என்று பரிவுடன் வினவினார். பாபுஜி காலையில் நோயாளிகளுக்கு தருவதற்கு என்று ஒரு எலுமிச்சம்பழம் கொண்டு வந்தேன்.

அதை இந்த சிறுமி தனக்கு வேண்டும் என கேட்டாள். நான் அந்த பழத்தை ஆற்றில் எறிவது போல போக்கு காட்டி பழத்தை ஆற்றில் எறிந்து வட்டேன் என்றேன். ஆனால் எனது சட்டை பையில் பதுக்கி வைத்திருந்த எலுமிச்சம்பழத்தை இந்த சிறுமி எவ்வாறோ பார்த்துவிட்டாள் அதனால்.. என்று புன்னகையுடன் கூறி நிறுத்தினார்.

இதையும் படியுங்கள்:
தெனாலிராமன் விகட கதை: அரசகுருவின் கலக்கம்!
மகாத்மா காந்தி | Mahatma Gandhi

அந்த தொண்டர் உடனே மகாத்மா ஒன்று, இரண்டு வினாடிகள் மௌனமாய் இருந்த பின்பு கனிவும் கண்டிப்புமாய் கூறினார். அன்பரே இனிமேல் சிறுவர் சிறுமியரிடம் பழகும் போது விளையாட்டுக்காகவும் பொய் சொல்ல பேச வேண்டாம். சத்திய திருவடியான காந்தி மகானின் பொறுப்பு மிக்க மணி மொழியை கேட்டு அந்த தொண்டர் உள்ளம் உருகி அசைவற்று நின்றார்..

********

என்ன குட்டீஸ்களா! காந்தி மகான்  சிறுவர்களாகிய நீங்கள் எப்பொழுதுமே உண்மை மட்டுமே பேச வேண்டும். பொய் பேசக்கூடாது. சிறுவர்களிடமும் நாம் பெரியவர்கள் பொய் கூறக்கூடாது என எவ்வளவு அன்பாக அழகாக கூறியிருக்கிறார் பார்த்தீர்களா..

நீங்களும் இருட்டைக் கண்டு பயப்பட வேண்டாம் பயந்தால் இது போல் ஹே ராம் என்று கூறிக் கொள்ளுங்கள். ராமர் உங்களுக்கு துணை இருப்பார். காந்தி தாத்தாவுக்கு மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர் யார் தெரியுமா? காந்தி மகான் சாந்தி நிகேதனுக்குச் சென்ற பொழுது ரவீந்திரநாத்தாகூருக்கு நமஸ்தே குருதேவ் என்று வணக்கம் கூறினார். தாகூர் தன்னிச்சையாக நான் குருதேவ் என்றால் நீங்கள் மகாத்மா என்று பதில் அளித்தார்.

இதுவே பின்னர் காந்திஜியின் அடைமொழியாக மாறியது. நமது இந்திய நாடு சுதந்திரம் அடைவதற்காக அகிம்சை வழியில் அயராது பாடுபட்டு உழைத்து நமக்கெல்லாம் சுதந்திரம் வாங்கி கொடுத்தார். காந்தி தாத்தா அந்த காந்தி தாத்தாவின் பிறந்த நாள்தான் அக்டோபர் இரண்டாம் தேதி .குட்டீஸ்களா நீங்கள் காந்தி தாத்தாவின் பிறந்தநாளை மகிழ்வுடன் கொண்டாடி உங்களின் சொந்த தாத்தாவாக காந்தி தாத்தாவை நினைத்து பிறந்த நாளை கொண்டாடி மகிழுங்கள்!

logo
Kalki Online
kalkionline.com