

குட்டீஸ்களா! பிள்ளையார் எறும்பு துறு துறுவென சுறுசுறுப்புடன் ஊர்ந்து போவதை பார்த்திருப்பீர்கள் அந்த பிள்ளையார் எறும்பு பிறந்ததற்கு ஒரு கதை இருக்கிறது தெரியுமா?
உங்கள் வீட்டில் நீங்கள் விரும்பி சாப்பிடும் சர்க்கரை டப்பாவில் அதை சாப்பிடுவதற்காக வரிசையாக பிள்ளையார் எறும்புகள் வருவதை பார்த்திருப்பீர்கள்..
அப்படி இல்லாவிட்டால் சில இடங்களில் மொத்தமாக கூட்டமாக வரிசையாக கூட்டமாக வரிசையாக செல்லும். அதை பார்த்துவிட்டு உங்கள் அம்மா, 'நாம பிள்ளையாருக்கு ஏதாவது வேண்டிகிட்டா பிள்ளையார் எறும்பு வந்து நமக்கு ஞாபகப்படுத்தும்' என்று சொல்வார்கள் இல்லையா? அந்த பிள்ளையார் எறும்பு பிறந்த கதையை நாம இப்ப பார்ப்போமா !
முப்பத்து முக்கோடி தேவர்கள் முதல் ஓரறிவு கொண்ட உயிரினங்கள் வரை எல்லா ஜீவன்களுக்கும் படி அளப்பவர் நமது சிவபெருமான் தான். இதை அறியாதவங்களா பார்வதி தேவி. ஆனாலும், அவங்களுக்கு இந்த தொழிலை சிவபெருமான் சரிவர கவனிக்கிறாரா என்று சந்தேகம் வந்தது.
அதற்கு தீர்வு காண முயற்சி பண்ணிய பார்வதி தேவி, சிறு பாத்திரம் ஒன்றை எடுத்து வந்து அதற்குள் கறுப்பு எறும்புகள் சிலவற்றை பிடித்து போட்டு மூடி விட்டார்கள். இந்த எறும்புகளுக்கு சிவபெருமான் எப்படி உணவளிக்கிறார் பார்த்து விடுவோம் என்பது பார்வதி தேவியின் எண்ணம். மறுநாள், "சுவாமி நேற்று நீங்கள் எல்லா ஜீவராசிகளுக்கும் படி அளந்து விட்டீர்களா?" என்று சிவபெருமானிடம் கேட்கிறாள் பார்வதி தேவி.
பார்வதி தேவி தன்னோடு விளையாடுகிறாள் என்று சிவபெருமானுக்கு புரிந்து விட்டது. ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், "இதில் என்ன சந்தேகம் பாத்திரத்தில் நீ சிறை வைத்த எறும்புகளை பார்த்திருந்தால் இந்த கேள்விக்கே இடம் இருந்து இருக்காது" என்றார். உடனே பார்வதி தேவி ஓடோடி சென்று பாத்திரத்தை திறந்து பார்த்தாள். அடடா சுறுசுறுப்புடன் சுற்றிக் கொண்டிருந்தன எறும்புகள். அத்துடன் சில அன்னப் பருக்கை அதாவது சாதமும் கிடந்தன.
"ச்சே வீணாகா சுவாமியை சந்தேகப்பட்டு விட்டோமே" என்று வருத்தம் அடைந்தாள் பார்வதி தேவி. "பார்வதி தேவி உனது ஐயம் விலகியதா?" குறும்பாக கேட்டார் சிவபெருமான். "சரி.. சரி.. விநாயகன் உன்னை தேடிக் கொண்டிருந்தான்.
போய் பார்" என்றார். விநாயகரை சந்தித்த பார்வதி தேவி அதிர்ந்து போனாள். ஒட்டிய வயிறும் வாடிய முகத்துடனும் இருந்தார்.
"ஏனம்மா இப்படி பார்க்கிறீர்கள்? எல்லாவற்றுக்கும் தாங்கள் தான் காரணம்" என்றார் விநாயகர்.
"என்ன சொல்கிறாய நீ?" படபடப்புடன் கேட்டாள் பார்வதி தேவி.
"அன்னையே அகிலம் ஆளும் சிவபெருமானின் நித்திய தர்ம பரிபாலனத்தில் சந்தேகம் கொண்டது தாங்கள் செய்த முதல் தப்பு. அடுத்தது அப்பாவி எறும்புகளை பட்டினி போடும் விதம் சிறையிட்டது. தாயின் பழி தனயனைத் தானே சேரும். எனவே எறும்புகளின் பசியை நான் ஏற்றுக் கொண்டு தாங்கள் எனக்கு அளித்த சாதத்தை எறும்புகளுக்கு கொடுத்தேன். பட்டினி கிடந்ததால் எனது வயிறு சிறுத்து போய்விட்டது" சொன்னார் விநாயகர்.
பார்வதி தேவி கண்கலங்கினாள் விநாயகரை அழைத்துக் கொண்டு சிவபெருமானிடம் சென்ற பார்வதி தேவி, "என்னை மன்னியுங்கள்! நான் செய்த தவறுக்கு என் மகனை வதைக்க வேண்டாம்!" என்று வேண்டினாள்.
"வருந்ததே தேவி..! பக்தர்கள் என் பால் வைக்கும் நம்பிக்கை சற்றும் குறைவில்லாதாக இருக்க வேண்டும். அந்த நம்பிக்கைக்கு இணையானது பூஜையோ வழிபாடோ கிடையாது.
இதை உலக மக்களுக்கு உணர்த்த நடந்த திருவிளையாடலே இது. அன்னபூரணியான நீ உன் பிள்ளைகளுக்கு அன்னம் அளித்தாய். அவன் அதை எறும்புகளுக்கு வழங்கினான். பிள்ளையாரின் பெருமையை போற்றும் வகையில் அவை இனி பிள்ளையார் எறும்புகள் என்று அழைக்கப்படும்" என்று அருளினார்.
சிவபெருமான் பிறகு பார்வதி தேவியிடம், "எறும்பு சாப்பிட்டது போக மீதமுள்ள சாதத்தை விநாயகருக்கு கொடு" என்றார். அப்படியே செய்தாள் பார்வதி தேவி. அந்த சாத பருக்கைகளை உண்ட விநாயகரின் வயிறு பழைய நிலைக்கு திரும்பியதுடன் அவரது பசியும் தீர்ந்தது.
இப்படித்தான் பிள்ளையார் எறும்பு பிறந்த கதை. பிள்ளையார் எறும்பு துரு துருவென்று ஓடும் அல்லவா? அதன் மூக்கில் சிறு தேங்காய் துருவல் போல் வெள்ளையாக ஒரு பொருளை வைத்துக்கொண்டு ஓடுகிறது என்று நீங்கள் எல்லாம் ஆச்சரியமாக பார்ப்பீர்கள் அல்லவா? உங்களுக்கெல்லாம் கூச்சம் தான் காட்டும்; கடிக்காது. இனி பிள்ளையார் எறும்புகள் வரிசையாக வருவதை பார்த்தவுடன் உங்களுக்கு இந்த கதை ஞாபகம் வரட்டும் என்ன குட்டீஸ்களா பிள்ளையார் எறும்பை பற்றி தெரிந்து கொண்டீர்கள் அல்லவா!