சிறுவர் சிறுகதை: தேர்வு!

சுயநலத்திற்காகச் சக விலங்குகளை வேட்டையாடத் தொடங்கிய தாவர உண்ணிகளின் சிறுகதை
சிறுகதை | Wild animals
சிறுகதை | Wild animalsImage credit: Gemini AI
Updated on: 

அன்று காடு முழுவதும் ஒரு புதிய அறிவிப்பு ஒட்டப்பட்டிருந்தது. அதனைக் கண்ட தாவர உணவு உண்ணும் விலங்குகள் பெருமூச்சு விட்டபடி ஆடிப்பாடி மகிழ்ந்தன.

சிறிது நேரத்தில், ‘அரசரின் உத்தரவுப்படி நாளை அரசரின் குகையில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதற்குத் தாவர உணவு உண்ணும் விலங்குகள் மட்டுமே பங்கேற்கலாம்’ என்ற செய்தியும் எல்லாக் காட்டு விலங்குகளிடமும் பரவியது.

அரசரின் இந்தத் திடீர் அறிவிப்பைக் கேட்டுத் தாவர உணவு உண்ணும் விலங்குகள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன், நாளைய முகாமை நினைத்து உறங்காத கண்களோடு தயாரிப்புகளில் மூழ்கின. மறுபக்கம், “வேலை என்றால் என்ன?”, “என்ன மாதிரியான வேலை?”, “எப்படி வேலைக்கு ஆளெடுப்பார்கள்?”, “தாவர உணவு உண்பது மட்டுமே போதுமா?”, “வெறும் தாவர உண்ணிகள் என்றால் முயலும் வரும்; யானையும் வரும். இதில் எதற்கு முன்னுரிமை தருவார்கள்?” என்ற கேள்விகள் அங்கும் இங்குமாய் கிசுகிசுக்கப்பட்டன.

அடுத்த நாள் காலை முதலே அரசரின் குகையை நோக்கி மான்கள், அணில்கள், முயல்கள், ஆடுகள், மாடுகள், யானைகள் என எண்ணற்ற விலங்குகள் வந்துகொண்டிருந்தன.

புலியின் அறிவுறுத்தலின்படி கூட்டத்தைக் கட்டுப்படுத்த, நரிகளும் ஓநாய்களும் எல்லோரையும் உருவ அளவின் அடிப்படையில் பிரித்து வரிசைப்படுத்திக் கொண்டிருந்தன.

இருப்பினும், குகைக்குள் அனைவரும் நிற்க இடமில்லாததால் பலரை வெளியே வரிசையாக நிற்க வைத்தனர். வந்த அனைவருக்கும் அவ்வப்போது குடிக்கத் தண்ணீரும் புல் உணவும் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன. எப்போதும் வேட்டை விலங்குகளைக் கண்டால் அஞ்சியோடும் விலங்குகள், நேற்றைய அறிவிப்பிற்குப் பிறகு எந்தப் பயமும் இல்லாமல் தைரியமாகக் காத்திருந்தன.

வரிசையில் நின்றுகொண்டிருந்த ஆமை, “என்ன வேலைக்கு ஆட்களை எடுக்கிறீர்கள்? வேகத்தைக் கணக்கில்கொண்டு தேர்வு செய்தால் என்னால் வேகமாக ஓட முடியாதே!” என்று தன் கவலையைக் கூறியது.

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: சுட்டி அணிலின் நற்செயல்!
சிறுகதை | Wild animals

அதைக் கேட்ட மற்ற விலங்குகளும் தங்களின் பலவீனங்களை ஒவ்வொருவராகச் சொல்லத் தொடங்கின. எல்லோரின் குரல்களையும் கவனமாகக் கேட்ட புலி, ஒரே வரியில் பதில் சொல்ல, கூட்டம் முழுவதும் சட்டென்று அமைதியானது.

“என்ன மாதிரியான வேலைக்கு ஆட்களை எடுக்கிறோம் என்பது அரசனுக்கு மட்டுமே தெரியும்!”

அரசனின் வருகைக்காக எல்லோரும் அமைதியாகக் காத்திருந்தனர். நீண்ட நேரத்திற்குப் பிறகு தனது குகையிலிருந்து அரசன் சிங்கம் மெல்ல நடந்து வெளியே வந்தது. அவரின் நடையில் மிகுந்த சோர்வு தென்பட்டது.

குகையில் வேலைக்காகக் காத்திருந்த விலங்குகளிடம், “அரசரின் அறிவிப்பைக் கேட்டு வந்தமைக்கு மிகுந்த நன்றி” என்று தளர்ந்த குரலில் கூறினார்.

“இன்னும் சிறிது நேரத்தில் உங்களுக்கான ஒரு தேர்வு நடைபெறும். அதில் யார் தேர்ச்சி பெறுகிறார்களோ, அவர்களே அரசவையில் வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள்” என்று கூறி முடிக்கும் முன்பே அரசன் மயங்கி கீழே விழுந்தார்.

அதைக் கண்ட புலியும் ஏவலர்களும் அரசனுக்குத் தண்ணீர் தெளித்து அவரை ஆசனத்தில் அமர வைத்தனர். புலி வெளியே வந்து, “அரசன் உணவின்றி மிகவும் சோர்வாக இருக்கிறார். சீக்கிரம் யாரேனும் அவருக்கு உணவு கொண்டு வாருங்கள்!” என்று கத்த, எல்லோரும் திகைத்து நின்றனர்.

“அரசனுக்கு உணவு கொண்டு வர வேண்டுமா? அரசன் எங்களைப்போல இல்லையே; செடி கொடிகளை உண்ண மாட்டாரே!” என்று ஆடு புலம்பிக்கொண்டே வெளியே வந்தது.

எல்லா விலங்குகளும் எங்கேயாவது மாமிசம் கிடைக்கிறதா என்று காடு முழுவதும் தேடி அலைந்தன. எங்கும் எதுவும் கிடைக்காததால் என்ன செய்வதென்று தெரியாமல் குகைக்கு வெளியே திகைத்து நின்றன.

நேரமாகியும் யாரும் வராததால் புலி குகையை விட்டு வெளியே வந்தது. அனைவரும் வெறுங்கையோடு நிற்பதைக் கண்ட புலி, “எங்கே அரசனுக்கு உணவு? ஏன் எல்லோரும் இங்கே நிற்கிறீர்கள்?” என்று சீறியது.

“இலை தழைகள் கேட்டால் காட்டையே உங்களின் முன் கொண்டுவந்து போட்டுவிடுவோம்; ஆனால் எங்கு தேடியும் மாமிசம் கிடைக்கவில்லையே!” என்று எல்லோரும் கூறினர்.

“உங்களின் அரசனுக்காக உங்கள் மாமிசத்தையே தரக்கூட நீங்கள் யாரும் தயாராக இல்லையா?” என்று புலி கேட்டது.

“அது எப்படி நாங்கள் எங்களைத் தருவது? எங்களுக்கும் குடும்பம், குட்டிகள் எல்லாம் இருக்கிறதே!” என்று யானை சொல்லிவிட்டு விலகிச் சென்றது. மற்றவர்கள் என்ன சொல்வதென்று தெரியாமல் அங்கேயே நின்றனர்.

சட்டென்று, “அரசரே, இதோ உங்களின் உணவு…” என்று ஒரு குரல் கேட்க, எல்லோரும் விலகி வழிவிட்டனர்.

சிறுகதை | Wild animals
சிறுகதை | Wild animalsImage credit: Gemini AI

அங்கே ஒரு மாடு, வேட்டையாடப்பட்ட ஒரு மானைத் தனது கொம்பில் சுமந்துகொண்டு குகையை நோக்கி வந்தது. இதைக் கண்ட மான்கள் மிகுந்த அதிர்ச்சியில் அந்த மாட்டையும் இறந்த மானையும் பார்த்தபடி உறைந்து நின்றன.

“அருமை! அரசனுக்காக நீ உணவைக் கொண்டு வந்துவிட்டாய். நீயே நேராகச் சென்று அரசரிடம் கொடுத்துவிட்டு வா!” என்று புலி மாட்டைப் பாராட்டி வழிவிட்டது.

“என்ன இது? ஏன் இந்த மாடு தன் சக விலங்கிற்கு இப்படிச் செய்தது? இது அநீதியல்லவா?” என்று கூட்டத்தில் சலசலப்பு எழுந்தது.

“உங்களைப்போல ‘முடியாது’ என்று சொல்லாமல் இந்த மாடு அரசனுக்காக உணவைத் தேடிக் கொண்டுவந்திருக்கிறது பாருங்கள்!” என்று புலி ஏளனமாகச் சொன்னது.

மாடு மிகுந்த மகிழ்ச்சியுடன் குகையிலிருந்து வெளியே வந்தது.

“என்ன, ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறாய் போல?” என்று புலி கேட்க, “அரசன் எனக்கு அரசவையில் வேலை கொடுத்துவிட்டார். நாளை முதல் வேலைக்கு வரச் சொன்னார்!” என்று கூறிவிட்டு அது பெருமிதத்தோடு சென்றது.

இதைக் கேட்ட மற்ற விலங்குகள், “என்னது, அரசவையில் வேலையா?” என்று ஆச்சரியத்தில் நின்றன.

“இதோ, நாங்களும் சென்று அரசருக்கு உணவு கொண்டு வருகிறோம்!” என்று கூறிப் பல விலங்குகள் காட்டிற்குள் சக விலங்குகளை வேட்டையாட ஓடின.

“மற்றொரு உயிரைக் கொன்று இறைச்சி கொண்டு வந்தால்தான் வேலை என்றால், எங்களுக்கு இந்த வேலையே வேண்டாம்!” என்று சில விலங்குகள் சுயமரியாதையோடு வீட்டிற்குத் திரும்பின. எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த புலி பதில் ஏதும் சொல்லாமல் நரித்தனமாகச் சிரித்துக்கொண்டது.

சிறிது நேரத்தில் ஒவ்வொரு விலங்கும் காட்டிலிருந்து பிற விலங்குகளை அடித்துக் கொண்டு வர, குகை முழுவதும் பிணங்களாலும் இறைச்சியாலும் நிரம்பியது. அரசன் சிங்கம் கம்பீரமாக வெளியே வந்து, குகையில் குவிக்கப்பட்டிருந்த உணவுகள் அனைத்தையும் பார்வையிட்டார்.

“இன்றைக்கு இது போதும். நீங்கள் எல்லோரும் உங்கள் தேர்வில் வெற்றி பெற்றுவிட்டீர்கள்! உங்களை இன்று முதல் அரசவையின் முக்கிய உறுப்பினர்களாகப் பணியமர்த்துகிறேன்!” என்று கூற, கீழே நின்றிருந்த விலங்குகள் சுயநல மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தன.

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: வரிக்குதிரைக்கு வரிகள் வந்த கதை!
சிறுகதை | Wild animals

“நாளை முதல் நீங்கள் இறைச்சியாக வேட்டையாடிக் கொண்டு வர வேண்டாம்; அது உங்களுக்குச் சிரமம். நீங்கள் எந்தன் உணவை உயிருடன் பிடித்து வந்து அருகில் இருக்கும் சிறிய குகையில் அடைத்து வைத்துவிடுங்கள். மீதியைக் காவலாளிகள் பார்த்துக் கொள்வார்கள். உங்களுக்குத் தினந்தோறும் தேவையான புல், தழை உணவை என்னுடைய இடத்திலிருந்து இலவசமாக எடுத்துக்கொள்ளலாம்!” என்று அரசர் கூறினார்.

“சரி அரசே!” என்று எல்லோரும் ஆமோதித்தனர்.

“ஒன்று செய்வோம்… தினந்தோறும் நீங்கள் என்னுடைய உணவைத் தேடி அலைய வேண்டாம். அந்தக் குகையில் என்னுடைய உணவு குறையக் குறையப் புதிதாகக் கொண்டு வாருங்கள். மற்ற நேரங்களில் உங்கள் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருங்கள்!” என்று கூறியவுடன் எல்லோரும் புன்னகையுடன், “மிக்க நன்றி அரசரே!” என்று தலைவணங்கினர்.

“இப்போது எல்லோரும் வீட்டிற்குச் செல்லுங்கள். நாளை வந்து உங்கள் வேலையைத் தொடருங்கள்!” என்று கூறிவிட்டு அரசர் நிம்மதியாகக் குகைக்குள் சென்றார்.

விலங்குகள் அனைத்தும் அதிகார போதையின் மகிழ்ச்சியுடன் வீட்டிற்குச் செல்ல, காற்றில் ஒரு பழைய காகிதம் பறந்து வந்து அவர்களின் காலடியில் மிதிபட்டு மண்ணில் புதைந்தது.

அதில் எழுதப்பட்டிருந்தது:

தாவர உணவு உண்ணும் விலங்குகளுக்கான அரச ஆணை:

நீண்ட நாட்கள் நடந்த போராட்டத்தின் விளைவாக, இனி இந்தக் காட்டில் மாமிசம் உண்ணும் வேட்டை விலங்குகள், தாவர உணவு உண்ணும் எளிய விலங்குகளை வேட்டையாடக்கூடாது என அரசர் கடுமையான உத்தரவிட்டுள்ளார்!

logo
Kalki Online
kalkionline.com