

வீடுகளில் வளர்க்கும் பூனைகள் காணாமல் போவதை நிறுத்த நெதர்லாந்து அரசு அதிரடிச் சட்டம் ஒன்றை அமல்படுத்த உள்ளது. மறுபுறம், சிங்கப்பூரிலோ மாற்றுத் திறனாளிகளுக்கான வழிகாட்டி நாய்களை உணவகங்களுக்குள் அனுமதிக்க விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. செல்லப்பிராணிகள் நலனில் உலக நாடுகளின் இந்த இரண்டு புதிய மற்றும் வியக்கத்தக்க முன்னெடுப்புகளுக்குப் பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான காரணங்கள் என்ன? முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்!
1. நெதர்லாந்தில் பூனைகளுக்கு மைக்ரோ சிப் கட்டாயம்! - அதிரடி ஆர்டரின் பின்னணி என்ன?
நெதர்லாந்தில் ஆண்டுதோறும் சுமார் 60 ஆயிரத்துக்கும் அதிகமான பூனைகள் காணாமல் போகின்றன என்று புள்ளி விபரங்கள் சொல்கின்றன. ஆனால், அவற்றில் ஒரு சிறிய பகுதியே உரிமையாளர்களுடன் மீண்டும் சேருகிறது.
இந்தப் பின்னணியில் நெதர்லாந்து அரசு 2028 ஜனவரி 1 முதல் ஒரு புதிய திட்டத்தை அமல் படுத்தப்போகிறது. அதன்படி, வீட்டுப் பூனைகளுக்கு மைக்ரோசிப் பொருத்துவதையும், அவற்றைப் பதிவு செய்வதையும் கட்டாயமாக்கப்போகிறது.
நெதர்லாந்தில் தெருவில் சுற்றித் திரியும் பூனைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்திய புள்ளி விபரங்களின்படி நாட்டில் சுமார் பன்னிரெண்டு லட்சம் வரை தெருப்பூனைகள் இருக்கலாம் என்று தெரிய வருகிறது.
இதற்கு, வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகள் காணாமல் போவது மட்டுமே காரணமில்லை. சில பூனைகள் உரிமையாளர்களால் கைவிடப்படுகின்றன. சில பூனைகள் கருத்தடை செய்யப்படாமல் வெளியே சுற்றுவதால் குட்டிகளைப் பெற்றுக்கொள்கின்றன. அந்தக் குட்டிகள் மீண்டும் இனப்பெருக்கம் செய்யத் தொடங்குகின்றன. இப்படியாக ஒரு சில பூனைகளில் தொடங்கிய பிரச்சினை பெரிய கூட்டமாக மாறுகிறது.
எனவே, வீட்டுப் பூனைகள் காணாமல் போவதைத் தடுப்பதும், அவற்றைக் கருத்தடை செய்வதும் அபரிமிதமாகப் பெருகிவரும் தெருப்பூனைகள் பிரச்னைக்கு முக்கிய தீர்வாக இருக்கும் என நெதர்லாந்து அரசு கருதுகிறது. தற்போது நெதர்லாந்தில் தெருப் பூனைகள் பாதிப்பு ஏற்படாத வகையில் சிறப்பு கூண்டு மூலம் பிடிக்கப்படுகிறன. பின்னர் கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்று அவற்றின் உடல்நிலை பரிசோதிக்கப்படுகிறது. தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு, அவற்றுக்குக் கருத்தடை செய்யப்படுகிறது. அதன் பிறகு, அந்தப் பூனை எங்கு பிடிக்கப்பட்டதோ அல்லது அதற்குப் பொருத்தமான இடத்திலோ மீண்டும் விடப்படுகிறது.
அங்கு அதற்கு தேவையான கண்காணிப்பும் பராமரிப்பும் வழங்கப்படுகிறது.
ஆனால் எல்லா பூனைகளும் மீண்டும் தெருவில் விடப்படுவதில்லை. மனிதர்களுடன் பழகக்கூடிய பூனைகளும் குட்டிப் பூனைகளும் காப்பகங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சமூகப் பழக்கத்திற்கு கொண்டு வரப்பட்டு, புதிய வீடுகளில் தத்தெடுக்கப்படுகின்றன. ஆனாலும், காணாமல் போகும் பூனைகளை, அதன் உரிமையாளரரைக் கண்டுபிடித்து மீண்டும் ஒப்படைகும் சம்பவங்கள் மிகக் குறைவுதான். இப்போது நெதர்லாந்தில் நாய்களுக்கு மைக்ரோசிப் கட்டாயமாக உள்ளது; அதனால், தெருக்களில் கண்டுபிடிக்கப்படும் நாய்களில் சுமார் 90 சதவீதம் உரிமையாளர்களுடன் மீண்டும் சேர்க்கப்படுவதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன பூனைகளுக்கு அது இன்னும் கட்டாயமில்லை. ஆகவேதான் பூனைகளுக்கு மைக்ரோ சிப் பொருத்துவதைக் கட்டாயமாக்க அரசு முடிவெடுத்துள்ளது. மைக்ரோசிப் என்பது அரிசி அளவுக்கு சிறிய அடையாளச் சாதனம். பூனையின் தோலுக்குக் கீழ் பொருத்தப்படும் இந்தச் சிப்பில் தனிப்பட்ட அடையாள எண் இருக்கும். அந்த எண்ணுடன் உரிமையாளரின் தொடர்பு விவரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும்.
ஆகவே, காணாமல் போன பூனையின் மைக்ரோ சிப்பை வைத்து, அதன் உரிமையாளரை அடையாளம் காண்பது மிகவும் எளிதாகும். அதேபோல், தெருவில் சுற்றும் பூனை உண்மையில் உரிமையற்றதா அல்லது வீட்டிலிருந்து தவறி வந்ததா என்பதையும் கண்டறிய முடியும். இதன் மூலம் காப்பகங்களின் சுமை குறையலாம், உரிமையாளர்களுடன் பூனைகள் விரைவாக மீண்டும் இணையலாம், கைவிடப்பட்ட பூனைகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தலாம் என்று விலங்கு ஆர்வலர்கள் கூறுகிறார்கள். ஒரு சிறிய மைக்ரோசிப், ஒரு பூனைக்கு வெறும் அடையாள எண்ணை மட்டும் கொடுப்பதில்லை. அது அந்த உயிருக்கும் அதன் குடும்பத்துக்கும் இடையிலான தொடர்பை மீண்டும் கண்டுபிடிக்கும் ஒரு பாலமாக மாறுகிறது.
2. வழிகாட்டி நாய்களுக்கு உணவகங்களில் அனுமதி சிங்கப்பூர் அரசின் மனிதாபிமான நடவடிக்கை
உலகமெங்கும் பார்வைத் திறன் இல்லாதவர்கள் மற்றும் குறைவான பார்வைத் திறன் கொண்ட மாற்றுத் திறனாளிகள், சுதந்திரமாக வீதிகளில் உலவுவதற்கும், தாங்கள் விரும்பும் இடங்களுக்கு தன்னிச்சயாக சென்று வருவதற்காகவும் வழி காட்டி நாய்களை பயன்படுத்தி வருவது நாம் அனைவரும் அறிந்ததே!
1934ல் பிரிட்டனில் உருவான வழிகாட்டி நாய்கள் சங்கம்” என்ற அமைப்புதான் பார்வையற்றவர்களது நலன் கருதி இத்தகைய ஒரு முன்னெடுப்பினை மேற்கொண்டது. அதன் பின், இது உலகின் மற்ற நாடுகளுக்கும் பரவியது.
பார்வைக் குறைபாடு உள்ள மாற்றுத் த்கிறனாளிகள் தங்களுடைய வழி காடி நாய்களின் உதவியோடு தங்கள் விருப்பம் போலேங்கும்சென்று வரலாம் என்றாலும், பல நாடுகளில் குறிப்பாக உணவகங்களில் இத்தகைய வழிகாட்டி நாய்களை அழைத்துக் கொண்டு செல்பவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
ஆனால், சிங்கப்பூர் அரசாங்கம் இந்த வழிகாடி நாய்கள் விஷயத்தில் மிகவும் மனிதாபிமானத்தோடு, விதியினைத் தளர்த்தி உள்ளது. அதன்படி, சிங்கப்பூரில் வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் பார்வை குறைபாடு உடைய மாற்றுத் திறனாளிகள் மட்டுமில்லாமல், செவித்திறன் குறைபாடு உள்ளவர்களும்கூட உணவகங்களில் தங்கள் உதவிக்கு த் தங்கள் வழிகாட்டி நாய்களை அழைத்துச் செல்லமுடியும்.
அதாவது, பார்வைத்திறன் குறைபாடு உள்ளோர் மட்டுமே தற்போது தங்களுக்கு உதவியாக நாய்களை உணவகங்களுக்கு அழைத்துச் செல்லலாம் என்ற விதிமுறை மேம்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்ய பயிற்சி அளிக்கப்பட்ட இந்த நாய்கள், உரிமம்பெற்ற சில்லறை உணவு நிலையங்களுக்குள் தங்களது உரிமையாளர்களுடன் செல்ல அனுமதிக்கப்படும்.
இதனை சிங்கப்பூர் உணவு அமைப்பு, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சகம், மாற்றுத்திறனாளிகளுக்கான ‘எஸ்ஜி எனேபிள்’ அமைப்பு ஆகியன கூட்டாகத் தெரிவித்துள்ளன.
தளர்த்தப்பட்ட விதியின்படி, உணவு நிலையங்களில் உணவு உண்ணும் பகுதி, சிற்றுண்டிப் பகுதி, கழிவறை ஆகியவற்றுக்கும் நாய்களை அழைத்துச் செல்ல அனுமதி உண்டு. முந்தைய விதிகளின்படி, பார்வைத் திறன் குறைபாடுள்ளவர்களுக்கு உதவும் வழிகாட்டி நாய்களுக்கு மட்டுமே உணவகங்களுக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்த உதவி நாய்கள் ‘செல்லப்பிராணிகள்’ அல்ல மாறாக ‘பணிபுரியும் விலங்குகள்’ என அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், உணவக உரிமையாளர்கள் இவற்றைத் தங்கள் வளாகத்திற்குள் அனுமதிக்க தனியாக எந்த உரிமமும் பெறத் தேவையில்லை” என்றும் அரசு தெரிவித்துள்ளது.
உலக நாடுகளின் புதுமையான விலங்கு நலச் சட்டங்களை அறிந்துகொள்வதன் மூலம், நமது சமூகத்திலும் செல்லப்பிராணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் உதவி விலங்குகள் மீது சரியான புரிதலையும் அனுதாபத்தையும் வளர்த்துக்கொள்ள முடியும்.
உலக நாடுகளின் புதுமையான விலங்கு நலச் சட்டங்களை அறிந்துகொள்வதன் மூலம், நமது சமூகத்திலும் செல்லப்பிராணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் உதவி விலங்குகள் மீது சரியான புரிதலையும் அனுதாபத்தையும் வளர்த்துக்கொள்ள முடியும்.