

இன்றைய உலக வரைபடத்தில் மிளிர்ந்து கொண்டிருக்கும் பல தேசங்களும், நகரங்களும் வரைபடத்திலிருந்து மறையப் போகின்றன என்பது சோகமான ஒரு செய்தி தான்!
போரினாலோ அல்லது உள்நாட்டுச் சண்டைகளினாலோ இவை அழியப் போவதில்லை.
கடல் மட்டம் நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே போகின்றது அல்லவா? அதனால் கடல் ஓரத்தில் இருக்கும் நகரங்களும் கடல் நடுவே இருக்கும் பல தீவுகளும் இருப்பது இனி சந்தேகம் தான்!
சென்ற நூற்றாண்டில் 1.4 மி.லி மீட்டர் அளவு உயர்ந்து கொண்டிருந்த கடல் நீர் மட்டம் 2006 முதல் 2015 வரை 3.6 மி.லி மீட்டர் அளவு உயர்ந்திருப்பதாக நேஷனல் ஓசியானிக் அண்ட் அட்மாஸ்பரிக் அட்மினிஸ்ட்ரேஷன் (NOAA - National Oceanic and Atmospheric Administration) தெரிவிக்கிறது.
2100ம் ஆண்டு வாக்கில் இந்த கடல் மட்டம் உயர்வதால் 25 கோடி மக்கள் நேரடியாகப் பாதிக்கப்படுவார்களாம்.
எடுத்துக்காட்டாகச் சொல்வதென்றால், 45 செண்டிமீட்டர் அளவில் கடல்மட்டம் உயர்ந்தால் மாலத்தீவுகள் 77 சதவிகிதம் 2100ம் ஆண்டு வாக்கில் அழிந்து விடும். இங்கு 1200 சின்ன பவளப் பாறை தீவுகள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்களின் எண்ணிக்கை 5,40,000!
பசிபிக் கடலின் நடுவில் உள்ள கிரிபடி என்னும் தீவும் ஆறு அடி நீர்மட்டம் உயர்வதால் மூன்றில் இரண்டு பங்கு அழிந்து விடும். இங்குள்ள ஜனத்தொகை1,20,000!
சீனாவை எடுத்துக் கொண்டால் 430 லட்சம் பேர்கள் கடலோரத்தில் வசிக்கிறார்கள்.
பங்களாதேஷில் 320 லட்சம் மக்கள் கடல் பகுதியில் வசிக்கிறார்கள். இந்தியாவிலோ 270 லட்சம் பேர்கள் கடலோரப் பகுதிகளில் வசிக்கிறார்கள்.
மிக வேகமாக அழிந்து வரும் நகரம் ஜாகார்தா என்கிறது பிபிசி.
உலக பொருளாதார ஃபோரம் பங்களாதேஷ், லாகோஸ், நைஜீரியா, பாங்காக் ஆகியவை நீருக்கடியில் மூழ்கிவிடும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்கிறது.
அமெரிக்காவை எடுத்துக் கொண்டால், 'சன் ஷைன் சிட்டி' என்ற செல்லப் பெயரை எடுத்திருக்கும் ப்ளோரிடாவுக்கும் இதே அபாயம் உண்டு.
க்ளைமேட் சென்ட்ரல் ரிஸர்ச்-இன் ஆய்வின் படி அமெரிக்காவில் 36 முதல் 50 நகரங்கள் கடல் மட்டம் உயர்வால் பாதிக்கப்படும்.
ஆக என்ன தான் செய்வது? இந்தக் கேள்விக்குப் பதிலை ஓரளவு நெதர்லாந்தும் அமெரிக்காவும் தருகின்றன.
பாதுகாப்பு நடவடிக்கைகளை இப்போதிலிருந்தே எடுக்க வேண்டும் என்பதுதான் அந்த பதில். மிக மிக உயரமான மட்டத்தில் வீடுகளை அமைப்பது ஒரு வழி. சாலைகளையும் அதே உயரத்தில் அமைக்க வேண்டும். ஏராளமான அளவு பவளப் பாறைகளை வளர்க்க வேண்டும். அலையாத்திக் காடுகளை (MANGROVES) கடல் ஓரத்தில் மிக அதிகமாக வளர்க்க வேண்டும்.
ஆனால், இதற்கு பெரும் செலவைச் செய்ய வேண்டி வரும். நெதர்லாந்தும், அமெரிக்காவும் செலவழிப்பதைப் போல, இதை எல்லா நாடுகளாலும் செய்ய முடியுமா என்பது கேள்விக்குறி தான்!
இப்போதிலிருந்தே படிப்படியாக மக்களை இடம் பெயரச் செய்வது மக்களை அழியாமல் பாதுகாக்க எடுக்க வேண்டிய ஒரு நடவடிக்கையாக அமையும்.
சரி, 2100ல் உலகம் எப்படி இருக்கும்? இதை யாராலும் சொல்ல முடியாது என்கிறார்கள் நிபுணர்கள்.
பசுமை வாயுக்கள் எனப்படும் க்ரீன் ஹவுஸ் கேஸ்களை நம்மால் தடுக்க முடியுமா? முடியும் என்றால் அழிவிலிருந்து தப்பிக்கலாம்!
இதற்கு ஒவ்வொரு மனிதனும் பாடுபட வேண்டுமே! பாடுபட்டால் அழிவிலிருந்து ஒருவேளை இந்தக் கடலோரப் பகுதிகள் தப்பிக்க வாய்ப்பு உண்டு!