

திருத்துறைப்பூண்டி டவுனில் ‘இராமையா இடியாப்பக் கடை’ முன் அன்று ஏகப்பட்ட கூட்டம்! ஆம்! அன்று கடை ஆரம்பித்து நூறாவது நாள்! அந்தக் கடையில் அப்படி என்ன விசேஷம் என்கிறீர்களா? நிறைய விசேஷங்கள் உண்டுங்க! ஒவ்வொன்னா சொல்றேங்க! அதைச் சொல்லத்தானே இந்தக் கதையே!
கடையின் முதலாளி சுதா ஓர் எம்.பி.ஏ.,பட்டதாரி! பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்து, இந்த நூறு நாட்களுக்குள்ளாகவே தன் இடியாப்பக் கடையால் டவுனையே ஒரு கலக்கு கலக்கி வைத்திருக்கிறார். தன் பணியின் உச்சக் கட்டநிலையில் பணியை ஒதுக்கி விட்டுச் சுய தொழிலில் இறங்கியவர்! இதோ! நிருபர்கள் கூட்டம், புகைப்படக்காரர்கள் புடைசூழ சுதாவை நெருங்குகிறது. வாங்க!அவர்களோடு சேர்ந்து நாமும் உள்ளே போய் சுதா சொல்வதைக் கேட்போம்!
“எல்லோருக்கும் வணக்கமுங்க!எங்க இடியாப்பக் கடை இவ்வளவு பாப்புலர் ஆக நீங்களும் ஒரு காரணம். நீங்கல்லாம் உங்க மனசுல என்னென்ன கேள்விகள் கேட்கணும்னு நினைப்பீங்களோ அதை நானே கற்பனை பண்ணி, அதற்கான விடைகளைச் சொல்லிடறேன். அதற்கு மேலும் எங்கிட்ட ஏதாவது கேட்கணும்னு தோன்றினால் நீங்க தாராளமா கேட்கலாம். நானும் பதில் சொன்னக் கடமைப்பட்டிருக்கறேன்!”
“எப்படி இந்தக் கடை ஆரம்பிக்கற ஐடியா ஒங்களுக்கு வந்தது? என்ற கேள்வி உங்க எல்லார் மனசுலயும் இருக்கும். எங்க தாத்தா ராமையா அந்தக் காலத்துல சிங்கப்பூர் போயி, அதிகமாப் படிக்காத குறையை உணர்ந்து, யாரிடமும் கை கட்டிச் சேவகம் புரிய மனசு இல்லாம, தன் சொந்தக் காலிலேயே நிற்க முடிவெடுத்து இருக்காரு! அப்போதான், அவசரம் அவசரமா வேலைக்குப் போறவங்க சரியாக் கூடச் சாப்பிடாம ஓடறதைப் பார்த்திருக்காரு. அவருக்கு இடியாப்பம் தானே தயாரிச்சு விற்றால், தன்னோட பிழைப்பும் நடக்கும்! வேலைக்கு அவசரமாக் காலைலே போறவங்க பசியும் தீரும்னு முடிவெடுத்து ‘ஒன் மேன் ஆர்மி’ மாதிரி எல்லா வேலையையும் அவரே பார்த்து ரோட்டு ஓரமா ஒரு கடையைப் போட்டிருக்காரு!
அதிகாலை மூணு மணிக்கே எழுந்து அவரே இடியாப்பம் பிழிஞ்சு, வேக வைத்து, அதுக்கு சைட் டிஷ் பண்ணி, 5 மணிக்கே கடையைத் திறந்திடுவாராம்.
அந்தச் சாலைல போறவங்க வாங்குவாங்களாம். அதையே நடமாடும் கடையா மாற்றிட்டா எல்லா இடத்துக்கும் போயி விற்கலாம்னு முடிவு பண்ணி, ஒரு சைக்கிளை வாங்கி அதில விற்பனையைத் தொடர்ந்திருக்காரு! நல்லா விற்பனை ஆக, இங்க இந்தியாவுல உள்ள அவரோட சொந்தக் கிராமமான கீழப்பெருமழையில நில புலத்தை வாங்கி, ஒரு நல்ல வீட்டையும் கட்டியிருக்காரு! எங்கப்பாவை நல்லா படிக்கச் சொல்லிச் செலவு பண்ணியிருக்காரு!ஆனா, அப்பாவுக்குப் படிப்பு வர்ல. பிசினஸ் மேனோட பையனுக்கு அதிலதானே இன்ட்ரஸ்ட் இருக்கும். அப்பாவும் ஏதோ பிசினஸ்னு ஆரம்பிச்சி, சரியா பண்ணாம நெறையாக் கடனை இழுத்து வெச்சிட்டாரு!
ஒவ்வொரு முறை தாத்தா ஊருக்கு வரும்போதும் அவர் உள்ளங்கையை எல்லோருக்கும் காட்டுவாராம். இடியாப்பம் பிழிஞ்சி, பிழிஞ்சி அது காய்ச்சிப் போயிக் கடினமா ஆகியிருக்குமாம். அப்படிக் கஷ்டப்பட்டும் மகன் சரியா முன்னுக்கு வர்லயேங்கற கவலையிலேயே அவர் கடைசிக் காலம் போயிடிச்சாம்!
பாட்டி சங்கரி என் சின்ன வயசில எங்கிட்ட இதைக் கதையா சொன்னப்போவே நான் தாத்தா ஞாபகமா பிசினஸ் ஆரம்பிக்க முடிவு செஞ்சேன். வாழ்க்கையில தொய்வு வர்றப்போவெல்லாம் மனசில ‘பிசினஸ் பிசினஸ்’அப்படீன்னு சொல்லியே சூடேற்றிக்கிடுவேன். கோயில்கள்ல பிரசாதமா புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், மாவிளக்கு மாவு, வெண் பொங்கல்னு கொடுக்கற மாதிரி எங்க வீட்டு விசேஷங்கள்ல இடியாப்பத்தையும் ஒரு தெய்வீகப் பொருளாக்கி சாமிக்குப் படைச்சோம். தாத்தாவைப் பெருமைப்படுத்தற விஷயமாவும் அது அமைஞ்சுச்சு!”
“எல்லா வேலையையும் எளிதாச் செய்ய மெஷினரி இருக்கான்னு பார்த்துக்கிட்டேன். கடை ஆரம்பிக்கத் தேவையான நிதியைத் திரட்டற வரைக்கும் வேலைக்குப் போக முடிவு செஞ்சேன். போதுமான நிதி சேர்ந்ததும் வேலையை விட்டுட்டேன். எங்க ஊர்ல இருந்த வயசான விதவைகளைத் திரட்டி அவங்கள்ல வேலை செய்ய விருப்பமுள்ளவங்களையும், வறுமையில வாடுற குடும்பத்திலுள்ள பெண்களையும் தேர்ந்தெடுத்தேன்.
எங்கவூர்ல காலை 4 மணிக்கு வேன் புறப்படும்.10 கி.மீ., தூர டவுனுக்கு நாலரை மணிக்கு வந்துடுவோம். ஐந்தரைக்கு எல்லாம் ரெடி பண்ணிடுவோம். அப்புறம் இரவு 8 வரை ஒரே பிசிதான்! ஞாயிற்றுக் கிழமை கண்டிப்பா விடுமுறை. ஆனா காலைல எழும்பறதை மாற்றக் கூடாதுங்கிறதுக்காகக் காலைலயே கிளம்பி ஏதாவது கோயிலுக்குப் போயிடுவோம்.
மதியம் வீடு திரும்பி ரெஸ்ட் எடுப்போம்.
எட்டுக்குடி, சிக்கல், எண்கண், திருவாரூர், கும்பகோணம்னு எங்களில் அதிகப்பேரின் விருப்பப்படி, ஒவ்வொரு வாரமும் சென்று வருவோம்! மாதம் முடிஞ்சதும் வர்ற வருமானத்தை வேலை செய்யும் நபர்களின் எண்ணிக்கையால வகுத்துச் சம்பளமா எடுத்துக்குவோம். கூட, கொறைச்சல் சம்பளமெல்லாம் கிடையாது! எல்லோருக்கும் ஒண்ணுதான்!”
“ரொம்ப நல்லாப் போய்க்கிட்டிருக்கு எங்க பிசினஸ். எல்லோரும் திருப்தியா இருக்கறோம். தாத்தா ஞாபகமா அவர் வாழ்ந்த சிங்கப்பூர் ‘லிட்டில் இந்தியா’ பகுதியில அடுத்த மாதம் ‘இராமையா இடியாப்பக் கடை’யைத் திறக்க ஏற்பாடு செஞ்சிருக்கோம்.
அரிசியில மட்டுமில்லாம கம்பு, கேழ்வரகு, சாமை, தினை போன்ற சிறுதானியங்கள்லயும் இடியாப்பம் செய்யறதோட, அதற்கு ஏற்ற சைட் டிஷ்ஷையும் வழங்க எங்களிடம் ஏற்பாடுகள் உண்டு. சரி! எல்லோருக்கும் ரொம்ப நன்றி! எங்க கடையில எல்லோரும் சாப்பிட்டுட்டுப் போங்க. நானே ரொம்ப பேசிட்டேன். எங்க கோ ஒர்க்கர்சுக்கிட்ட கூட நீங்க பேசலாம்!” சுதா முடிக்க, நிருபர்களின் தலைவர் சொன்னார்!
“மேடம்! நீங்க பிசினஸ்ல மட்டுமில்ல… விபரம் சொல்றதிலயும் வெளுத்து வாங்கறீங்க. நாங்க கேட்டுத் தெரிஞ்சிக்கிட எதுவுமே இல்லாத அளவுக்கு எல்லாத்தையும் தெளிவாச் சொல்லீட்டிங்க. ஒங்க கூட வேலை செய்யறவங்க முகங்களே அவங்க திருப்தியை வெளிச்சம் போட்டுக் காட்டுது! பெண்கள் பிசினசுக்கு எடுத்துக்காட்டா நிக்கற நீங்க, மேலும் முன்னேறணும். உலகத்தோட பல நாடுகள்லயும் ‘இராமையா இடியாப்பக் கடை’ கிளை திறக்க எங்க அனைவரின் வாழ்த்துக்கள் மேடம்!”
பிரஸ் மீட் முடிந்து எல்லோரும் உணவருந்த, சாரி! இடியாப்பம் சாப்பிடச் சென்றனர்.
சுதாவின் இடியாப்பக் கடை வந்ததிலிருந்து, டவுனிலுள்ள பலர், லஞ்சுக்கும் இடியாப்பம் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொண்டு விட்டனர்!