

பென்னியைக் கவனி... பவுண்டை அது பார்த்துக் கொள்ளும்.
"Take care of the pennies and the pounds will take care of themselves."
இது ஒரு ஆங்கிலப் பழமொழி. சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்துவது அது. "சிறிய செலவுகளைக் கண்ட்ரோல் பண்ணினால் பெரிய செலவுகளைச் சமாளிக்கும் வலு உண்டாகும்," என்றார் குப்புசாமி பார்க்கில் தனது நண்பர்களிடம்.
அதற்கு நாக முத்துசாமி சொன்னார், "சிக்கனம் என்றால் ஒரு உதாரணம் சொல்றேன். ஒரு பேங்க் மேனேஜர் இருந்தார். காரைக்குடி பக்கம் அவர் ஊர். அலுவலகத்தைக் கூட்டும் பெண்ணிடம் சொல்லி விடுவார், 'குப்பையை ஒரு மூலையில் குவித்து வை', என்று. தினம் காலை ஏழு மணிக்கு வந்து மூலையில் குவித்த குப்பை மண் அருகில் ஒரு காந்தத்தைக் காட்டுவார். குப்பையில் இருந்து பத்துப் பதினைந்து குண்டூசிகள் அதில் ஒட்டிக் கொள்ளும். அதை ஒரு கவரில் சேர்த்து வைத்து பட்டை சீலையில் தேய்ப்பார். துரு போயிடும். அதை மறுபடி டப்பாவில் போட்டு அலுவலக உபயோகத்துக்கு அனுப்புவார். இப்படியெல்லாம் சிக்கனமாக இருந்தார்கள் அக்காலத்தில்."
குப்பு சொன்னார், "இந்தியாவில் ஒரு சராசரி குடும்பத் தலைவரின் ஓய்வுக்குப் பின் கிடைக்கும் பி.எஃப், கிராஜுவிட்டி, மற்றும் கம்யூட்டேஷன் எனப்படும் 1/3 பென்ஷன் சரண்டர் எல்லாம் சேர்ந்த தொகையில் ஒரு பாதி தொகை மகளின் திருமணச் செலவில் கரைந்து விடுகிறது.
நகை, பட்டுப்புடவை, மண்டபம், சாப்பாடு போக்குவரத்து எல்லாமே இப்போ காஸ்ட்லி. சீர் செய்ய வேண்டும். டூவீலர், கட்டில் மெத்தை டிவி மிக்ஸி கிரைண்டர் பெரிய டபுள் டோர் ஃபிரிட்ஜ் ஃரண்ட் லோடிங் வாஷிங் மெஷின் இவை தனி. தொடர்ந்து வரும் வளைகாப்பு, குழந்தை பிறப்பு இந்தச் செலவுகளில் ஒரு கணிசமானத் தொகை போய்விடுகிறது."
ஓய்வு பெற்ற ஆர்க்கியாலஜிஸ்ட் நாகமுத்துசாமி, "இப்போ வசதி குறைவாக இருக்கும் குடும்பங்களிலும் இந்த சீர் செனத்தி இல்லாமல் கல்யாணம் இல்லை", என்றார். "இப்போ படிக்க வைக்கும் செலவும் ஒரு கல்யாண செலவுக்கு சமம்."
குப்புசாமி ஓய்வு பெற்ற ஆசிரியர் சொன்னார்..."ஒரு குடும்பத்தலைவன் தனக்கு என ஒரு நல்ல செருப்பு சட்டை கூட வாங்கிக்காமல் பணம் சேர்க்கிறான். ஒரு நாள் கூத்துக்கு மீசையை வைத்தான் என்பார்கள். சம்பிரதாயம் சடங்குகளில் பணம் தண்ணீராய் செலவாகிறது."
ஓய்வு பெற்ற கர்னல் கந்தசாமி சொன்னார் சம்பிரதாயங்கள் நாட்டுக்கு நாடு வேறு. "சார், கென்யாவில் கல்யாணத்தின் போது அப்பா மணமகளின் தலையில் எச்சில் துப்புவார். அது தான் ஆசீர்வாதம்."
நாகமுத்துசாமி, "கோவாவில் மணமகனைத் தூக்கிக் கிணற்றில் போட்டுவிடுவார்கள். மணமகன் நீந்தி வர வேண்டும்".
குப்பு சொன்னார், "இங்கு தமிழ் நாட்டில் நலங்கின்போது மணமகன் மணமகள் ஒருவர் தலையில் மற்றவர் அப்பளம் உடைப்பார்கள். ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பி மோதிரத்தைப் போட்டு இருவரையும் துழாவி எடுக்கச் சொல்வார்கள்."
குப்பு மேலும் சொன்னார்,"என் கல்யாணத்தில் இந்த வைபவம் நடந்துச்சு. பாத்திரத்தில் மோதிரம் போட மறந்துவிட்டார் என் மாமனார்."
"சிக்கனத்தில் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துபவர்கள் கோவை, இராமநாதபுரம் மாவட்ட மக்கள் தாராளமாகப் புழங்குபவர்கள்" என்றார் குப்புசாமி.
கர்னல் சொன்னார், "ஆப்பிரிக்காவில் பாலைவன நாடுகள் அதிகம். தண்ணீர் கிடைப்பது கடினம். சஹாரா பாலைவனத்தில் 20 ஏரிகள் இருந்தாலும் ஒரே ஒரு நன்னீர் ஏரி சாட் நாட்டில் உள்ளது. சீனா நாட்டின் மொத்த பரப்புக்கு சமம் சஹாரா. தண்ணீர் சிக்கனம் என்றால் அங்கேபோய்க் கேளுங்கள்."
நாகமுத்துசாமி, "தூக்கணாம்பட்டி சின்னமுத்து வடுகபாண்டின்னு என் நண்பர் இருக்கார். எழுத்தாளர் அவர். "சிக்கனம் இக்கணம்"ன்னு ஒரு புத்தகம் போட்டார். எத்தனை பக்கம் தெரியுமா?"
"நூறு பக்கம் இருக்குமா?" கர்னல் கேட்டார்.
"இரண்டே பக்கம். புத்தகமும் ஒரு சின்ன பாக்கெட் டயரி சைஸ் தான். பொடி எழுத்தில் பிரிண்ட் ஆகி இருக்கும். எழுதிய தன் பெயரை சின்னதா போட்டுக்கிட்டார்."
"என்னன்னு"
"தூசின்னு... முன்னுரையில் என்ன சொல்றார் தெரியுமா... வீட்டு மொட்டை மாடியில் போய் புக்கைப் படிக்கவும். ஃபேன், லைட் செலவு குறையும்.. அதுவே முன்னுரை."
"சிக்கனத்துக்கு என்ன ஐடியா சொல்றார் ?"
"துணி துவைக்க பக்கெட்டில் முதல் நாள் ஊற வையுங்கள். மறு நாள் துவைத்தால் சோப் கொஞ்சம் போதும்...முடிந்தவரை சமைக்காதீர்கள். வாழைப் பழம், தக்காளி, பப்பாளி பச்சையாக சாப்பிடுங்கள். சாதம் வடித்த கஞ்சியை உப்பு போட்டுக் குடித்துப் பழகுங்கள். காபி டீயை நிறுத்துங்கள். இரவில் ஏழு மணிக்குத் தூங்கப் போய்விடுங்கள். லைட் எரியாது. அவருடைய ஒரு நாள் செலவு இருபது தானாம்."
"வீட்டில் புரட்சி வெடிக்காதா?" இது குப்பு.
"பின்னுரையில் சொல்றார்... வீட்டில் உங்கள் மனைவி பிள்ளைகள் இதை எல்லாம் கேட்கமாட்டார்கள் என்பது தெரியும். அவர்கள் பிரியாணி, புரோட்டா, ரவா தோசை வரவழைத்து சாப்பிட்டாலும் நீங்கள் உங்கள் கொள்கையில் மாறாதீர்கள் என்கிறார் தூசி", எனச் சொன்னார் நாகமுத்துசாமி!