

குள்ள மனிதர்கள் (வாலகில்யர்கள்):
நம்மில் பல பேர் மிகக் குள்ளமாக இருப்பதை காண்கிறோம். இதை ஆங்கிலத்தில் DWARFISM என்று சொல்கிறார்கள். இதற்குக் காரணம் தாய் வயிற்றில் குழந்தை வளரும்பொழுது ஏற்படும் MUTATION குறைபாடு என்கிறார்கள். வளர்ச்சி அளிக்கும் ஹார்மோன்களுக்கு புருவத்தின் பின்னால் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பி காரணமாகிறது. இதன் குறைபாடுகளால் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.
மரபணு மாற்றங்கள், பரம்பரை மரபணு மாற்றங்களும் இதற்குக் காரணமாகாலாம். குறுகிய உயரத்திற்கு வகைப்படும் மரபணு (மனித உயிரியல் - human biological) மாற்றங்கள் காரணமாகும்.
குள்ளமாகப் பிறந்தவர்கள் சமூக அந்தஸ்த்தில் அனேகம் பின் தங்கியவர்களாகவே இருக்கிறார்கள். அரசு, முடவியல் (orthopedic) உள்ளவர்களை மாற்றுத் திறனாளிகள் என்று அழைத்து புனரமைத்து ஒரு இடம் தேடிக் கொடுத்திருக்கிறது. அரசாங்க உதவிகள் அவர்களுக்கு கிடைக்கின்றன.
ஆனால், குள்ளமனிதர்களுக்கு எந்தவித புனரமைப்பு மற்றும் நிவாரண உதவிகள் கிடைப்பதாக தெரியவில்லை. ஒரு சில மாநிலங்களில் அவர்களுக்கு மானியத்தொகை கொடுப்பதாகத் தெரிகிறது. ஆனாலும் சில பேருந்து நிலையங்களில் மிகக்குறைந்த ஒன்றரை, இரண்டு அடிக்கு மேற்படாத உயரமுள்ளவர்கள் கூட்டமாகத் தங்கியிருந்து இரந்துண்டு வாழ்கிறார்கள் என்பது சோகமே.
உடல் மற்றும் கால் கைகள் வளர்ச்சி குன்றி தலைமட்டும் பெருத்து காணப்படுகிறார்கள். அவர்களை ஒன்று திரட்டி தங்க இடமளித்து, கல்வி அறிவு அளித்து, அவர்களால் இயன்ற சிறு தொழில்களை கற்பித்து புனர்வாழ்வு அளிக்கலாம். அவர்கள் வளர்ந்த மனிதர்களை விட அறிவாற்றலில் குறைந்தவர்களில்லை. அவர்களுக்கு சமூக அந்தஸ்தும், தன்னம்பிக்கையையும் ஏற்படுத்திக் கொடுத்தால் அவர்களிடம் உள்ள மனிதவளத்தை சமூக வளர்ச்சிக்கு உபயோகித்துக்கொள்ளலாம்.
மிகப் பழமைவாய்ந்த கலாச்சாரங்களில் கூட குள்ளமனிதர்கள் அறிவாளிகளாகவும், தந்திரசாலிகளாகவும் போற்றப்படுகிறார்கள்.
இந்த குள்ளத்தன்மை (dwarfism) பல கதாசிரியர்கள், எழுத்தாளர்கள் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
உதாரணமாக பேராசிரியர் கல்கி அவர்கள் தன் பார்த்திபன் கனவு என்ற சரித்திரத் தொடரில் சித்திரக்குள்ளன் என்ற கதாபாத்திரம் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறார். அந்த கதாபாத்திரம் தந்திரமும் அறிவு கூர்மையும் உள்ளதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
ஜொனாதன் ஸ்விஃப்ட் (Jonathan swift) 'கல்லிவர்ஸ் ட்ராவல் (GULLIVER’S Travels)' என்கிற தன்னுடைய கற்பனைக்கதையில் 'லில்லிபுட்' என்கிற ஒரு கற்பனை தீவை உண்டாக்கி அங்கு 'லேமுவேல் கல்லிவர் (Lemuel Gulliver)' என்கிற கதாநாயகன் செல்வதாகவும் அங்கு ஆறு அங்குலமே உயரமுள்ள மனிதர்களை சந்திப்பதாகவும் வர்ணிக்கிறார். அவர்களின் குள்ளத்தன்மையிலும் நன்றாக வரையறுக்கப்பட்ட சமூக அமைப்பையும், அரசியலும், அவர்களுக்குள்ளே போர்களும் கொண்டவர்களாக காணப்படுகிறார்கள்.
கர்நாடகாவில் 'மோர்யர்குட்டா' என்று ஒருமலை உச்சிக்கு பெயர். இதற்கு குள்ள மனிதர்களின் மலை என்று அர்த்தமாகும். அங்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து நிற்கும் பெருங்கற்களால் உருவாக்கப்பட்ட வடிவங்கள் உள்ளன. இவை எதற்காக கட்டப்பட்டன என்று இப்போதும் தெளிவாக யாருக்கும் தெரியவில்லை. இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி கொண்ட 'குள்ள மனிதர்கள்' இவற்றை உருவாக்கியதாக உள்ளூர் மக்கள் நம்புகின்றனர்.
டோல்கின் (RR Tolkien) என்பவர் எழுதியுள்ள ‘தி ஹாப்பிட்’ என்ற புத்தகம் குள்ள மனிதர்களை உள்ளடக்கிய பிரபலமான கற்பனை கதை.
நோர்ஸ் மிதாலஜி (Norse Mythology) என்னும் புத்தகம் குள்ள மனிதர்கள் கொல்லத்தொழிலில் (blacksmith) கைதேர்ந்தவர்கள் என்றும் தோர்ஸ் ஹாமர் (Thor’s hammer) போன்ற சக்தி வாய்ந்த மாய சக்தியுள்ள செம்மட்டிகள் (hammer) படைப்பவர்கள் என்றும் சொல்லுகிறது.
தி பாரோயர்ஸ் (The Borrowers) என்பது மேரி நோர்ட்டனின் (Mary Norton) குள்ள மனிதர்களைப் பற்றிய ஒரு அழகிய கதை. அவர்கள் ரகசியமாக மனிதர்கள் இல்லங்களில் வசித்துக்கொண்டு அவர்களிடமிருந்து பொருள்களை பெற்றுக்கொண்டு வாழ்வதாகக் கூறுகிறது.
டெர்ரி ப்ராசெட் (Terry Pratchett) என்பவரின் தி வீ ஃப்ரீ மென் (The Wee Free Men) என்னும் புத்தகம் நீலநிற தோல்கொண்ட நாக் மேக் ஃபீகிள் என்ற சின்னஞ்சிறிய தந்திரசாலிகளான போரிடும் தேவதைகளைப் பற்றி வர்ணிக்கின்றது.
டோவ் ஜான்ஸனின் (Tove Jansson) மூமிலன்ட் மிட்விண்டர் (Moominland Midwinter) என்ற நூல் மாயாஜாலம் கொண்ட ஒரு குளிர் உலகத்தில் வசிக்கும் சின்னஞ்சிறிய உயிரினங்களைப் பற்றி வர்ணிக்கிறது.
இயொவின் கோல்ஃபர் (Eoin Colfer) என்பவரின், அர்டெமிஸ் ஃபௌல் (Artemis Fowl), தொழில்நுட்பத்தில் அதிமுன்னேற்றம் கொண்ட தேவதைகளும் குள்ளர்களும் பூமிக்கடியில் மறைந்து வாழ்வதாக வர்ணிக்கும் ஒரு கற்பனை கதை.
இன்னும் சில கற்பனைக்கதைகளும் திரைப்படங்களும் குள்ள மனிதர்களைப் பற்றி வர்ணிக்கின்றன.
கள்ளனை நம்பின்னாலும் குள்ளனை நம்பாதே என்று நடைமுறையில் கூறப்படுகின்றது. இது அவர்களை இழிவு படுத்துவதுபோல் தோன்றுவதால் அதற்கு உடன்பாடு இல்லாவிட்டாலும்; அவர்கள் மிகவும் புத்திகூர்மை உள்ளவர்கள், தந்திரசாலிகள் என்று அவர்களைப் பற்றி அஞ்சுவதை இது உணர்த்துகிறது.
நாம் வணங்கும் விநாயகர் குள்ள உருவம் உள்ளவர். “வாமன ரூபா! மஹேஸ்வர புத்ரா” என்று அவரை வணங்குகிறோம்
மஹாவிஷ்ணுவும் வாமன ரூபமெடுத்து மஹாபலியை வென்றதாக புராணங்கள் கூறுகின்றன.
இந்த குள்ளத்தன்மை இன்று நேற்று ஏற்பட்டதில்லை. வெகு அதிக குள்ளத்தன்மை கொண்ட மனிதர்கள் இருந்ததாக நமது இதிகாச புராணங்கள் வர்ணிக்கின்றன. அறுபதினாயிரம் பேர்கொண்ட வாலகில்யர்கள் என்ற மஹரிஷிகள் வாழ்ந்ததாக நமக்கு தெரிவிக்கின்றன. சப்தரிஷிகளின் ஒருவரான க்ருது என்பவருக்கும் அவர் மனைவி சந்ததிக்கும் பிறந்தவர்கள் இவர்கள். நமது கட்டைவிரல் அளவுக்குத்தான் அவர்கள் உருவம். ஆனால் அவர்கள் ஒளிரும் சூரியனைப் போன்ற பிரகாசம் பொருந்தியவர்கள் என்றும் புலனடக்கும் கொண்ட பிரம்மஞானிகள் என்றும் விஷ்ணு புராணம் புகழ்கிறது.
அவர்கள் சூரியமண்டலத்தில் வசிப்பவர்களாகவும், பறவைகள் போல் சூரியன் முன்னால் பறப்பவர்களாகவும் மஹாபாரதம் அனுசாஸன பர்வம் வர்ணிக்கிறது.
மேலும், அது அவர்கள் தர்மவான்கள் என்றும், நீதி நேர்மை கொண்ட தபஸ்விகள் என்றும், தேவர்களின் காரியங்களை நிறைவேற்றுவதில் அதி தீவிரமுள்ளவர்கள் என்றும், அவர்களின் தவ வலிமையால் அகில உலகமும் திடமாக சத்தியத்தை பின்பற்றி இயங்குகிறது என்றும் மஹாபாரதம் இயம்புகின்றது. பாகவதத்திலும் அவர்கள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன.
மிகத் தொன்மையான கலாச்சாரங்களில் குள்ள உருவங்களைப் பற்றிய கதைகளும் கற்பனைகளும் நிரம்பியிருக்கின்றன. அவர்கள் தந்திரசாலிகளாகவும், அறிவுக்கூர்மையும் தெய்வீகமும் உடையவர்களாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். பல ஆயிரம் ஆண்டுகளாக, உண்மையும் கற்பனையும் கொண்ட குள்ளத்தன்மை அங்கீகரித்து போற்றபட்டிருக்கின்றது.
ஆகவே, குள்ளத்தன்மை (DWARFISM) தீவிரமான ஒரு குறைபாடு என்று சொல்வதற்கில்லை. அவர்கள் மனவலிமையும் அறிவுக்கூர்மையும் உடையவர்கள் என்பது புலனாகிறது. அவர்களை குடியமர்த்தி, கல்வி புகட்டி, அவர்களுக்கென்று ஒரு சமூக அந்தஸ்த்தை ஏற்படுத்தி அவர்களிடமுள்ள மனிதவளத்தை மேம்படுத்தினால் மனித சமூகத்தின் வளர்ச்சிக்கு அவர்களும் உதவிகரமாக இருப்பார்கள்.
இப்பொழுது நமக்கு ஔவைப் பாட்டியின் வெண்பா ஒன்று நினைவுக்கு வருகிறது.
கற்றதுகைம் மண்ணளவு கல்லா துலகளவென்(று)
உற்ற கலைமடந்தை ஓதுகிறாள் – மெத்த
வெறும்பந்த யங்கூற வேண்டாம் புலவீர்
எறும்புந்தன் கையாலெண் சாண்.