அம்மன் சந்நிதியில் விபூதிப் பிரசாதம் – எங்கே, ஏன்?

சீர்காழி ஆச்சாள்புரம் சிவலோகத்தியாகர் ஆலயத்தின் திருநீறு பிரசாத வரலாறு மற்றும் திருஞானசம்பந்தர் முக்தி அடைந்த ஆன்மிக உண்மைகளை அறிந்து கொள்ளுங்கள்.
சிவலோகத்தியாகர் ஆலயம் | Shivaloka Thyagar Temple, Aachaalpuram, Sirkazhi
சிவலோகத்தியாகர் ஆலயம் | Shivaloka Thyagar Temple, Aachaalpuram, SirkazhiImage credit: Gemini AI
Updated on
MM strip
MM strip

சீர்காழி அருகிலுள்ள ஆச்சாள்புரம் சிவலோகத்தியாகர் ஆலயம், திருஞானசம்பந்தரின் திருமணமும் முக்தியும் நிகழ்ந்த முக்தி தலமாக விளங்குகிறது. திருநல்லூர்ப்பெருமணம் சிவாலயத்தில் சம்பந்தரின் கல்யாணத்துக்கு நேரில் வந்த பார்வதி, அனைவருக்கும் திருநீறு வழங்கியதால், இங்கு ‘திருவெண்ணீற்று உமையம்மை’ சந்நிதியில் குங்குமத்திற்குப் பதிலாக விபூதியே பிரசாதமாக வழங்கப்படும் மரபு நிலவுகிறது.

சீர்காழிக்கு அருகில் அமைந்துள்ள ஆச்சாள்புரம் சிவலோகத்தியாகர் ஆலயம் பாடல்பெற்ற திருத்தலங்களில் ஒன்று. திருநல்லூர்ப் பெருமணம், சிவலோகபுரம் போன்ற பல புராணப் பெயர்கள் இந்தத் தலத்திற்கு உண்டு. இந்த ஆலயத்தில் அருளும் திருவெண்ணீற்று உமையம்மை சந்நிதியில் குங்குமத்திற்குப் பதிலாக திருநீறு பிரசாதமாக வழங்கப்படுகிறது. அதற்கான புராணக் கதையைத் தெரிந்து கொள்ளலாமா?

திருஞானசம்பந்தர் பல்வேறு திருத்தலங்களில் இறைவனைப் பாடி வந்தார். அவருக்குப் பதினாறு வயதானதால் திருமணம் செய்ய முடிவு செய்தனர் பெற்றோர். சம்பந்தருக்கு இதில் விருப்பமில்லை என்றாலும், ஈசனின் திருவிளையாடல் என்று எண்ணி ஏற்பாடுகளுக்கு ஒத்துக்கொண்டார்.

சீர்காழிக்கு அருகே உள்ள திருநல்லூரில் வாழ்ந்துவந்த நம்பியாண்டார் நம்பியின் மகள் பூர்ணாம்பிகையை ஞானசம்பந்தருக்கு மணம்பேசி முடித்தனர். திருநல்லூர்ப்பெருமணம் சிவாலயத்தில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்தன.

திருமண நாளன்று திருநீலகண்ட யாழ்ப்பாணர், திருநீலநக்க நாயனார், முருக நாயனார் ஆகிய நாயன்மார்களும், உறவினர்கள், ஊர்மக்கள் என அனைவரும் திரண்டு வந்தனர்.

பெருமணம் சிவாலயத்தில் திருமண ஏற்பாடுகள் களைகட்டியிருக்க, உற்றார் உறவினர்கள் சூழந்து மணமக்களை வாழ்த்த காத்திருந்தனர். அப்போது வந்திருந்த அனைவருக்கும் அன்னை பார்வதி தேவியே தோன்றி, திருநீறு அளித்ததாகத் தல புராணம் தெரிவிக்கிறது. இதனால்தான் இத்தலத்தில் அன்னைக்கு ‘திருவெண்ணீற்று உமையம்மை’ என்ற திருநாமம் ஏற்பட்டது. இந்த நிகழ்வினால்தான் இப்போதும் அன்னையின் சந்நிதியில் திருநீறே பிரசாதமாக வழங்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
அதிசயம்! அண்ணனுக்குப் பதில் மரங்களுக்கு ராக்கி கட்டும் பெண்கள்..! எங்கே தெரியுமா?
சிவலோகத்தியாகர் ஆலயம் | Shivaloka Thyagar Temple, Aachaalpuram, Sirkazhi

ஆச்சாள் என்றால் அன்னை. அன்னை பார்வதியே நேரில் வந்து ஞானசம்பந்தரின் திருமணத்திற்கு வந்திருந்தவர்களுக்கு திருநீறு பிரசாதம் வழங்கியதால், இத்தலத்திற்கு ஆச்சாள்புரம் என்ற பெயர் ஏற்பட்டது. இந்த அதிசயம் மட்டுமா அங்கே நிகழ்ந்தது. இன்னொரு சிலிர்க்கும் நிகழ்வும் நிகழ்ந்தது.

இதையும் படியுங்கள்:
மன்னர் அக்பரையே தரையில் உட்கார வைத்த உலகின் மிகப்பெரிய சமையலறை! எங்கே தெரியுமா?
சிவலோகத்தியாகர் ஆலயம் | Shivaloka Thyagar Temple, Aachaalpuram, Sirkazhi

மணப்பந்தலில் ஞானசம்பந்தர் வந்து அமர, அருகே மணமகளையும் அமர வைத்தனர். திருமணச் சடங்குகள் நடந்தன. திருமணச் சடங்குகளை திருநீலநக்க நாயனார் முன் நின்று நிகழ்த்தினார்.

சம்பந்தர் அக்னியை வலம்வரும்போது சிவபெருமானை எண்ணி பதிகம் பாடினார்.

“கல்லூர்ப் பெருமணம்

வேண்டா கழுமலம்

பல்லூர்ப் பெருமணம்

பாட்டுமெய் யாய்த்தில

சொல்லூர்ப் பெருமணஞ்

சூடல ரேதொண்டர்

நல்லூர்ப் பெருமண

மேயநம் பானே”

எனத் தொடங்கும் பதிகம் பாடினார் திருஞானசம்பந்தர்.

இல்வாழ்க்கை என்னும் வினை தன்னைச் சூழ்ந்ததாகவும், இறைவனின் திருவடி சேர்வதே தனக்கு விருப்பம் என்றும் சம்பந்தர் பதிகம் பாடி முடித்ததும், அங்கு அசரீரி ஒலித்தது.

“சம்பந்தா! கருவறையில் என் லிங்கத் திருமேனியில் இருந்து இப்போது பெரும் ஜோதி தோன்றும். அந்த ஜோதியில் நீயும், உன் திருமணம் கண்டு வாழ்த்த வந்த அனைவரும் புகுந்து என்னோடு கலந்திடுக,” என்று அந்த அசரீரி ஒலித்தது.

சிவலோகத்தியாகர் ஆலயம் | Gnanasambandar's wedding
சிவலோகத்தியாகர் ஆலயம் | Gnanasambandar's weddingImage credit: Gemni AI

அசரீரி ஒலித்து முடிந்ததும், கருவறையில் இருந்த லிங்கத் திருமேனி இரண்டாகப் பிளந்தது. அதிலிருந்து சிவ ஜோதி தோன்றியது. அதைக் கண்டு ஒருசிலர் அச்சமடைந்தனர். சம்பந்தர் அவர்களுக்கு நமசிவாய மந்திரத்தை ஓதினார். சிவ மந்திரத்தின் மகிமையை எடுத்துச் சொன்னார்.

“காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி” எனத் தொடங்கும் பதிகம் பாடியபடியே கருவறைக்குள் நுழைந்தார். அவருடன் அங்கு கூடியிருந்த அனைவரும் உள்ளே சென்றனர். நமசிவாய மந்திரத்தை உச்சரித்தவாறே அங்கிருந்த ஜோதிக்குள் புகுந்தார் ஞானசம்பந்தர்.

அவருடன் அவர் மனைவியும், திருநீலகண்ட யாழ்ப்பாணர், திருநீலநக்க நாயனார், முருக நாயனார் மற்றும் கூடியிருந்த அனைவரும் ஜோதிக்குள் நுழைய, பிளவுபட்டிருந்த லிங்கத் திருமேனி ஒன்றாகி, ஜோதி மறைந்தது.

திருஞானசம்பந்தர் மற்றும் அவரின் மண விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் முக்தி அளித்த தலமாதலால், இத்திருத்தலம் முக்தி தலமாகவும் திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் மூல நட்சத்திரத் திருநாளில், சம்பந்தர் திருமண வைபவமும், சம்பந்தர் சிவ ஜோதியில் கலந்து இறைவன் திருவடி அடைந்த நிகழ்வும் இங்கு வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

இத்தலத்தின் ஆன்மிக வரலாற்று உண்மைகளையும், மறைந்திருக்கும் அதிசய நிகழ்வுகளையும் முழுமையாக அறிந்துகொள்வதன் மூலம், ஆன்மிகப் பயணங்களின் மீதான உங்கள் பக்தி ஞானமும் பாரம்பரிய கலாச்சாரத்தின் மேல் உள்ள ஈடு ஆழமடையும்.

logo
Kalki Online
kalkionline.com