

மாடியில் நட்ட ஆண்டெனா, பிளாக் & ஒயிட் டிவி, ஒலியும் ஒளியும் நிகழ்ச்சிக்காகக் காத்திருந்த ஹவுஸ் ஃபுல் வீடுகள் - ஞாபகம் இருக்கிறதா அந்தத் தூர்தர்ஷன் காலம்? 80களின் அந்தப் பொன்னான பொழுதுபோக்கு நாள்களுக்கு உங்களை ஒரு அடி பின்னோக்கி அழைத்துச் செல்கிறது இந்தக் கட்டுரை!
ஒரு நாற்பது வருடங்களுக்கு முன்பு 1985 வாக்கில் அப்போது அதிகமான டி. வி. சேனல்கள் இல்லை. தூரதர்ஷன் இப்போது போலல்லாமல் அப்போது மாடிகளில் ஆண்டெனாக்கள் நட்டி பிளாக் & ஒயிட் சாலிடர் டி. வி பெட்டிகள் மூலமாக சக்கை போடு போட்டுக்கொண்டிருந்த காலம்.
கேபிள் டி.வி, சாட்டிலைட் டிவி எல்லாம் வரவே இல்லை. இருக்கிற ஒரே ஒரு தூர்தர்ஷன் (பின்னாளில் பொதிகைத் தொலைக்காட்சி)யும் ரொம்பக் கிராக்கி பண்ணும்.
வெகு ஜனங்கள் ரசிக்கக் கூடிய சினிமா பாட்டுகளை வாரம் ஒரு முறை வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு ஒலியும் ஒளியும் நிகழ்ச்சியிலும், சனி ஞாயிறுகளில் மாலை 4 மணிக்கு மேல் முழு நீளத் தமிழ்த் திரைப்படங்களையும் ஒளிபரப்பும். சித்ரமாலா நிகழ்ச்சியில் பிற மொழிப் பாடல்களை பார்த்து ரசிக்கலாம். விசேஷ நாட்களில் திரைப்படங்களும் ஒளிபரப்புவார்கள்.
அதற்கு அடுத்தபடியாக வயலும் வாழ்வும் நிகழ்ச்சி. ஷோபனா ரவி, ஷோபனா ஜெகதீஷ் போன்றோரின் குரல் வளம் மட்டுமல்ல அவர்களின் ஆடை அலங்காரங்கள் கட்டும் புடவைகள் அணியும் நகை டிசைன்களுக்கும் ரசிகர்கள் ஏராளம்.
இன்னும் சொல்லப்போனால் செய்திகள் தொடங்குவதற்கு முன்னும் முடிந்த பின்னும் ஒலிக்கும் அந்த செய்தி இசைக்கே ரசிகர்கள் உண்டு. தெருவில் நடந்து போகும் மக்களே இந்த செய்திக்கான இசையைக் கேட்டால் நின்று ஜன்னல் இடுக்கு வழியாகத் தெரியும் அறிவிப்பாளர்களையும் செய்திகளையும் கேட்டு விட்டுத்தான் நகர்வார்கள். அந்த அளவுக்கு சினிமா போல தொலைக்காட்சியும் மக்களை காந்தம்போல கவர்ந்து இழுத்து கட்டிப்போட்டிருந்தது.
ராமாயணம், மஹாபாரதம், மால்குடி டேய்ஸ் நாத சங்கமம் இசை நிகழ்ச்சி. மலரும் நினைவுகளில் இசைக் கலைஞர்களின் நேர்காணல்கள் தொடர்கள் ரயில் ஸ்சிநேகம், கலாட்டாக் குடும்பம், வண்ணக் கோலங்கள், இன்றைய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் ஆரம்பப்பள்ளியாக இருந்த AV ரமணன் அபஸ்வரம் ராம்ஜி சேர்ந்து நடத்திய சப்தஸ்வரங்கள் லக்ஷ்மண் சுருதி ஷ்யாம் மெல்லிசை கச்சேரிகள் இப்படி சிலதுகள் ரசிக்கும்படியாகவும் பலதுகள் அரசு எந்திர கதையிலும் போய்க்கொண்டிருக்கும்.
எல்லாவற்றையும் இப்போ போலவே அப்பவும் ஜனங்கள் ஆ வென்று வாயில் ஈ நுழைவது தெரியாமல் ரசித்துக்கொண்டுதான் இருந்தார்கள்.
தூரதர்ஷனில் இராமாயணம், மகாபாரதம், சக்திமான் போன்ற தொடர்கள், ஒலியும் ஒளியும் சினிமா பாடல்கள், சில தமிழ் தொடர்கள் தினசரி செய்திகள் மக்களால் பெரிதும் விரும்பிப் பார்க்கப்பட்டன. ஒலியும் ஒளியும் சினிமா பார்க்க வரும் பக்கத்து வீட்டுக்காரர்களால் டி.வி இருக்கும் வீடுகள் ஹவுஸ் ஃபுல் ஆகி நிரம்பி வழியும்.
சன் டிவி, ராஜ் டிவி இரண்டும்தான் ஓரளவு வெளியில் தெரிந்த டி.வி. சேனல்கள். ராஜ் டி. வி.யில் மோகன் வைத்தியா அபஸ்வரம் ராம்ஜி போன்றோர் கர்நாடக சங்கீத நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்தனர்.
சன் டி.வி.யி ல் உமா பெப்சி உங்கள் சாய்ஸ் A.V ரமணன் சப்தஸ்வரங்கள், சன்.டி.வி. மாலா நேருக்கு நேர் நிகழ்ச்சிகள் மூலம் ரபி பெர்னாட் போன்றோர் பிரபலமாகி பிற்காலத்தில் ராஜ் டிவி சன் டிவி போன்ற தனியார் டிவிக்களுக்கு வந்து புகழ் பெற்றுக்கொண்டிருந்த நேரம். பெரும்பாலான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை சினிமாவும் சினிமா கலைஞர்களும் சினிமா சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகளுமே ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன.
அந்தக்கால படங்களுக்கும் அப்புறம் வந்து கொண்டிருக்கிற படங்களுக்கும் என்ன வித்தியாசம்? ஒன்றுமில்லை... ரீல்தான் வித்தியாசம். சம்பூர்ண இராமாயணம் 23 ரீல். மணாளனே மங்கையின் பாக்கியம் 22 ரீல். குலேபகாவலி 21 ரீல். அப்புறம் பீம்சிங், பந்துலு, ப.நீலகண்டன், ஸ்ரீதர் எம்ஜிஆர், சிவாஜி படங்களெல்லாம் 18 ரீல்.
மகேந்திரன், பாலச்சந்தர், பாரதிராஜா பாலுமகேந்திரா, படங்களிலிருந்து 16,15, ன்னு குறைந்து 13 ரீல் வரை வந்தது. இங்கிலீஷ் படம் எனில் எட்டு, பத்து ரீல்தான். டாகுமெண்டரிகள் சில நேரங்களில் மணிக்கணக்கில் ஓடும். ஷாட் ஃபிலிம் ரெண்டு நிமிஷத்திலிருந்து அரைமணி நேரம் வரை கூட ஓடலாம்.
எங்க வீட்டம்மா தூங்கப்போகும்போது பகலில் பார்த்த படங்களின் கதையையும் தொடர்களின் கதைகளையும் சொல்ல ஆரம்பிப்பார். பாலச்சந்தரின் ரகு வம்சம், கையளவு மனசு, காதல் பகடை, மர்ம தேசம், ரமணி VS ரமணி போன்ற தொடர்களின் கதைகள் எல்லாம் செவி வழிக்கதைகள்தான்.
எங்க வீட்டில் ஒரு வேலைக்கார அம்மா இருந்தார்கள். பூங்கொடி என்று பெயர். அருமையான கதை சொல்லி. அவரை அடிச்சிக்கிட இந்த பூலோகத்தில் கி.ரா. கதைகளில் கூட ஆளே கிடையாது.
கதையே இல்லாத படத்துக்குக்கூட தலை வாரி, பின்னி பூ வைத்து, பொட்டு வைத்து சிங்காரித்து ஜோடித்து அப்படியே சொக்க வைத்து விடுவார் அந்த 60 வயது பூங்கொடி. டி.ஆர்.படங்களைக்கூட நம்மை பார்க்க வச்சுடுவாருன்னா பார்த்துக்குங்களேன். அதுக்கு மேல என்னத்தைச் சொல்ல?
எங்க வீட்டுக்கு பின்னால் ஒரு பழைய தியேட்டர் இருந்தது. பூங்கொடிக்கு ஒரு அண்ணன் இருந்தார். அவர்தான் தியேட்டர் ஆபரேட்டர். அந்த தியேட்டரில் பூங்கொடிக்கு ஃப்ரீ பாஸ் உண்டு. அதனால் ஒரு படம் விடாமல் பார்த்துவிட்டு வந்து வேலையோடு வேலையாக முழுக்கதையையும் உணர்ச்சிபூர்வமாக சொல்லி மறுநாள் எங்களைப் பார்க்க வைத்து விடுவார். பின்னாளில் எப்பவாவது வாய்ப்பு கிடைத்து சினிமா தயாரிப்பாளரிடம் கதை சொல்ல நேர்ந்தால் நம்ம பூங்கொடி அக்காவைத்தான் அழைத்துச்செல்ல வேண்டுமென்று தமாஷாகப் பேசிக் கொள்வோம். இப்போது அந்தத் தியேட்டரும் இல்லை. அந்த அக்காவும் இல்லை.
கடந்த காலத் தொலைக்காட்சி அனுபவங்களை மீட்டுக்கொள்வதன் மூலம் 1980களின் பொன்னான பொழுதுபோக்கு கலாச்சாரத்தையும், இன்றைய டிஜிட்டல் யுகத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட அன்றைய எளிய வாழ்க்கை முறையையும் அறிந்துகொள்ளலாம்.