

ஆல்பர்ட் காம்யு, சோரன் கீர்க்கேகார்ட் மற்றும் தஸ்தயேவ்ஸ்கி ஆகியோரின் இருத்தலியல் தத்துவம் மூலம் வாழ்க்கையின் அர்த்தத்தை கண்டறியுங்கள்.
சற்று யோசித்துப் பார்த்தால் வாழ்க்கை என்பது ஒரு அபத்தமாகத்தான் தெரிகிறது.
அந்த அபத்தத்திலும் ஒரு அர்த்தத்தைத் தேடு என்பது ஆல்பர்ட் காம்யுவின் கோட்பாடாக இருக்கிறது.
யோசித்துப் பாருங்கள்... நாம் படிக்கும்போது ஒரு கனவோடு படிக்கிறோம். அந்தக் கனவானது நிறைவேற முடியாமல் போவதற்கான சந்தர்ப்பங்களும் நிறையவே இருக்கின்றன.
இருந்தாலும் அந்தப் போராட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆக போராட வேண்டும். அதில் ஒரு நீதி வேண்டும். அது சமுதாய நலனுக்காக இருக்கவும் வேண்டும். அப்படியான ஒரு வாழ்க்கை வாழ்வதே வாழ்க்கைக்கு அர்த்தத்தைக் கொடுப்பதாக அவர் எண்ணுகிறார்.
சுருக்கமாகச் சொன்னால் '‘நான் ஏன் பிறந்தேன்? வாழ்க்கைக்கு என்ன அர்த்தம்?” போன்ற கேள்விகளுக்கு உலகம் பதில் தராத நிலையை அவர் 'அபத்தம்' என்று சொல்கிறார்.
மனிதன் விடாமல் அர்த்தத்தைத் தேடி வாழ வேண்டும் என்பதுதான் அவருடைய சிந்தனை மற்றும் கோட்பாடு.
இப்படியாக வாழும்போது ஒருவனுக்கு மூன்று வகையான சிக்கல்கள் வருகின்றன...
1. உடல் தற்கொலை
2. தத்துவார்த்த தற்கொலை
3. அபத்தத்தோடு வாழும் கிளர்ச்சி
இவர் மூன்றாவது நிலையைத்தான் ஆதரிக்கிறார்.
வாழ்ந்து விடு! எப்படியாவது வாழ்ந்து விடு!!
முதல் உலகப்போரிலும் இரண்டாவது உலகப் போரிலும் அவர் கண்ட காட்சிகள் அவரை பல சிக்கல்களுக்கும், துயரங்களுக்கும் ஆட்படுத்தினாலும், அவருடைய சிந்தனைகள் நம்மை வாழ வைத்துக்கொண்டிருக்கின்றன.
அவர் எழுதிய ‘அந்நியன்’ (‘stranger’) அல்லது ‘தி பிளேக்’ (‘The Plague) ஆகிய நாவல்கள் வாசகர்களுக்கு பல உள்ளார்ந்த புரிதல்களை ஏற்படுத்துகின்றன.
சோரன் கீர்க்கேகார்டின் கோட்பாடும் ஆல்பர்ட் காம்யுவின் கோட்பாட்டை ஒட்டி வருகிறது.
சோரன் கீர்க்கேகார்டின் தத்துவத்தையும் மூன்று பாகங்களாக பிரிக்கலாம்.
1. தனிமனிதன்,
2. அவன் உள்ளுணர்வு தெரிவுகள்,
3. அவனுக்கும் கடவுளுக்குமான உறவு
சுருக்கமாகச் சொன்னால்... மனிதர் கூட்டமாக அல்ல, தனிப்பட்ட உள்ளமாக எப்படித் தன்னைக் கண்டுபிடிக்கிறார் என்பதில்தான் அவரது கவனம் மற்றும் தத்துவமானது விளக்கப்படுகிறது.
மனிதன் தனிமையில், தன் உள்ளக் கவலை, பயம், குற்ற உணர்வு ஆகியவற்றை எதிர்கொண்டு எடுத்துக்கொள்ளும் தீர்மானங்களினால்தான் உண்மையான 'நான்' உருவாகிறது என்று கூறுகிறார்.
அதாவது ஒரு தனி மனிதனுடைய மன எழுச்சியே - leap of faith - அவனை அர்த்தமுள்ளவனாக மாற்றுகிறது.
சொல்லப்போனால் அவனுக்கு ஏற்படக்கூடிய பயம், அச்சம், இயலாமை அதன் மூலம் ஏற்படக்கூடிய உணர்வுகள், அந்த உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் காரணிகள், அதன் மூலம் கிடைக்கும் விழுமியங்கள் ஆகியவை எல்லாம் சேர்ந்து ஒருவருடைய உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
அதே சமயத்தில் மதம் ஏற்படுத்தும் அடிமைத்தனத்தை சோரன் ஏற்கவில்லை.
மாறாக அவனே ஒரு கடவுளை தனக்குத்தானே கண்டுகொள்ள வேண்டும்.
அதற்கு மதத்தினுடைய நம்பிக்கை ஒரு மார்க்கத்தை ஏற்படுத்த வழி செய்யும்.
கடவுள்–மனிதன் உறவு நேரடி, உள்ளார்ந்த, தனிப்பட்ட தொடர்பு; மதம் என்பது சமூகச் சடங்குகளைப் பின்பற்றுவதல்ல, தனி மனிதன் உள்ளம் முழுதும் இறைவனை நோக்கிப் போராடும் ஓர் உள் பயணம் என்று அவர் வலியுறுத்துகிறார்.
‘கூட்டம்’ என்ற சமூகம் மனிதரை மந்தமாக்கி, உண்மையான நெஞ்சுரம் கொண்ட முடிவுகளை எடுக்கத் தடையாக இருக்கும்; அதற்கு மாறாக, தனிமனிதனின் நேர்மை மற்றும் உள்ளார்ந்த பொறுப்பை அவர் உயர்த்திப் பேசுகிறார்.
கடைசியாக உலகத்தினுடைய மிகச் சிறந்த எழுத்தாளரான தஸ்தயேவ்ஸ்கியின் தத்துவத்தைச் சுருக்கமாகச் சொன்னால்:
அவருடைய தத்துவத்தை நான்கு பாகங்களாக பிரித்து காணலாம்....
1. மனிதன் முழு சுதந்திரம் கொண்டவன்;
2. அந்த சுதந்திரத்துடன் வரும் குற்ற உணர்வு, துன்பம், பொறுப்பு ஆகிய உள்ளுணர்வுகள்தான் ஒருவனை இந்த உலகத்திற்கு அடையாளம் காட்டுகிறது.
3. அந்தச் சுதந்திரமானது மனிதனை இயற்கை, சமூகம், தர்க்கம் ஆகியவற்றைக் கடந்து, தன் விருப்பப்படி முடிவு எடுக்கக் செய்யும் என்று அவர் விளக்குகிறார்.
4. அவ்வாறு எடுக்கும் முடிவுக்கு அவன் முழு பொறுப்பும் ஏற்க வேண்டும்.
தஸ்தயேவ்ஸ்கி ஒரு துன்பியல் வாதி என்றே சொல்லிவிடலாம்...
அவருடைய ‘குற்றமும் தண்டனையும்’ இதற்கு ஒரு உதாரணம்.
மரணத்தின் விளிம்பிற்கே சென்றுவந்த தஸ்தயேவ்ஸ்கி இவ்வாறு சொல்கிறார்: ''துன்பத்தைச் சமாளிக்கும்போதுதான் மனத்தின் ஆழம், பாவ உணர்வு, மன்னிப்பு, அன்பு ஆகியவை வெளிப்படுகின்றன.''
வாழ்க்கையின் வெறுமை, மரணம் நிச்சயம், உலகம் அபத்தம் போன்ற இருத்தலியல் கேள்விகள் அவரது நாவல்களில் மீண்டும் மீண்டும் தோன்றுகின்றன.
துயரங்களைத் தாண்டி இருத்தலியல் தத்துவம் காட்டும் வெளிச்சம்:
“வாழ்க்கை எப்படி இருக்கிறதோ அப்படியே அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்ற அணுகுமுறையால், மனிதன் வெறுமையிலும் அர்த்தம் தேடும் போராட்டமே அவரது "தத்துவம்".
மனிதர்களில் இரண்டு வகையான பிரிவுகளைப் பார்க்கிறார்.
அசாதாரண மனிதன்- தன் இலட்சியத்திற்காக பிறரைத் துன்புறுத்தி வாழ்பவன்.
சாதாரண மனிதன் - "சரி" என்று நம்பும் எல்லா அபத்தமான எல்லைகளையும் கேள்வி கேட்காமல் அப்படியே அடிபணிந்து நடப்பவன்.
நாம் அன்பே சிவம் என்று சொல்கிறோம். அவரோ ‘அன்பும், கருணையும்’ இருக்கும் பட்சத்தில் அதையே அவர் மதமாக காண்கிறார்.
இவருடைய நாவல்கள் இவற்றை மையப்படுத்தியே எழுதப்பட்டிருக்கின்றன.
மேலே சொன்ன மூவரும் இருத்தலியல் (Existentialism) வாதிகள்.
ஒவ்வொருவரும் தங்களுடைய இருப்பை கண்டுகொள்ள வேண்டும். அதற்கான முயற்சியே தத்துவார்த்த புரிதல்.
"வாழ்க்கையின் தத்துவம் செயலில்தான் இருக்கிறது"
'Philosophy-in-action is more important than philosophy perse'