

பத்மா கோமாவில் போய் இன்றோடு நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. ராஜசேகரனும் அவளுக்கு நினைவு திரும்பவரும் என்று எதிர்பார்த்துக்கொண்டே இருந்தான்.
பத்மாவிற்கும் ராஜசேகருக்கும் திருமணமாகி பத்து வருடங்களாகிவிட்டன. அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. எத்தனையோ முறை முயற்சி செய்து குழந்தை பிறக்காத காரணத்தினால், ‘உனக்கு நீ; எனக்கு நான்’ என்று தனக்குத்தானே இருவரும் சமாதானப்படுத்திக்கொண்டு வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருந்தார்கள்.
நான்கு வருடத்திற்கு முன் இருவரும் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்த சமயம், எதிரிலே வந்த லாரியை ஓவர் டேக் பண்ணி சடன் பிரேக் போட்டார் ராஜசேகர். அதன் காரணமாக பின்னால் இருந்த பத்மா தூக்கி எறியப்பட்டாள். அன்று மண்டையில் பலத்த அடிபட்டு கோமாவில் போனவள்தான், இன்னும் நினைவு திரும்பவில்லை.
வீட்டிலேயே நர்ஸை வைத்து பத்மாவை பார்த்துக் கொண்டிருக்கிறார் ராஜசேகர்.
அன்றைய தினம் எப்போதும்போல் எழுந்துகொண்டு தன் வேலைகளைப் பார்த்துவிட்டு வழக்கம்போல பத்மாவின் படுக்கைக்குச் சென்று பார்த்தார். என்ன ஆச்சரியம்! அவளுடைய கால்களில் விரல்களின் அசைவு தெரிந்தது. அதைப் பார்த்த ராஜசேகருக்கு போன உயிரே திரும்பி வந்ததுபோல் இருந்தது.
பிறகு அவளை மெதுவாகத் தட்டிக்கொடுத்து பேசிக்கொண்டே இருந்தார். கொஞ்சம்கொஞ்சமாக அவளும் கண்களைத் திறக்க முயற்சி செய்தாள்.
ஒருவழியாக கண்களைத் திறந்து பார்க்க ஆரம்பித்தாள்.
ராஜசேகருக்கு அளவில்லாத சந்தோஷம்.
"பத்து! பத்து! என்னம்மா அப்படிப் பார்க்கற. நான்தான்மா... உன்னோட ராஜு..." என்றார்.
ஆனால், அவளுக்கோ எதுவும் நினைவில் இல்லை.
ஒன்றுமே புரியாமல் திகைத்துபோய் இருந்தாள்.
இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த நர்ஸ், "சார், இப்ப அவங்ககிட்ட எதுவும் கேக்காதீங்க... எதுவும் சொல்லாதீங்க... அவங்க நாலு வருஷம் கழிச்சி கண் முழிச்சிருக்காங்க. முதல்ல அவங்களோட பல்ஸ், ஹார்ட் பீட், எல்லாத்தையும் செக் பண்ணனும். நீங்க முதல்ல டாக்டருக்கு கால் பண்ணுங்க..." என்றாள்.
டாக்டரும் வந்துவிட்டார். எல்லாவற்றையும் சோதித்தபிறகு டாக்டர் நர்ஸிடம் மருத்து என்னென்ன கொடுக்க வேண்டும் என்று சொன்னார். மேலும், பத்மாவை மெதுவாக படுக்கையிலிருந்து எழுப்பி நடக்க வைக்க முயற்சிக்குமாறு கூறினார்.
பிறகு ராஜசேகரிடம், "மிஸ்டர் ராஜசேகர்... உங்க மனைவி பரிபூர்ணமாக கோமாவிலிருந்து வெளியே வந்துட்டாங்க... ஆனா..."
"என்ன டாக்டர், ஏன் ஆனான்னு இழுக்குறீங்க...?"
"அவங்களுக்குத் தலையில் பலத்த அடிபட்டதால பழசு எல்லாமே மறந்து போயாச்சு. எதுவுமே இப்ப அவங்களுக்கு நினைவில் இல்ல.. ஸோ, இப்பதான் நீங்க ரொம்பவே பொறுமையா அவங்கள பத்திரமா பாத்துக்கணும்..."
"டாக்டர், இப்ப நான் என்ன செய்யறது?"
"அவங்களுக்கு மெதுமெதுவா குழந்தைப் பருவம்தான் நினைவிற்கு வரும். அதனால நீங்க அவங்களை, அவங்க அம்மா வீட்டுக்குக் கூட்டிண்டு போங்க."
"சரி டாக்டர்," என்று சொல்லிவிட்டு ராஜசேகர் அவரை வழி அனுப்பி வைத்தான்.
கொஞ்ச நாட்களுக்குப் பத்மாவிற்கு எதுவுமே புரியவில்லை, நினைவிற்கும் வரவில்லை. ராஜசேகரை படுத்தி எடுத்துவிட்டாள். ஆனால், ராஜசேகரோ நிதானமாகப் பொறுமையோடு அவளை குழந்தையைப்போல பக்குவமாக பார்த்துக்கொண்டார்.
நாளாக நாளாக பத்மாவிற்குக் குழந்தைப் பருவம்தான் நினைவிற்கு வர ஆரம்பித்தது.
ராஜசேகரிடம் "அம்மாகிட்ட கூட்டிண்டு போ" என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்தாள். சாப்பாடு ஊட்டினால் அதை தட்டினாள். ரொம்பவுமே படுத்தி எடுத்துவிட்டாள்.
ராஜசேகரால் மேற்கொண்டு நிலைமையைச் சமாளிக்க மிகவுமே கடினமாக இருந்தது.
அவர் எங்க போய் அவளுடைய பெற்றோரை கூட்டிக்கொண்டு வருவார்? இருவருமே இறந்துவிட்டார்கள். அவளுக்குக் கூடப்பிறந்தவர்களும் இல்லை. என்ன செய்வதென்று அறியாமல் மனுஷன் திக்குமுக்காடிப் போனார்.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும்போல நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன. அவளிடம் 'நாளை கூட்டிக்கொண்டு போகிறேன்', 'நீ சாப்பிட்டால் சாக்லேட் வாங்கித் தருவேன், ஐஸ்க்ரீம் வாங்கித் தருவேன்' என்றெல்லாம் கூறி அவளை சாப்பிட வைத்து தூங்க வைத்து நாட்களைத் தள்ளிக்கொண்டு வந்தார்.
இவளுக்கு விபத்து ஏற்பட்ட காரணத்தினால் வங்கியின் மேலாளராக இருந்த இவர் அப்போதே விருப்ப ஓய்வு வாங்கிக்கொண்டு வீட்டிலேயே இருந்தார். இவருக்கு அப்பாவின் சொத்து இருக்கும் காரணத்தினால் இதுவரை பணப் பிரச்னையுமில்லாமல் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது.
காலமும் சுழன்றுகொண்டே இருந்தது. திடீரென ஒரு நாள் பத்மாவின் பால்ய சிநேகிதி அவளைப் பார்க்க வந்தாள். பத்மாவை பார்ப்பதற்கு முன்னாலேயே ராஜசேகர் அவளிடம் நடந்ததை எல்லாம் கூறிவிட்டு... "சரி, நீங்க உள்ள வாங்க.. அவளுக்கு தெரியுதான்னு பார்க்கலாம்..." என்று கூறி உள்ளே அழைத்தான்.
அவளை பார்த்த உடனேயே பத்மா, "ஏய்... நீ... நீ" என்று யோசிக்க ஆரம்பித்தாள். மிகவும் பார்த்த முகம், ஆனால் பேர் ஞாபகத்திற்கு வரவில்லை என யோசித்துக்கொண்டே இருக்கும்போதே,
தீபா, "என்னடி பத்மா... என்னைத் தெரியலையா? அடிப்பாவி நான் தீபாடி. என்னடி கல்யாணமானப் பிறகு உன்னுடைய நெருங்கிய தோழியான என்னையே மறந்துவிட்டாயா?" என்று எதுவும் தெரியாததுபோல் கேட்டாள்.
பத்மா, "ஏய் தீபா எப்படி இருக்கிற? இப்பதான் என் ஞாபகம் வந்துதா... ஆமாம் நீ ஏண்டி இப்படி ஒரேடியா சொல்றே? நம்ம இரண்டு பேருக்கும் என்ன வயசாறது? நீ என்னமோ அதுக்குள்ள எனக்குக் கல்யாணம் ஆயிடிச்சுன்னு சொல்றே...?"
"ஏய், முட்டாள், நீதான் உளறறே? நம்ம இரண்டு பேருக்கும் இப்ப 38 வயசு ஆகிறது. முதல்ல உனக்குத்தான் கல்யாணம் ஆச்சு. ஆறு மாசம் கழிச்சு எனக்கும் ஆச்சு..."
"அய்யோ, என்னடி தீபா.. நீ என்னன்னமோ சொல்ற... எனக்கு எதுவுமே புரியலயே... சரி, முதல்ல இதைச் சொல்லு. இதோ என் கூடவே இருக்காறே இவர் யார்ன்னு உனக்குத் தெரியுமா?"
"அடிப்பாவி, ஏண்டி கட்டின புருஷனைக்கூட மறந்துட்டியா?"
"என்னடி சொல்றே? இவர் என்னோட புருஷனா...?"
"அம்மா தாயே... நீ ஆளை விடு.. இன்னும் சிறிது நேரம் இங்கிருந்தால் நான் பைத்தியம் ஆகிவிடுவேன்... நான் கிளம்புகிறேன்" என்று கூறிவிட்டு தரதரவென்று வெளியே வந்துவிட்டாள்.
வெளியே வந்து ராஜசேகரனிடம், "சாரி சார்... என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்... அவளுக்கு எப்படியாவது ஏதாவது ஞாபகம் வரவேண்டும் என்ற காரணத்தினால்தான் இதையெல்லாம் பேசினேன்," என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.
ராஜசேகருக்கு இன்னும் முழி பிதுங்கிவிட்டது. பத்மாவை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தார். பத்மாவும் வெகு நேரமாக படுக்கையிலேயே உட்கார்ந்துகொண்டு எதையோ பறிகொடுத்தது போல யோசித்துக்கொண்டே இருந்தாள்.
பத்மா, படுக்கையைவிட்டு எழுந்து நேராக ராஜசேகரிடம் வந்தாள்... "நீ நிஜமாகவே என்னுடைய கணவரா?" என்று கேட்டாள்.
அதற்கு அவர், "இல்லை... இல்லை... நான் உன் கணவர் இல்லை" என்றார்.
"அப்ப அந்த தீபா பைத்தியம்தானே.. ஏதோ உளறிவிட்டு போயிட்டா.. ஆமா அப்ப நீங்க யாரு?" என்றாள்.
"நான் உன்னுடைய அப்பா" என்றார் ராஜசேகர்.
"என்னது, நீங்க என் அப்பாவா?" என்று மறுபடியும் அவரைப் பார்த்து யோசித்துக்கொண்டிருந்தாள்.
பிறகு சட்டென சுதாரித்துக்கொண்டு "சரி, நீங்க என் அப்பாதானே... நான் என்ன கேட்டாலும் வாங்கித் தருவீங்களா...? என்ன கேட்டாலும் செய்வீர்களா?" என்றாள்.
அவரும், "ஆமாண்டா... நீ என்ன கேட்டாலும் செய்வேன்டா... சொல்லுடா.. உனக்கு என்னடா வேணும்?" என்று அவளை ஒரு குழந்தையாகப் பாவித்து கேட்டார்.
"இப்ப எனக்கு ரொம்ப பசிக்குது. சாப்பாடு ஊட்டிவிடு" என்றாள். அவரும் கண்களில் கண்ணீர் மல்க தட்டிலே சுடச்சுட சாதத்தைப் போட்டு நெய்யை ஊற்றி பருப்பைப் போட்டு பிசைந்து ஒரு குழந்தைக்கு ஊட்டுவதுபோல் அவளுக்கு ஊட்டி விட்டார்.
மற்றவர்களுக்கு எப்படியோ தெரியாது... ஆனால் அவரைப் பொறுத்தவரையில், பத்மா அவருடைய குழந்தை... பத்மாவை பொறுத்தவரையில் அவர் அவளுக்குத் தந்தை.
இந்தக் காரணத்தினால்தானோ என்னவோ கடவுள் அவர்களுக்குக் குழந்தைகளைக் கொடுக்காமல் இருந்துவிட்டார்...?