

காலை 6 மணி. காபியை சுவைத்தபடி பால்கனிக்கு வந்தாள் மாலதி. பக்கத்து வீட்டிலிருந்து பிரியா கத்துவது கேட்டது. பிரியா சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்கிறாள். இரவு நேரப் பணிக்குச் சென்று அதிகாலையில் வீடு திரும்புவாள். ஆனால் வீட்டிற்கு வந்ததும் அவளுக்காகக் காத்திருப்பது ஓய்வல்ல. சமையல், வீட்டு வேலை, மற்ற குடும்பப் பொறுப்புகள் என்று எல்லாவற்றையும் அவளே கவனிக்க வேண்டும். கணவரும் வீட்டு வேலைகளில் பெரிதாக உதவுவதில்லை.
பிரியாவின் அம்மா தன் பெண் பிக்கல் பிடுங்கல் இல்லாமல் இருக்க வேண்டும் என்று மாமியார், மாமனார் யாரும் இல்லாத இடமாகப் பார்த்து மகளுக்கு திருமணம் செய்து வைத்தாள். ஆனால் குழந்தைகள் பிறந்த பிறகு அவளுடைய வாழ்க்கை, அலுவலக வேலை, வீட்டு வேலை என அழுத்தம் நிறைந்ததாகி விட்டது.
கணவன் சிறிய மொபைல் போன் கடை வைத்திருக்கிறான். காலை பத்து மணிக்கு கிளம்பினால் இரவு இவள் வேலைக்கு கிளம்பும் போது தான் வருவான். பிரியாவால் நல்ல சம்பளம் கிடைக்கிற தன் வேலையையும் விடமுடியவில்லை.
சரியான ஓய்வில்லாமல் எப்போதும் ஏதாவது ஒரு வேலையைச் செய்துகொண்டே, எரிச்சலுடன் பேசுவதும், சத்தம் போடுவதுமாக அவளுடைய நாட்கள் கழிகின்றன. அவளைப் பார்க்கும்போதெல்லாம் மாலதியின் மனம் வேதனைப்படும்.
'பாவம். இரவு முழுவதும் வேலை செய்துவிட்டு வந்தாலும் நிம்மதியாக இருக்க முடியவில்லையே! இந்த காலத்திலும் திருமணம் என்றால் ஒரு பெண்ணுக்கு இவ்வளவு சுமையா?' இந்த எண்ணம் மாலதியின் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது.
மாலதியும் தன் பெண் அஷ்விதாவிற்கு நல்ல வரனாகப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். ஒன்றும் சரியாக அமையவில்லை. அவளுடைய ஒரே மகள் அஷ்விதா. நன்றாகப் படித்து, சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் பட்டம் பெற்று நல்ல வேலையில் இருக்கிறாள்.
மகளின் படிப்பு, வேலை, எதிர்காலம் என்று எல்லாவற்றிலும் பெருமைப்பட்ட மாலதிக்கு இப்போது ஒரே ஒரு கவலைதான் அஷ்விதாவின் திருமணம்.
ஒரு நாள் அஷ்விதாவுக்கு ஒரு நல்ல வரன் வந்தது. நல்ல படிப்பு, நல்ல வேலை, நல்ல குடும்பம் என்று எல்லோரும் பாராட்டினார்கள். ஆனால் மாலதிக்குச் சற்று குழப்பம். மகள் வேலையையும் பார்த்துக்கொண்டு குடும்பத்தையும் கவனிக்க வேண்டியிருக்குமே. சமாளிக்க முடியுமா? ஆனால் மகள் ஆஷூ எதைப் பற்றியும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
பையன் அம்மா அப்பாவுடன் பெண் பார்க்க வந்தான். பையனின் அம்மா நல்ல குணமுடையவராகத் தெரிந்தார். பையனும் அஷ்விதாவிடம் அன்பாகவும் மரியாதையுடனும் பேசினான். மாலதி மகளின் வேலையைப் பற்றி பேச்செடுத்தபோது பிள்ளையின் அம்மா “உங்கள் மகள் CA படித்து நல்ல வேலையில் இருப்பது என்பது சாதாரண விஷயமா? எனக்குத் தெரியும் அது எவ்வளவு கஷ்டம் என்று. திருமணத்திற்குப் பிறகு அவள் இஷ்டப்படியே வேலைக்குப் போகட்டும்” என்றபோது மாலதி தயங்கியபடி, “அஷ்விதாவிற்கு படிப்பு, அலுவலகம் தவிர சமையல், வீட்டு வேலைகள் எதுவும் பழக்கமில்லை” என்று இழுக்க, பையனின் அம்மா “இந்தக் காலத்தில் இது ஒரு பிரச்னையே இல்லை. நீங்கள் கவலையே படவேண்டாம். நாங்கள் எங்கள் மகளைப் போல் பார்த்துக் கொள்வோம்,” என்றாள்.
அப்படியே நடந்தது. அஷ்விதா திருமணமும் முடிந்து புகுந்த வீட்டில் ராணியாக வலம் வருகிறாள். அவளை மகளைப் போலத் தான் புகுந்த வீட்டில் பார்த்துக் கொள்கிறார்கள். இதோ பேரனும் பிறந்து விட்டான். அவளுடைய வேலை, விருப்பங்கள், சுதந்திரம் ஆகியவற்றுக்கு மதிப்பளிப்பதாக அமைந்தது புகுந்த வீடு.
மாலதிக்கு மனநிறைவு ஏற்பட்டது. அவள் புரிந்துகொண்டாள். ஒரு பெண்ணின் கஷ்டமான வாழ்க்கையைப் பார்த்து இன்னொரு பெண்ணின் எதிர்காலத்தைப் பயத்தால் தீர்மானிக்கக் கூடாது. மாமியார், மாமனார் இல்லாதது மட்டும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை எளிதாக்கிவிடாது.
எல்லாமே அந்தந்த மனிதர்களின் புரிதலையும் அன்பையும் பொறுத்தது. திருமணம் என்பது வாழ்க்கையை இழப்பதற்காக அல்ல; குடும்பத்தில் ஒருவருக்கொருவர் துணையாக இருந்து வாழ்க்கையை அழகாக்குவதற்காக!