

சில செல்வந்தர் வீடுகளில் தட்டு முட்டுச் சாமான்கள் போட என ஒரு அறை இருக்கும். அது மொட்டை மாடியில் வாட்டர் டேங்க் கீழே அல்லது அண்டர்கிரவுண்டில் கார் பார்க்கிங் ஏரியா கீழே.
ஒரு ஆராய்ச்சி செய்து என்ன என்ன உள்ளே இருக்கு என லிஸ்ட் எடுத்தால்.. பெயிண்ட் டப்பாக்கள், பழைய காற்று போன சைக்கிள், பித்தளைப் பாத்திரங்கள் அண்டா, குண்டான், சொம்பு, தவலை...
அந்தப் பாத்திரங்கள் அந்த வீட்டு அம்மணி பங்கஜத்தின் மாமியார் போன 50 வருடங்களுக்குமுன் புழங்கியது.
அதை எடைக்குப் போட்டு ஒரு பட்டுப் புடவை வாங்கித்தர தினமும் நச்சரிப்பார். ஆனால், அந்த வீட்டு எஜமானர் ராமநாதன் “இது எங்க அம்மாவுக்கு எங்கப் பாட்டி வச்சிட்டுப் போனது. இருக்கட்டும்...” என்பார்.
“வச்சுக்குங்க.. வச்சுக்குங்க.. சரித்திர ஆராய்ச்சியாளர்கள் ஒரு 200 வருஷம் கழிச்சு நல்ல விலைக்கு எடுக்க மாட்டாங்க…போட்டோ எடுத்து வாட்ஸ் அப்பில்தான் போடுவாங்க” என்றாள் பங்கஜம்.
இருந்தாலும் அந்தப் பாத்திரங்கள் விரைவில் வெளியேறும் நாள் வந்துவிட்டது எனக் கொள்க.
அந்த அறையில் ஒரு ஆறு அடிக்கு இரண்டரை அடி அளவில் ஒரு மரப்பெட்டி இருக்கும். அதற்குள் ஒரு வீணை இருக்கும். ஆம் அது வீணைப்பெட்டி.
அந்த வீட்டுக் குழந்தை ஸ்வரஇனியா பத்து வயதில் வீணை கற்றுக்கொள்ள ஆரம்பித்தபோது வாங்கியது. இனியா அப்போது ஆறாம் வகுப்பு படித்தாள். தஞ்சாவூரில்தான் அந்த வீணை வாங்கிவந்தார் அப்பா ராமநாதன். வீணை ரூபாய் ஏழாயிரம், பெட்டி தனியாக ரூபாய் நாலாயிரம்.
வீணை குப்பய்யர் வித்வானின் தூரத்துச் சொந்தம் ஒரு பாட்டி இருந்தார். அந்தப் பாட்டியின் கொள்ளுப் பேத்திதான் வீணை டீச்சர் பாலாமணி.
வாரத்தில் இரண்டு நாட்கள் வீணை கிளாஸ். சனி, ஞாயிறு.
மாலை ஐந்து முதல் ஏழு வரை. பாலாமணி டீச்சருக்கு இரண்டு நாளும் மாலை காபி, டிபன் சமயத்தில் இரவு பலகாரமும் இங்கேதான்.
இனியா முதலில் ஸ்வரங்கள், கீதம், ஸ்வரஜதி, வர்ணத்தில் சில ராகங்கள் வரை பயின்றாள். அதற்குள் 10 ஆம் வகுப்பு தேர்வுக்குத் தயாராகும் நிலை வந்துவிட்டது.
வீணை கிளாஸ் டயத்தில் கணக்கு, ஃபிஸிக்ஸ், கெமிஸ்ட்ரி ட்யூஷன் போனாள். வீணை அப்பியாசிக்க நேரமே கிடைக்கவில்லை.
ட்யூஷன் டீச்சர் பாலாமணி மட்டும் சனி, ஞாயிறு வந்து வீணையை துடைத்து, சுருதி மீட்டி சில கீர்த்தனைகளை வாசித்து, டிபன் காபி சாப்பிட்டுப் போனார். ராமநாதன் சம்பளத்தை நிறுத்தவில்லை.
தீபாவளிக்குப் புடவை - ஜாக்கெட் தட்சிணை உண்டு. ஸரஸ்வதி பூஜை அன்று வீணை பெட்டிக்குச் சந்தனப் பொட்டு, பூ வைத்து சாம்பிராணி போடுவார்கள்.
வீடு இடித்துக் கட்டியபோது வேஸ்ட் சாமான்கள் போட பங்கஜம் வாட்டர் டேங்க் கீழே ஒரு அறை கட்டச் சொன்னார். அதில் பழைய சோபா சேர்கள் போய் அமர்ந்தன.
இனியா பிளஸ் 2 முடித்து காலேஜில் பி.காம். படித்தாள். கடைசி வருஷம் பரிட்சை எழுதி முடித்த கையோடு கல்யாணம் ஆகி அமெரிக்கா போய்விட்டாள். மாப்பிள்ளை மென்பொருள் பொறியாளர்.
இப்போது பாலாமணி வீணை டீச்சருக்கும் வயதாகிவிட்டதால் வருவதில்லை. ஒரு முறை அம்மணி பங்கஜம் அவரை ஆஸ்பத்திரியில் போய்ப் பார்த்து ஐந்தாயிரம் பணம் வைத்தியச் செலவுக்குத் தந்துவந்தார்.
ஒரு முறை வீடு சுத்தம் செய்ய வந்த ஆட்கள் வீணையைப் பெட்டியோடு மாடி ரூமுக்குள் கொண்டு வைத்தார்கள். பின் அதை இறக்கவில்லை யாரும். அங்கேயே குடிகொண்டது வீணை.
காலம் ஓடியது. வீட்டு அம்மணிக்கும் வயதாகிவிட்டது. எப்போதாவது மாடி ரூமைச் சுத்தம் செய்வாள். முகத்தில் மாஸ்க் போட்டு. இப்போது முடிவதில்லை.
அப்பா ராமநாதன் அந்தப் பக்கமே எட்டிப்பார்ப்பதில்லை. ரிடையர் ஆகி அவர் உண்டு அவர் ஃபோன் உண்டு என சித்தர் நிலை அடைந்தார்.
சாப்பாடு - தூக்கம் – ஃபோன் - சில பல வீட்டு வேலைகள் என காலம் கழிந்தது.
திடீரென பங்கஜம் காலமாகிவிட்டார். ஹார்ட் அட்டாக். அமெரிக்காவில் இருந்து குழந்தைகள், கணவருடன் இனியா வந்தாள். அப்பா பிரமை பிடித்தவர்போல் இருந்தார்.
ஒரு மாதம் இருந்தாள் இனியா. ஒரு நாள் டிவியை குழந்தைகள் போட்டபோது ஒரு படம் ஓடியது. 'வசந்த மாளிகை.'
வாணி ஸ்ரீ அந்த ஆடம்பர அரண்மனையில் பணி புரிய வந்தவர் பூஜை அறையில் வீணை மூடி இருப்பதைப் பார்த்து தூசி தட்டி மீட்டுவார். பின் பாடுவார்.
“கலைமகள் கைப் பொருளே உன்னைக் கவனிக்க ஆள் இல்லையோ... நிலையில்லா மாளிகையில் உன்னை மீட்டவும் விரல் இல்லையோ...” கண்ணதாசன் வரிகள்.
இனியாவுக்கு சுருக்கென்றது.
வீணை.
மாடிக்கு ஓடினாள்.. கணவருடன் அதை இறக்கிப் பெட்டியைத் திறந்தாள். வீணையை எடுத்துத் துடைத்து, உள்ளே வீணை ட்யூஷன் நோட்டு இருந்தது... எடுத்தாள்.
அதில் தேதியைப் பார்த்தாள். தனக்கு அப்போது வயது பத்து. முதல் பாடம் பிள்ளையார் சுழி போட்டு தேதி 14.10.1986. டீச்சர் பாலாமணி கையெழுத்து.
ஸ்வரங்கள்… ராகம் மாயா மாளவ கௌளை ஆதி தாளம், என இருந்தது. முதல் பாடம்
ஸ ரி க ம ப த நி ஸ,
ஸ நி த ப ம க ரி ஸ.
ராகம் மட்டும் மாயா இல்லை… இந்தக் காலமும் உலகமும்தான் என இனியா உணர்ந்தாள்.
வீணை டீச்சர் பாலாமணி கண் முன் தெரிந்தார்.. இனியா சுருதி சேர்த்து மீட்டினாள். ஒரு கீதத்தை. குழந்தைகள் வேடிக்கை பார்த்தன.
அமெரிக்கா திரும்பும்போது, “அப்பா வீணை பெட்டியை மேலே வச்சிடலாமா.”
அப்பா சொன்னார்.. “இல்லே... இங்கேயே இருக்கட்டும்.”
அப்பா வாராவாரம் அதைத் துடைக்கிறார்.
நண்பர் ஒருவர் வயலின் வாசிப்பார். அவர் மூலம் தெரிந்தவர் ஒருத்தரிடம் வீணை வாசிக்கக் கற்று வருகிறார் ராமநாதன்..
தினசரி ஒரு மணி நேர பயிற்சி.
கீர்த்தனை வரை வந்து விட்டார்.
“தெலியலேரு ராமா.. பக்தி மார்க்கமூனு…” தியாகய்யர் கீர்த்தனை.. தேனுகா ராகம்
மனம் உருக வாசித்தார்…ஒரு நாள்.
வீணை மடியில் இருக்க அதன் மேல் சாய்ந்தார். இராமரின் பாதத்தை நோக்கிச் சென்றது அவர் ஆன்மா.