சிறுகதை: கல்யாண டைரி!

பெண்கள் தன்னம்பிக்கையோடு வாழ்க்கையில் முன்னேற வேண்டும்; அதே சமயம் தங்களைப் பெற்று வளர்த்த பெற்றோரின் ஆசைகளையும் கடமைகளையும் மதிக்க வேண்டும் என்பதே இக்கதையின் ஒட்டுமொத்த நீதியாகும்.
Bhuvana, with husband, seeks blessings from Soundarya Natarajan
Bhuvana, with husband, seeks blessings from Soundarya NatarajanAI Image
Updated on
MM strip
MM strip

அம்மா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கோங்க என்ற பார்வதியைப் பார்த்து, “ஏன் பார்வதி, இதெல்லாம் பண்ற? நான் என்ன அப்படி பெருசா செஞ்சுட்டேன்?” என்று மென்மையாகச் சிரித்துக் கொண்டே புவனாவின் தோளைத் தொட்டு எழுப்பினார் சௌந்தர்யா.

“நல்லா இரும்மா புவனா… நீ படிச்ச பொண்ணு. உனக்கு அதிகமா எதுவும் எடுத்துச் சொல்ல வேண்டியது இல்லை. சொல்ல வேண்டியது எல்லாம் நான் முதலிலேயே சொல்லி இருக்கிறேன்.

நீயும் உன் கணவனும் நல்லா வாழ்ந்து உங்க அம்மா அப்பாவுக்கு நல்ல பேரு வாங்கிக்கொடுங்க.

தம்பி, புவனாவ நல்லா பாத்துக்கோங்க. எப்ப வேணாலும் நீங்க இந்த வீட்டுக்கு வரலாம். இது உங்க வீடு மாதிரிதான்…” என்று சொல்லிவிட்டு உள்ளே ஒரு குரல் கொடுத்தார்.

உடனே ஒரு தட்டில் பழங்களுடன் புவனாவிற்கு ஒரு சேலையும், அவள் கணவனுக்கு ஒரு வேட்டி சட்டையும் வைத்து, கொஞ்சம் பணத்தையும் சேர்த்து அவர்களின் கையில் கொடுத்தனர். சௌந்தர்யாவும் அவரது கணவர் நடராஜனும், “ரெண்டு பேரும் பல்லாண்டு காலம் வரை வாழணும்… நல்லா இருங்கப்பா…” என்று மனமார ஆசீர்வாதம் செய்தனர்.

சௌந்தர்யா, “பெயருக்கேற்ப மிகவும் சௌந்தர்யமாகவும், கைத்தறி சேலையில் எளிமையாகவும் இருப்பார். எப்போதும் பகட்டாக தன்னை வெளிப்படுத்த மாட்டார்.”

ஒரு மகளிர் கல்லூரியின் நிர்வாகத் தலைவரும், பெரிய சமையலறை சாதனங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையின் உரிமையாளரும் ஆவார். கிட்டத்தட்ட எழுபது வயதை நெருங்கும் அவர், பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்; ஆனால் ஒழுக்கத்தில் கண்டிப்பானவர்.

அவரது கல்லூரியில் படிக்கும் மாணவிகளை வழிநடத்துவதில் வல்லமை கொண்டவர். அங்கு படிக்கும் மாணவிகளுக்கு எந்தப் பிரச்சனை வந்தாலும் நேரடியாக அவருடைய அறைக்குச் செல்லும் உரிமையைக் கொடுத்திருந்தார். அதனால் மாணவிகள் அனைவருக்கும் அவர் ஒரு நல்ல நிர்வாகியாக மட்டுமல்ல, நம்பிக்கையான ஆதரவாகவும் இருந்தார்.

இப்போது அவர்கள் வசிக்கும் அந்தப் பெரிய பங்களா, சௌந்தர்யாவின் பரம்பரைச் சொத்து. தன் அம்மாவின் மறைவுக்குப் பிறகு கணவருடன் அங்கேயே தங்கி வந்தார். இருவரும் இணைந்து நடத்தி வந்த கல்லூரிக்கும் தொழிற்சாலைக்கும் மாதம் இருமுறை சென்று வருவார்கள். தற்போது கல்லூரி நிர்வாகத்தையும் தொழிற்சாலையையும் மகனும் மருமகளும் பொறுப்பேற்று நடத்தி வந்தனர்.

மற்ற நாட்களில் இந்த வீட்டில்தான் ஓய்வாக இருப்பார்கள். மாலை நேரங்களில் அந்த ஊரில் படிக்கும் மாணவர்களுக்கு தேவையான சந்தேகங்களைத் தீர்க்கும் மையம் போல வீட்டை மாற்றியிருந்தார் சௌந்தர்யா.

அந்த ஊரில் நல்லது, கெட்டது என்று எது நடந்தாலும் தவறாமல் இருவரும் பங்கேற்பார்கள். அங்குள்ள மக்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து, பல குழந்தைகளின் கல்விச் செலவையும் ஏற்றுக் கொண்டிருந்தார். மிகவும் அன்பாகப் பழகும் குணம் கொண்டதால், எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் ஊர் மக்களால் முதலில் தேடி வரப்படுபவர் சௌந்தர்யாதான்.

அப்படித்தான் ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு மாலை நேரத்தில் அவரைத் தேடி பார்வதி வந்தாள்.

“வா பார்வதி… ரொம்ப நாளாச்சு உன்னைப் பார்த்து. வா உட்கார்…” என்று அழைத்த சௌந்தர்யா, விசும்பி அழுதுகொண்டிருந்த பார்வதியைப் பார்த்ததும் பதறி,

“அட என்னாச்சு? ஏன் அழறே?” என்று கேட்டார்.

“அம்மா… அது வந்து…” என்று மீண்டும் அழ ஆரம்பித்தாள்.

“பார்வதி, இங்க பாரு… மொதல்ல அழுகறதை நிறுத்து…” என்று கொஞ்சம் கண்டிப்பாகச் சொன்னார்.

“எல்லாம் இந்த புவனாப் புள்ளையைப் பற்றிய கவலைதானுங்க அம்மா…” என்றாள் பார்வதி.

“ஏன்? என்னாச்சு புவனாக்கு? அவ நல்லா படிக்கிற புள்ளை ஆச்சே!”

“அதுதான் மா எனக்கு எமனா வந்துருக்கு. பெரிய படிப்பெல்லாம் படிச்சா பெத்தவங்க சொல் பேச்சு கேக்க மாட்டாங்கன்னு சொல்றது சரிதான் போல…”

“அட, முழுசா விபரம் சொல்லாம எதை எதையோ பேசாதே…”

“என்னம்மா நான் சொல்லுவே?

கல்யாணமே வேண்டாமின்னு ஒத்தக் கால்ல நிக்கறா…”

“சரி, ஏதாவது காதல் கீதல் இருக்கான்னு விசாரிச்சியா?”

“அதுவும் இல்லம்மா. பயமா இருக்குன்னு சொல்லி வேண்டாங்கறா.

நீங்க சொன்னாத்தான் கேட்பா. கொஞ்சம் புத்திமதி சொல்லுங்கம்மா…” என்று கண்களைத் துடைத்துக் கொண்டே சொன்னாள்.

இதைக் கேட்ட சௌந்தர்யா கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு,

“சரி, புவனாவ நாளைக்கு காலையில் வந்து என்னைப் பார்க்கச் சொல்லு…” என்றார்.

மறுநாள் காலையில் புவனா வந்தபோது,

“வாம்மா புவனா… இந்த ஃபைலை கொஞ்சம் செக் பண்ணி அலைன் பண்ணுமா? இதோ வர்றேன்…” என்று ஒரு பெரிய ஃபைலை அவளிடம் கொடுத்து விட்டு உள்ளே சென்றார்.

ஒரு மணி நேரத்திற்குப் பிறகு வந்து,

“என்னம்மா, முடிச்சுட்டியா?” என்று கேட்டார்.

“முடிஞ்சதுங்க மேடம். இன்னும் இரண்டு மூன்று ப்ரொஃபைல்தான் இருக்கு…” என்றாள் புவனா.

அது கல்யாணத்திற்கான profile photo மற்றும் ஜாதகக் குறிப்புகள் அடங்கிய தொகுப்பு. நேற்றுக் காலை அவரைப் பார்க்க வந்த ஒரு தோழி மறந்துவிட்டு சென்றிருந்தார். அவரின் அனுமதியுடன்தான் அந்த ஃபைலை புவனாவிடம் கொடுத்திருந்தார்.

“அப்புறம் புவனா, உனக்கு படிப்பெல்லாம் முடிஞ்சுதா?” என்று கேட்டார் சௌந்தர்யா.

“முடிந்தது மேடம். இப்போ ஜாப்ல இருக்கேன்…”

“அப்ப அடுத்தது கல்யாணம்தான் என நினைக்கிறேன்…”

“இல்லைங்க மேம்… நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்…” என்று அவசரமாகத் தலையசைத்தாள் புவனா.

“ஏன் ம்மா?”

“ஆஃப்டர் மேரேஜ் என்னோட சுதந்திரம் போயிரும். நான் ஃப்ரீயா இருக்க முடியாது. நிறைய பிரச்சனைகள் வரும்னு சொல்றாங்க. அதனால எனக்கு பயமா இருக்கு மேம். குழந்தை, குடும்ப பராமரிப்பு… அதெல்லாம் பெரிய ரிஸ்குன்னு தோணுது.

எனக்கு கேரியரில் நல்ல நிலைக்கு வரணும்னு ஆசை. அதுக்கு தடையா கல்யாணம் இருந்துட்டா என் லைஃப் போயிடும்னு பயமா இருக்கு…”

அவள் பேச்சைக் கவனமாகக் கேட்ட சௌந்தர்யா மெதுவாகச் சிரித்தார்.

“அட என்ன பொண்ணுமா நீ… உலகத்தில யாருக்குத்தான் பிரச்சனை இல்லை? பிரச்சனைகள் வரும்னு சொல்றாங்கன்னு வாழ்க்கையையே தவிர்க்க முடியுமா?”

“திருமணம் என்பது வெறும் தாம்பத்திய வாழ்க்கைக்காக மட்டும் இல்ல புவனா. ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவா இருந்து, அன்போட, புரிதலோட வாழ்க்கையை கடந்து போறதுதான் உண்மையான வாழ்க்கை.”

“எத்தனை நாளைக்கி நீ தனியா இருப்பே? என்னதான் நண்பர்கள் இருந்தாலும் அது ஒரு எல்லை வரைக்கும் தான். எல்லா விஷயத்தையும் அம்மா கிட்டயோ, அப்பா கிட்டயோ பகிர முடியாது. அதுக்குன்னு ஒரு துணை அவசியம்.”

“சரி, உன் பெற்றோருக்குப் பிறகு நீ உன் அண்ணா வீட்டுக்கு விருந்தாளியாத்தான் போக முடியும்.

ஆனால் அது உன் சொந்த வீடு என்ற உணர்வை முழுமையாகக் கொடுக்காது புவனா. ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கென ஒரு வாழ்க்கையும், ஒரு குடும்பமும் உருவாகும். அந்த நேரத்தில் உன் சந்தோஷம், கவலை, ஆசை, வருத்தம் எல்லாத்தையும் மனசு திறந்து பகிர்ந்து கொள்ள உனக்கென்று ஒரு துணை இருப்பது வாழ்க்கையை இன்னும் அர்த்தமுள்ளதாக மாற்றும்.

ஒரு ஆணோ அல்லது பெண்ணோ யாராக இருந்தாலும் சரி, அவங்களுக்கு தன்னோட சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள ஒரு துணை கண்டிப்பா அவசியம்.”

“நீ சோர்ந்து போய் உட்காரும்போது, ‘பரவாயில்லை… நாம பாத்துக்கலாம்…’ன்னு யாராவது சொல்லும்போது கிடைக்கும் ஆறுதல் வாழ்க்கையையே லேசாக்கும்.”

“முன்னெல்லாம் பெண்களுக்கு கல்யாணம் பாதுகாப்பு என்று சொன்னாங்க. ஆனா இன்னைக்கு பெண்களே பாதுகாப்பு அதிகாரிகளாக இருக்கிறாங்க. எந்த உயரத்தையும் அடையக்கூடிய தைரியம் பெண்களுக்கு இருக்கு.”

“அதனால கல்யாணத்தை ஒரு தடையா பார்க்காதே. வாழ்க்கையில் ரசிக்க வேண்டிய இன்னொரு அழகான நிகழ்வா பாரு.”

“இந்தக் காலத்தில் ஆணும் பெண்ணும் வேலைகளைப் பகிர்ந்து செய்து குடும்பத்தை நடத்தினாலே பாதி பிரச்சனைகள் தீர்ந்து விடும். அதே சமயம் ‘நான்’, ‘எனது’ என்ற அகந்தை இல்லாமல் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் வாழ்க்கை இன்னும் அழகாகும்.”

“உன் கேரியரில் நீ முன்னேறிக்கொண்டே போ. அதுக்கு ஏற்ற துணையை கவனமா நாம தேர்ந்தெடுப்போம்.”

இதையும் படியுங்கள்:
சிறுகதை: பிறப்புச் சான்றிதழ்
Bhuvana, with husband, seeks blessings from Soundarya Natarajan

“என்னையே எடுத்துக்கோ. எனக்கு கல்யாணம் ஆனப்போ வயசு இருபது தான். ஆனா திருமணத்திற்குப் பிறகுதான் நான் டாக்டரேட் முடிச்சேன்.

இந்த ஸ்கூல், காலேஜ் எல்லாம் ஆரம்பிச்சேன். அதுக்கு காரணம் ஐயா கொடுத்த ஊக்கம்தான். இப்பவும் அவர் எனக்கு பக்கபலமா இருக்காரு.”

“யாரோ சொன்னதை மட்டும் நம்பி நம்ம வாழ்க்கையை நாமே வீணாக்கக் கூடாது.

எங்கேயோ கேட்ட சம்பவங்களை நினைச்சு நம்மள நாமே பயமுறுத்திக்க கூடாது.”

“பெண்கள் எப்போதும் பொறுப்பை ஏற்கும் திறமையோடும் தன்னம்பிக்கையோடும் வாழ்க்கையில் முன்னேறணும்.

பெண்மை என்பது மிகப்பெரிய சக்தி, நிர்வாகத் திறன், பொறுமை எல்லாம் சேர்ந்த ஒரு பலம்.”

“யோசி… இவ்வளவு தூரம் படிக்க வைச்சு ஆளாக்கின உன்னோட அம்மா அப்பாவின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற கடமை உனக்கு இருக்கு.”

“உனக்கு சம்மதம்னா சொல்லு… உனக்கு நானே ஒரு நல்ல மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுத்து தருகிறேன். உன் கையில இருக்கிற ஃபைல்ல நிறைய நல்ல வரன்கள் இருக்காங்க. அதுல உனக்கு பிடித்தவரை நீ தேர்ந்தெடு. மற்றதெல்லாம் நான் பார்த்துக்கறேன்…” என்று கூறிவிட்டு உள்ளே சென்றார்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: கல்லாய் போன மனிதர்கள்!
Bhuvana, with husband, seeks blessings from Soundarya Natarajan

அன்றைய நாளில் நடந்த உரையாடலுக்குப் பிறகுதான் புவனாவின் மனதில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. அதன் விளைவாகவே இன்று இந்தத் திருமணம் நடந்தது.

திருமணத்திற்குத் தேவையான அனைத்து செலவுகளையும் சௌந்தர்யாவே ஏற்றுக் கொண்டார்.

இப்போது புகுந்தகம் செல்லும் முன், தன் கணவனுடன் ஆசீர்வாதம் வாங்க வந்திருந்தாள் புவனா.

இருவரையும் ஆசீர்வாதம் செய்தவுடன் ஒரு கவரை எடுத்துச் சௌந்தர்யாவின் கணவர் நடராஜன் புவனாவிடம் நீட்டினார்.

“இந்தாம்மா புவனா… இதுல உங்க ரெண்டு பேருக்கும் வெளிநாட்டு பயணத்துக்கான ஃப்ளைட் டிக்கெட் இருக்கு. அங்க தேவையான எல்லா ஏற்பாடுகளும் பண்ணி வச்சிருக்கோம். பத்து நாள் டூர் போயிட்டு வாங்க…” என்றார்.

அதை கேட்ட புவனாவின் கண்கள் குளமாகின.

“ஐயா…” என்று அதற்கு மேல் பேச முடியாமல் நின்றாள்.

“புவனா, கோடி கோடியா பணம் சம்பாதிக்கறது இந்த மாதிரி சந்தோஷங்களை மற்றவர்களுக்கு தருவதற்குத்தான். யோசிக்காம வாங்கிக்கம்மா… சந்தோஷமா போயிட்டு வாங்க…” என்று அன்போடு சொன்னார் சௌந்தர்யா.

பார்வதியின் கண்களில் நீர் வழிந்தது. நன்றியுடன் சௌந்தர்யாவை கை கூப்பி வணங்கினாள்.

logo
Kalki Online
kalkionline.com