

கற்பகம் வெறுந்தரையில் படுத்துக்கிடந்தாள். எழுந்திருக்கத் தோன்றாத கிடக்கை. அப்படியே கிடந்து, உறங்காமல் உண்ணாமல் சருமம் உருகி ஒடுங்கி எலும்பாகி நோய் பிடித்து எறும்பு தின்று தீர்க்கட்டும் என்ற பிடிவாதக் கிடக்கை.
கண்கள் வடித்த நீர் கன்னத்தில் வாழைக்கறையாகக் கறுத்து வற்றிக் காய்ந்து கிடந்தது.
கைகள் வாதம் பிடித்ததுபோல் தரையில் துவண்டிருந்தன. இயலாமையில் கிளர்ந்த கோபத்தில் உதடுகள் துடித்துத் தவித்தன. விரக்தியில் கன்னமேடு அசைந்தது. காய்ந்த கறைகள் மீண்டும் சுரந்த நீரில் நனைந்தன.
“ஏய் கற்பகம்.. நேரமாச்சே…. நால்ர ஆவுது. எந்திரி சொல்றேன். இன்னாத்துக்கு இப்டி படுத்துங்கெடக்கறெ...?”
பதிலை எதிர்நோக்காமல் உள்ளே வந்த செங்கம்மாள், படுத்திருந்த கற்பகத்தைத் தாண்டி அடுப்பங்கரைக்குள் புகுந்தாள்.
செம்மண் அடுப்பில் சாம்பல் பூத்திருந்தது. மேலே மூடியிட்டு சோற்றுப்பானை. மூடியைத் திறந்தாள். கையை உதறித் தட்டைக் கீழேவிட்டாள். சுழன்று ஓசையேற்படுத்தித் தலைமாட்டில் தஞ்சமாகிய அலுமினியத் தட்டும் படுத்திருந்தவளிடம் எந்த அசைவையும் உண்டாக்கவில்லை.
காலையில் பற்றவைத்த அடுப்பு வெளியே சாம்பல் பூத்து உள்ளே கனன்ற வெப்பத்தை மறைத்து வைத்திருந்தது,
“மத்தியானம் ஆக்குன சோறு இம்மா நேரத்துக்கு அடியெல்லாம் தீஞ்சே பூடுச்சு. சோறு துண்ணாம ஒரு வா தண்ணி குடிக்காம வவுறு ஒட்டிக்க ஒட்டிக்க உய்ந்து கெடக்கற. இன்னா பொம்பளையோ நீ போ.”
படுத்தபடி மெதுவாகத் தலை உயர்த்தி மேலே புகைப்படத்தைப் பார்த்தாள் கற்பகம். மகள் செல்வியைப்போல் அவளுக்குக் காலையில் வைத்த பூவும் வாடாமல் இருந்தது. தலையைத் தாழ்த்திக் கண்களை அழுத்தித் துடைத்தாள்.
செங்கம்மாள் கற்பகத்தின் பக்கத்தில் வந்து அமர்ந்தாள். அவள் தலையைக் கோதினாள். கறுத்து மெலிந்த விரல்களைப் பற்றினாள்.
“எந்திரி எங்கண்ணு. உன் பொண்ணு வந்து காத்துங்கெடப்பா. வாடாப்பா”
ஒரு பரிவுக் குரலும் தொடுகை கடத்திய அன்பும் கற்பகத்தின் மொத்தக் கண்ணீரையும் அள்ளிக்கொட்டின. இத்தனை நேர மௌன அழுகை பெரும்குரலாக வெடிக்கத் தலையில் அடித்துக்கொண்டு அழுதாள் கற்பகம்.
பானையிலிருந்து மேலாகத் தீயாத சோற்றை மோர் இட்டுப் பிசைந்து தம்ளரில் ஊற்றிப் பிடிவாதமாகக் குடிக்க வைத்தாள் செங்கம்மாள்.
“சரி… கஞ்சியக் குடிச்சிட்டு எந்திரிச்சி வெளிய வா…. நானு அடுப்பப் பத்த வைக்கிறேன். நீ வா வடைக்கி அரச்சி வச்சிட்டியா இல்லியா..?” என்று பாத்திரத்தைத் திறந்து பார்த்தாள்.
பருப்பு அரைக்கப்படாமல் ஊறிக்கிடந்தது. ஆட்டுரலைக் கழுவிப் பருப்பைக் களைந்து, அரைத்துப் பாத்திரத்தில் வழித்தெடுத்தாள் செங்கம்மாள்
கற்பகம் எழுந்தாள்.
“வெங்காயம் பச்ச மொளகா போட்டு எடுத்தா.. நான் வெளிய போறேன்…”
குடிசையைவிட்டு வெளியே போனாள் பக்கத்து வீட்டு செங்கம்மாள்.
“ரவ நேரந்தான். உம்பொண்ணு வந்துருவா.. சட்னு வா. சனம் வேற காத்துக் கெடக்குது” என்று மறுபடி குரல் கொடுத்தாள்.
மகள் தவறிப்போன ஆறு மாதங்களாகக் காக்கைக்கு இந்த நேரத்தில் படையல் தவறியதில்லை. அவளது காரியத்தன்று வரத்தொடங்கிய காகம் இன்றுவரை வராமல் இருந்ததுமில்லை.
இந்த ஆறு மாதங்களில் நாற்பது வயது கற்பகத்துக்குப் பத்து வயது ஏறியிருந்தது. எண்ணெய்ச் சட்டியும் அரைத்து வைத்த வடை மாவுமாக குடிசையைவிட்டு வெளியே வந்தாள்.
உட்கார்ந்து செங்கல் அடுப்பைச் சரி செய்து சுள்ளிகள் பொருத்திப் பற்ற வைத்தாள். ‘சின்னப் புள்ளைய ஆச காட்டி நாசம் பண்ண அந்த நாயி என் வவுறு எரியறா மாதிரி எரிஞ்சி நாசமாப் போவட்டும்’ என்று அக்னி தேவனிடம் கும்பிட்டாள்.
நாட்கள் தாண்டியும் கற்பகத்தின் வயிறு எரிவதைப்போல, மனசு எரிவதைப்போல அதுவும் பக்கென்று பற்றியது.
அக்கம் பக்கத்தில் காட்டு வேலை செய்பவர்கள் அவளது வடைக்காகவும் தேநீருக்காகவும் காத்திருந்தார்கள்.
எங்கிருந்து பறந்து வந்தாளோ மகள் செல்வி.. வாசலிலிருந்த ஒற்றைப் புங்க மரத்தின் தாழ்ந்த கிளையில் அமர்ந்து தலை சாய்த்து அம்மா கற்பகத்தைப் பார்த்துக்கொண்டேயிருந்தாள்.
“இதோ ஆச்சி ஆச்சி இரு இரு அவசரப்படாத.. வட வேவட்டும்...” மகளைப்பார்த்துச் சொன்னாள்.
வெந்ததை எடுத்துப் பக்கத்தில் கல் மீது வைத்தாள். கொத்திக்கொண்டு மீண்டும் கிளையில் அமர்ந்தாள் செல்வி.
சிறு காட்டுப் பக்கமாய் இருந்த அந்தக் குடிசையின் ஒரு ஓரத்தில் இருந்து வெளிப்பட்டான் அந்த நரி…. எங்கிருந்து வந்தான் இந்த நரிப்பயல்….?
செங்கம்மாளின் இரண்டு வயது பேத்தி கூவினாள். “பாட்டீ… நரீ… நரீ...”
நரிப்பயல் மரத்தில் இருந்த செல்வியைப் பார்த்தான்.
“ஏய்ய்ய் நீ ரொம்ப அழகா ….” சொல்லி முடிக்கவில்லை.
கற்பகம் கொதிக்கும் எண்ணெய்க் கரண்டியை வீசி எறிந்தாள் அவன் மீது.
“பொறுக்கி நாயே.. அதான் அழகு அழகுன்னு ஏமாத்தி அவ கதய முடிச்சிட்டியேடா… இன்னும் இன்னாடா வோணும் உனுக்கு…”
தெறித்து ஓடியது நரி.. வாயில் கவ்விய வடையுடன் வெடித்து அழுத அம்மாவின் தோளில் பறந்து உட்கார்ந்தாள் செல்வி.