

இந்தியாவில் உள்ள வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் நாடு முழுவதும் ரேஷன் கடைகள் வாயிலாக, இலவசமாகவும், மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் மாதம்தோறும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் தற்போதைய நிலவரப்படி மொத்தம் 38,438 ரேஷன் கடைகளும், சுமார் 2.20 கோடி ரேஷன் கார்டுதாரர்களும் உள்ளனர்.
அதன்படி ரேஷன் கடைகள் வாயிலாக இலவசமாக, ஒரு குடும்பத்துக்கு அதிகபட்சமாக 20 கிலோ அரிசி, 3 கிலோ கோதுமையும் வழங்கப்படுகிறது. அதேபோல் 500 கிராம் சர்க்கரையும், துவரம் பருப்பு 1 கிலோவும், 1 லிட்டர் பாமாயில் மலிவு விலையில் கொடுக்கப்படுகிறது. ரேஷன் கார்டில் இருக்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கைக்கு ஏற்பவே இலவச அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்களும் விநியோகம் செய்யப்படுகிறது.
அதே நேரம் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரேஷன் கடைக்கு சென்று நீண்ட நேரம் நின்று பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்படுகிறது.
இதனால் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு வீடுகளுக்கே சென்று உணவுப்பொருட்களை வழங்கும் 'தாயுமானவர்' திட்டம் கடந்த திமுக ஆட்சி காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
அதன்படி கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் என்பது தமிழ்நாட்டில் உள்ள மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவடைந்த நிலையில் உள்ளவர்களுக்கு, அவர்களின் இல்லங்களுக்கே சென்று நேரடியாக நியாய விலைக்கடைப் பொருட்களை வழங்கும் ஒரு சிறப்புச் சமூக நலத் திட்டமாகும்.
இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் 'தாயுமானவர்' திட்டத்தின் பெயர் தற்போது 'பொது விநியோகத் திட்டம்' அல்லது 'வீடு தேடி பொருட்கள் வழங்கும் திட்டம்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் திட்டத்தின் பெயர் மாறினாலும் அந்த திட்டமானது தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதன்படி, வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இல்லங்களுக்கு சென்று பொது வினியோக திட்டப் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதிகளில் அல்லது வார இறுதி நாட்களில் இத்திட்டத்தின் கீழ் வீட்டுக்கே சென்று விநியோகம் செய்யும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.
அரிசி, சர்க்கரை, கோதுமை, பருப்பு மற்றும் பாமாயில் போன்ற பொது விநியோகத் திட்டப் பொருட்கள் அட்டைதாரர்களின் வகைக்கு ஏற்ப வழங்கப்படுகின்றன.
ரேஷன் கடை பணியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மின்னணு எடை இயந்திரம் (Electronic Weighing Machine) மற்றும் விற்பனை முனைய இயந்திரத்துடன் (e-PoS) நேரில் பயனாளிகளின் வீடுகளுக்குச் சென்று கைரேகை பதிவு பெற்று பொருட்களை வழங்குகின்றனர்.
இந்நிலையில், செப்டம்பர் மாதத்தின் 5,7 மற்றும் 8-ந்தேதிகளில் சென்னையில் ஆவடி, அம்பத்தூர், அண்ணாநகர், கொளத்தூர், ஆர்.கே.நகர், ராயபுரம், திருவொற்றியூர், வில்லிவாக்கம், ஆயிரம்விளக்கு, சேப்பாக்கம், மயிலாப்பூர், சைதாப்பேட்டை, தியாகராயநகர், சோழிங்கநல்லூர், பரங்கிமலை, தாம்பரம் மற்றும் மதுரவாயில் உள்பட் 19 மண்டலங்களில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்பட்டு வரும் 1,346 ரேஷன் கடைகளில் விற்பனையாளர்கள அத்தியாவசிய பொருடகளை வீடு தேடி சென்று வினியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தை தவறாமல் பயன்படுத்தி கொள்ளுமாறு தமிழக அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு உணவுப்பொருட்கள் விநியோகம் செய்யப்படவுள்ளது.
இதற்கிடையே மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைப் பணியாளர்கள், ‘ரேஷன் கடைகளில், புளூடூத் அடிப்படையிலான விநியோக முறையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும், கூடுதல் பணியாளர்கள் மற்றும் பாயின்ட் ஆஃப் சேல் (PoS) இயந்திரங்களை நியமிக்க வேண்டும்,
மேலும் தாயுமானவர் திட்டத்தைச் செயல்படுத்தியதற்காக நிலுவையில் உள்ள ரூ.200 ஊக்கத்தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று முதல் (செப்டம்பர் 5) 10-ம்தேதி வரை கருப்பு உடை மற்றும் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.