

தமிழ் சினிமா மற்றும் அரசியலில் வெற்றிக் கொடி நாட்டிய கேப்டன் விஜயகாந்தின் 74வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. 1952 ஆகஸ்ட் 25-ம் தேதி கோவிலங்குளத்தில் பிறந்த விஜயகாந்த், நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால், தமிழ் சினிமாவில் இணைந்தார். ஆரம்ப கட்டத்தில் நிறம் காரணமாக பல்வேறு எதிர்ப்புகளை எதிர்கொண்ட போதிலும், மிகச் சிறந்த மற்றும் முன்னணி நடிகராகவும் வலம் வந்தார்.
தமிழ் சினிமாவைப் பொறுத்த வரை பெரிய நட்சத்திரங்கள் யாருக்கும் அவர்களுடைய 100-வது திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை. ஆனால் விஜயகாந்தின் 100-வது திரைப்படமான கேப்டன் பிரபாகரன் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.
அரசியலுக்கு வருவதற்கு முன்பே ஏழை, எளிய மக்களுக்கு உதவி வந்தவர் கேப்டன் விஜயகாந்த். தமிழ் சினிமாவில் துணை நடிகர்கள் பலருக்கும் உதவி செய்துள்ளார். உதவுதல் என்ற குணம் இயல்பாகவே அவருக்குள் இருந்தது. இதனைத் தொடர்ந்து 2006-ல் அரசியலில் அடியெடுத்து வைத்தார் விஜயகாந்த்.
2006-ல் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற அரசியல் கட்சியை நிறுவி, அதன் தலைவராக பொறுப்பேற்றார். விஜயகாந்த் அரசியலில் நுழைந்த போது, மக்கள் மத்தியல் நல்ல வரவேற்பு இருந்தது.
முதல் தேர்தலிலேயே விருதநகர் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக சட்டசபைக்கு சென்றார் விஜயகாந்த். 2011 முதல் 2016 வரை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் விஜயகாந்த் இருந்துள்ளார்.
கடந்த 2023 டிசம்பர் 28-ம் தேதி கேப்டன் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவர் மட்டும் இப்போது இருந்திருந்தால் அவர் தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என மீசை ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இன்று விஜயகாந்தின் பிளந்தநாளையொட்டி அவருடைய நினைவிடத்தில் புகழ் வணக்கம் செலுத்த மீசை ராஜேந்திரன் வருகை தந்தார்.
அப்போது பேசிய மீசை ராஜேந்திரன், “சினிமா மற்றும் அரசியல் ஆகிய இரண்டிலும் கேப்டன் விஜயகாந்த் மூலமாக தான் நான் வந்தேன். சினிமா, அரசியல் மற்றும் பொது வாழ்க்கை என எதிலும் அவரைப் போல் ஒருவரை காண முடியாது. அரசியலுக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தில் விஜயகாந்த் ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யவில்லை. தொடக்க காலத்தில் இருந்தே அவர் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என நினைத்தார்; அதை அவர் செய்தும் காட்டினார்.
இன்றைக்கு கேப்டன் விஜயகாந்த் இருந்திருந்தால் அவர் தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்திருப்பார். நிச்சயமாக காமராஜ் மற்றும் எம்ஜிஆர் ஆட்சியை அவர் கொடுத்திருப்பார்” எனத் தெரிவித்தார்.
விஜயகாந்த் இருந்த போது தேமுதிகவில் நிர்வாகியாக இருந்த மீசை ராஜேந்திரன், அவரது மறைவுக்குப் பிறகு தவெக-வில் இணைந்தார். இருப்பினும் விஜயகாந்த் மீது அவர் வைத்திருக்கும் அன்பும், பற்றும் அளப்பரியது
தற்போதைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக இருக்கும் ஜோசப் விஜய் அவரின் சினிமா பயணம் வெற்றி அடைந்ததற்கு விஜயகாந்த்தும் மிக முக்கிய காரணம். தமிழ் சினிமாவில் ஒரு வெற்றி படத்தை கொடுக்க திணறிய விஜய்க்கு, விஜயகாந்த் தான் உதவியவர். சௌந்தரபாண்டி திரைப்படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடித்து, விஜய்யை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நிலைநிறுத்தினார் விஜயகாந்த். விஜயகாந்த் இறந்து, ஒன்றரை மாதம் கழித்து விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.