

ஒரு காலத்தில் குடும்பத்தின் பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட்ட புகைப்பட ஆல்பங்கள் இன்று மொபைலுக்குள் அடங்கிவிட்டன. காலம் மாறிவிட்டது; ஆனால் புகைப்படங்களுக்குள் ஒளிந்திருக்கும் குடும்ப நினைவுகள் மட்டும் மாறவில்லை!
புகைப்படம் என்பது வெறும் காகிதத்தில் பதிந்த உருவம் மட்டுமல்ல; அது நம் வாழ்க்கையின் அழகான தருணங்களை மீண்டும் கண்முன் கொண்டுவரும் காலப்பெட்டி. ஒரு புகைப்படத்தைப் பார்க்கும்போது, அந்த நாளின் மகிழ்ச்சி, மனிதர்கள், இடங்கள் என எல்லாமே மனதில் மீண்டும் உயிர்பெறுகின்றன. ஆனால் புகைப்படங்களைச் சேமிக்கும் முறையில் கடந்த சில ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.
நமது சிறுவயதில் வீட்டில் ஒரு பெரிய புகைப்பட ஆல்பம் இருக்கும். உறவினர் திருமணம், குழந்தைகளின் பிறந்தநாள், சுற்றுலா, குடும்ப விழாக்கள் என ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் புகைப்படம் எடுப்பது ஒரு கொண்டாட்டமாகவே இருந்தது.
கேமராவில் பிலிம் ரோல் போட்டு புகைப்படம் எடுப்பார்கள். அந்த ரோலில் எத்தனை படங்கள் மீதமிருக்கின்றன என்று கணக்குப் பார்த்துத்தான் படம் எடுப்போம். பின்னர் பிலிமை ஸ்டூடியோவில் கொடுத்து, புகைப்படங்கள் தயாராகும் நாளுக்காகக் காத்திருப்போம். சில படங்கள் தெளிவாக இல்லாமல் போனாலும், கிடைத்த புகைப்படங்களைப் பார்த்து மகிழ்வோம்.
அந்தப் புகைப்படங்களை அழகான ஆல்பத்தில் ஒட்டி, ஒவ்வொன்றின் கீழேயும் தேதி, இடம், நிகழ்ச்சியின் பெயர் என்று எழுதிவைப்பார்கள். வீட்டிற்கு வரும் உறவினர் களிடம் ஆல்பத்தை எடுத்துக் காட்டி பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொள்வது தனி மகிழ்ச்சி!
சில வீடுகளில் திருமண ஆல்பம் ஒரு பொக்கிஷம் போலப் பாதுகாக்கப்படும். குழந்தைகள் வளர்ந்த பிறகும் அவர்களின் மழலைப் பருவப் புகைப்படங்களைப் பார்த்து பெற்றோர் மகிழ்வார்கள்.
இன்று நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. ஸ்மார்ட்போன் வந்த பிறகு புகைப்படம் எடுப்பது மிகவும் எளிதாகி விட்டது. ஒரே நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான புகைப்படங்களை எடுக்கிறோம். உடனே பார்த்து ரசிக்கிறோம். பிடிக்கவில்லை என்றால் அழித்துவிட்டு மீண்டும் எடுக்கிறோம்.
கூகுள் போட்டோஸ் போன்ற கிளவுட் சேவைகளில் புகைப்படங்களைச் சேமித்து வைக்க முடிகிறது. மொபைல் தொலைந்தாலும், உரிய கணக்கின் மூலம் அவற்றை மீண்டும் பெறலாம். வெளிநாட்டில் இருக்கும் உறவினர்களுக்குக்கூட ஒரு நொடியில் புகைப்படங்களை அனுப்பிவிட முடிகிறது.
ஆனால் இத்தனை வசதிகள் இருந்தும் ஒரு சிறிய குறை இருக்கிறது. முன்பெல்லாம் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து ஆல்பத்தைப் புரட்டிப் பார்ப்பார்கள். இப்போது ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் மொபைலுக்குள் இருந்தாலும், அவற்றைப் பார்க்கத் தனித்தனியாக நேரம் ஒதுக்க வேண்டியிருக்கிறது.
மேலும், புகைப்படங்களைச் சேமித்துவிட்டோம் என்று மட்டும் நிம்மதியடைய முடியாது. கிளவுட் கணக்கின் பாதுகாப்பு, கடவுச்சொல், சேமிப்புத்திறன் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தவேண்டும். முக்கியமான புகைப்படங்களுக்கு மற்றொரு காப்புப் பிரதியும் வைத்திருப்பது நல்லது.
இன்றைய தலைமுறையினர் புகைப்படங்களை எடுப்பதில் மட்டும் அல்ல, அவற்றை அழகுபடுத்துவதிலும் பல புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறார்கள். பழைய புகைப்படங்களை ஸ்கேன் செய்து டிஜிட்டல் வடிவில் மாற்றி வைக்கிறார்கள்.காலத்தால் மங்கிப் போன தாத்தா பாட்டியின் கருப்பு வெள்ளை புகைப்படங்களைக் கூட இப்போது வண்ணப் படங்களாக மாற்ற முடிகிறது.
இன்னொரு சுவாரஸ்யமான மாற்றம் என்னவென்றால், இன்று குடும்ப நிகழ்ச்சிகளில் புகைப்படம் எடுப்பதற்காகத் தனியாக ஒருவரை நியமிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் ஒவ்வொருவரும் தங்கள் மொபைலில் புகைப் படங்களையும் காணொளிகளையும் எடுக்கிறார்கள்.
பின்னர் அவற்றை ஒரு பொதுவான இணைய இணைப்பின் மூலம் அனைவரும் பகிர்ந்து கொள்ள முடிகிறது. ஒரே நிகழ்ச்சியின் வெவ்வேறு கோணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஒரே இடத்தில் கிடைப்பது மிகப்பெரிய வசதி.
ஆனால் நம்முடைய பழைய புகைப்பட ஆல்பங்களில் இருந்த ஒரு சிறப்பை இன்றைய டிஜிட்டல் சேமிப்பில் நாம் இழந்துவிடக் கூடாது. புகைப்படத்தின் பின்புறத்தில் யார், எப்போது,எங்கே என்று கையால் எழுதி வைத்திருப்பார்கள்.
பல ஆண்டுகள் கழித்துப் பார்க்கும்போது அந்த சிறிய குறிப்புகள் தான் பல மறந்து போன உறவுகளையும் சம்பவங்களையும் நினைவுபடுத்தும். எனவே இன்றும் நமது முக்கியமான புகைப்படங்களுக்கு பெயர்,தேதி, எந்த நிகழ்ச்சி போன்ற விவரங்களை குறிப்பிட்டு வைப்பது நல்ல வழக்கம்.
இன்னும் சில வீடுகளில் பழைய புகைப்பட ஆல்பங்கள் பீரோவின் மேல் தட்டில் பத்திரமாக இருக்கின்றன.. அவற்றை அவ்வப்போது எடுத்து துடைத்து குழந்தைகளிடம் காட்டும்போது அவர்களுக்கும் குடும்பத்தின் பழைய கதைகள் தெரிய வருகின்றது. டிஜிட்டல் புகைப்படங்களுக்கும் இதுபோன்ற ஒரு குடும்பப் பாரம்பரியத்தை உருவாக்கி , முக்கியமான படங்களைத் தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் ஒரு சிறிய ஆல்பமாக அச்சிட்டு வைத்தால் எவ்வளவு அழகாக இருக்கும்.
தொழில்நுட்பம் மாறலாம். புகைப்படங்களைச் சேமிக்கும் முறையும் மாறலாம். ஆனால் நம் அன்பானவர்களின் முகங்களையும், மறக்க முடியாத தருணங்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் என்றும் மாறாது. காகித ஆல்பமாக இருந்தாலும் சரி, கிளவுட் சேமிப்பாக இருந்தாலும் சரி, நினைவுகள்தான் நம் வாழ்க்கையின் உண்மையான பொக்கிஷம்!
புகைப்படம் எடுப்பதன் நோக்கம் அழகாகத் தெரிவது மட்டும் அல்ல. நம் வாழ்க்கையில் கடந்து சென்ற இனிய தருணங்களைப் பாதுகாப்பதும்தான். இன்றைய குழந்தைகளுக்கு பழைய ஆல்பங்களைக் காட்டி அவர்களின் பெற்றோர் சிறுவயதில் எப்படி இருந்தார்கள், குடும்பத்தில் யார் யார் இருந்தார்கள் என்று அறிமுகப்படுத்தலாம். இப்படி பகிரப்படும் நினைவுகள் தலைமுறைகளை இணைக்கும் பாலமாக அமையும் என்பதை இக்கட்டுரையின் மூலம் வாசகர்கள் புரிந்து கொள்வார்கள்.