

1961ம் ஆண்டு பனாமாவில் உள்ள டேரியன் நகரில் சில ஆய்வாளர்கள் தூக்கம் பற்றி மட்டும் ஆராய்ச்சி நடத்த வேண்டும் என்று தீர்மானித்தனர். நாளடைவில் பலரும் இந்தக் குழுவில் சேர ஆரம்பித்தனர். பல ஆராய்ச்சிகளின் முடிவை அறிவிக்க ஸ்லீப் என்ற பத்திரிகை 1978ல் ஆரம்பிக்கப்பட்டது.
தூக்கத்தைப் பற்றிய அனைத்து விவரங்களையும் இந்த ஸ்லீப் ரிசர்ச் சொசைட்டி, டேரியன் வெளியிட ஆரம்பித்தது. உலகில் இதுவரை தூக்கம் பற்றி மலைக்க வைக்கும் மூன்று லட்சம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால் இன்னும் தூக்கம் பற்றிய மர்மம் முழுவதுமாக விடுபட்ட பாடில்லை.
சமீபத்திய ஆய்வு ஒன்றில் நல்ல ஆரோக்கியமுள்ள 770 இளம் வயதினரை அவர்களது உடல்நலமும் செய்கைகளும் எப்படி தூக்கத்தை மேற்கொள்ள வைக்கின்றன என்று ஆராயப்பட்டது. ஆய்வின் முடிவில் அவர்கள் தூக்கத்தில் ஐந்து வகைகளை இனம் கண்டனர். இதை ஸ்லீப் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
மோசமான தூக்கமும் உளவியலும் :
நான் சரியாகத் தூங்கவே இல்லை என்று சொல்வோரும் அடிக்கடி இரவில் விழித்திருப்போரும் தங்களைப் பற்றித் தாங்களே கூறிக் கொள்வோரும் இந்த வகையைச் சார்ந்தவர்கள். இவர்கள் மனச்சோர்வு, கவலை, எதிர்மறை உணர்வுகளான பயம், கோபம், மன அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள்.
தூக்க எதிர்ப்பு சக்தி :
பகலில் எதையும் கவனத்துடன் செய்ய முடியாதவர்கள், ஆனால் தூக்கம் வருவதே இல்லை என்று புகார் செய்யாதவர்கள் இந்த வகையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மீண்டு வரும் ஆற்றலைக் கொண்டவர்கள்.
தூக்கத்திற்கான மருந்து எடுத்துக் கொள்பவர்கள் :
தூக்கம் வருவதற்காக மாத்திரைகளை தாங்களாகவோ அல்லது மருத்துவரின் பரிந்துரை மூலமாகவோ எடுத்துக் கொள்பவர்கள் இவர்கள். இவர்களுக்கு ஞாபகசக்தி குறைவு.
ஆனால் அனைவருடனும் நன்கு பழகும் திறன் கொண்டவர்கள் இவர்கள்.
தூக்க நேரமும் அறியும் ஆற்றலும் :
ஆறு மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்குபவர்கள். அறியும் ஆற்றல் குறைவாக உள்ளவர்கள் இந்த வகையைச் சேர்ந்தவர்கள். எதற்கெடுத்தாலும் கொந்தளிப்பவர்கள் இவர்கள்.
தூங்கும் போது தொந்தரவு :
மனபாதிப்புகளால் அடிக்கடி தூக்கத்திலிருந்து எழுந்திருப்பவர்கள் இவர்கள். மது அருந்துதல், சிகரெட் பிடித்தல் போன்ற கெட்ட பழக்கங்களைக் கொண்டவர்கள் இவர்கள்.
22 முதல் 36 வயது வரை உள்ளவர்களே இந்த ஆய்வுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் ஏழு மணி நேரம் தூங்க வேண்டும் அதுவும் ஆழ்ந்த நல்ல உறக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்கின்றனர் தூக்கம் பற்றி ஆய்வு நடத்தும் நிபுணர்கள்.
இந்த ஆய்வுகள் மேலும் தொடர்கின்றன.
உடற்பயிற்சியை மேற்கொள்ளல், ஒவ்வொரு நாளும் சீரான ஒரே நேரத்தில் தூங்கச் சென்று ஒரே நேரத்தில் எழுந்திருத்தல், அன்றாடம் எதிர்கொள்ளும் சவால்களைத் திறம்பட நிதானமான மனதுடன் எதிர்கொள்ளல், மூச்சுப்பயிற்சி, தியானம் ஆகியவை மூலம் தூக்கமில்லாத்தன்மையை போக்கிக் கொள்ளலாம்.