
வெண்ணெய் பழம் என்று அழைக்கப்படும் அவகோடாப் பழம் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது. குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் இதை அடிக்கடி சேர்த்துக் கொண்டால் அவர்களுக்கு பல முக்கியமான ஊட்டச்சத்து நன்மைகள் கிடைக்கும். அத்துடன் அவர்களது நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கிறது என்பது இதன் முக்கியமான சிறப்பம்சமாகும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு அவகோடா பழம் தரும் நன்மைகள்:
குறைந்த கிளைசெமிக் குறியீடு:
அவகோடாப் பழம் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. அதாவது இந்தப் பழத்தை நீரிழிவு நோயாளிகள் உட்கொள்ளும் போது ரத்த சர்க்கரை அளவுகளில் நல்ல மாற்றத்தை உண்டாக்குகிறது. அவர்களது ரத்தத்தில் சர்க்கரை அளவு மெதுவாகத் தான் அதிகரிக்கிறது. இதனால் அவர்களுக்கு மிகுந்த ஆரோக்கிய நன்மையைத் தருகிறது. நாள் முழுவதும் நீரிழிவு நோயாளிகள் நிலையான ரத்த குளுக்கோஸ் அளவை பராமரிக்க முடியும்.
அதிக நார்ச்சத்து:
அவகோடாப் பழத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. ஒரு மீடியம் சைஸ் அவகோடாப் பழத்தில் சுமார் 10 கிராம் நார்ச்சத்து உள்ளது. இது நீரிழிவு நோயாளிகளின் செரிமானத்தையும் கார்போஹைட்ரேட்டுகளையும் உடல் உறிஞ்சிக் கொள்வதை மெதுவாக்குகிறது.இதனால் அவர்களது உணவிற்குப் பிறகு ரத்த சர்க்கரை விரைவாக அதிகரிப்பதைத் தடுத்த உதவுகிறது. உணவிற்குப் பிறகான குளுக்கோஸ் அளவை நிர்வகிப்பதற்கு இது மிகவும் உகந்த பழமாகும்.
ஆரோக்கியமான கொழுப்புகள்:
இந்தப் பழத்தில் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகமாக உள்ளன. குறிப்பாக ஒலிக் அமிலம் உள்ளது. இது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது.
இதிலுள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் சர்க்கரை நோயாளிகளுக்கு முழுமை மற்றும் திருப்தியான உணர்வுகளைத் தருகிறது. இதனால் தங்கள் எடையை அவர்கள் திறம்பட நிர்வகிக்க முடிகிறது. ஒட்டு மொத்த கலோரி உட்கொள்ளலை குறைக்கவும் உதவுகிறது. அவகோடாப் பழம் சாப்பிட்ட பின் அவர்களுக்கு வயிறு நிறைந்த உணர்வை தருவதால் வேறு எந்த உணவையும் நாடத் தோன்றாது.
ஊட்டச்சத்துக்கள்:
அவகோடாப் பழத்தில் நிறைய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. பொட்டாசியம் உள்ளிட்ட அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன.
இவை ரத்த அழுத்தத்தை ஒழுங்குப்படுத்துதல் மற்றும் ஒட்டுமொத்த இருதய ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு இதய நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகம். அந்தச் சிக்கலை அவகோடாப் பழம் நீக்குகிறது.
நீரிழிவைக் குறைக்கும் சாத்தியம்:
தொடர்ந்து அவகோடாப் பழத்தை உண்டு வந்தால் பெண்களிடையே தோன்றும் வகை டூ நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தை குறைக்கலாம் என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன. தினமும் வெண்ணெய்ப் பழத்தை உண்டு வரும் பெண்களுக்கு எளிதில் நீரிழிவு நோய் உருவாவதில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
வெண்ணெய்ப் பழங்களை சாலடுகள், ஸ்மூத்திகள் போன்ற பல்வேறு உணவுகள் மற்றும் சிற்றுண்டிகளில் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம். இதனால் நீரிழிவு நோயாளிகள் தங்கள் அன்றாட உணவில் அவற்றை சேர்த்துக் கொண்டு அவற்றின் சுவை மற்றும் ஆரோக்கிய நன்மைகளை அனுபவிக்கலாம். அவகோடா டோஸ்ட் தற்போது ஒரு பிரபலமான காலை உணவாகி விட்டது. மசித்த அவகோடாவை ரொட்டியில் தடவி, அதை டோஸ்ட் செய்து விருப்பமான மற்ற சுவைகளை சேர்த்து சாப்பிடலாம்.