

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் ஒரு பொதுவான பாதக் குறைபாட்டை மருத்துவர்கள் 'மெட்டாடார்சஸ் அடக்டஸ்' (Metatarsus Adductus) என்று அழைப்பார்கள். பேச்சுவழக்கில் இது 'வாழைப்பழ பாதம்' (Banana Foot) என்று அழைக்கப்படுகிறது. பாதத்தின் முன்பகுதி உள்நோக்கி வளைந்து, பார்ப்பதற்கு ஒரு வாழைப்பழம் போல அல்லது ஆங்கில எழுத்து 'C' போல இருப்பதால் இந்தப் பெயர் வந்தது.
வாழைப்பழ பாதத்தை எப்படி அடையாளம் காண்பது?
இந்த பாதிப்பு உள்ள குழந்தைகளின் பாதத்தின் வெளி ஓரம் நேராக இல்லாமல் வளைந்து காணப்படும். பாதத்தின் உட்புற வளைவில் ஆழமான மடிப்பு இருக்கலாம். கால் கட்டை விரலுக்கும் இரண்டாவது விரலுக்கும் இடையில் இடைவெளி அதிகமாக இருக்கும்.
முக்கிய வித்தியாசம்: பாதத்தின் முன்பகுதி மட்டுமே உடலை நோக்கி வளைந்திருக்கும். ஆனால், பாதத்தின் பின்பகுதி மற்றும் குதிகால் சாதாரண நிலையில் நேராக இருக்கும்.
காரணங்கள்:
பெரும்பாலும் தாயின் கருப்பையில் குழந்தை இருக்கும் நிலை தான் இதற்குக் காரணம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
1. இடப்பற்றாக்குறை: கருப்பையில் இடம் குறைவாக இருந்து, குழந்தையின் கால்கள் நீண்ட நேரம் மடிந்த நிலையில் கருப்பைச் சுவரில் அழுத்தப்படுவதால், மென்மையான எலும்புகள் வளைகின்றன.
2. பிரசவ நிலை: குழந்தை தலைகீழாக இல்லாமல், இடுப்புப் பகுதி கீழே இருக்கும் நிலையில் பிறந்தால், இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
3. பனிக்குட நீர் குறைவு: கருப்பையில் குழந்தையைப் பாதுகாக்கும் பனிக்குட நீர் (Amniotic fluid) குறைவாக இருந்தால், கால்களுக்குத் தேவையான அசைவு கிடைக்காமல் இந்த நிலை ஏற்படலாம்.
4. மரபணு: பெற்றோருக்கோ அல்லது உடன் பிறந்தவர்களுக்கோ இந்த பாதிப்பு இருந்திருந்தால், குழந்தைக்கு வர வாய்ப்புள்ளது.
வாழைப்பழ பாதம் vs பிறவி வளைபாதம் (Banana Foot vs Clubfoot):
பல பெற்றோர்கள் இதை 'கிளப் ஃபுட்' (Club foot) என்று தவறாகக் கருதி பயப்படுவார்கள். ஆனால் இவை இரண்டும் வெவ்வேறானவை.
வாழைப்பழ பாதம் ஆபத்தற்றது. பாதம் நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கும் கைகளால் நிமிர்த்த முடியும். முக்கியமாக, குதிகால் நேராக இருக்கும். வாழைப்பழ பாதம் குழந்தைக்கு வலியை ஏற்படுத்தாது. இதனால் எதிர்காலத்தில் நடப்பதில் எந்தச் சிக்கலும் இருக்காது.
பிறவி வளைபாதம் ஒரு தீவிரமான பிரச்சனை. பாதம் மிகவும் இறுக்கமாக (Stiff) இருக்கும்; கைகளால் நிமிர்த்த முடியாது. இதில் குதிகாலும் உள்நோக்கித் திரும்பியிருக்கும். இதற்குத் தீவிர சிகிச்சை அவசியம்.
சிகிச்சை முறைகள்:
குழந்தை பிறந்ததும், பாதத்தின் நெகிழ்வுத்தன்மையை (Flexibility) பொறுத்து மருத்துவர் சிகிச்சையைத் தீர்மானிப்பார்.
1. லேசான பாதிப்பு: பாதத்தை கைகளால் மெதுவாக நிமிர்த்த முடிந்தால், இதற்கு எந்தச் சிகிச்சையும் தேவையில்லை. குழந்தை வளர வளர, 6 முதல் 12 மாதங்களுக்குள் இது தானாகவே சரியாகிவிடும்.
2. மிதமான பாதிப்பு: பாதத்தை நிமிர்த்த முடிந்தாலும், அது மீண்டும் வளைந்த நிலைக்குச் சென்றால், மருத்துவர் சில உடற்பயிற்சிகளை (Stretching exercises) பரிந்துரைப்பார். ஒவ்வொரு முறையும் குழந்தைக்கு டயப்பர் மாற்றும் போதும், பெற்றோர் குழந்தையின் பாதத்தை மெதுவாக வெளிப்பக்கமாகத் தள்ளிப் பயிற்சி அளிக்க வேண்டும்.
3. கடுமையான பாதிப்பு: பாதம் மிகவும் இறுக்கமாக இருந்து, கைகளால் நிமிர்த்த முடியாவிட்டால் தொடர் மாவுக்கட்டு சிகிச்சை தேவைப்படும். ஒன்றிலிருந்து இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை இந்தக்கட்டு மாற்றப்பட்டு, பாதம் படிப்படியாக நேராக்கப்படும். நடைபழகும் போது வளைவில்லாத சிறப்பு காலணிகள் அணியப் பரிந்துரைக்கப்படலாம்.
4. அறுவை சிகிச்சை: இது மிகவும் அரிதானது. பெரும்பாலும் 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, கடுமையான வலி அல்லது காலணி அணிவதில் சிக்கல் இருந்தால் மட்டுமே அறுவை சிகிச்சை பரிசீலிக்கப்படும்.
இந்தக் கட்டுரை பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. உங்கள் குழந்தைக்கு இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.