கருப்பு கொள்ளு vs பிரவுன் கொள்ளு : ஆரோக்கியத்திற்கு சிறந்தது எது?
'கொள்ளு' - கிராமங்களில் அதிகம் கேள்விப்படும் பெயர். கடந்த சில ஆண்டுகளாக நகர்புறங்களில் கொள்ளு பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. அதற்கு காரணம் உடல் ஆரோக்கியம் மற்றும் உடல் எடையை குறைக்க கொள்ளு பரிந்துரைக்கப்படுகிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அடிக்கடி உணவில் கொள்ளுவை சேர்த்து கொண்டால் நீங்களே அதிசயப்படும் வகையில் நல்ல மாற்றத்தை காண்பீர்கள்.
கருப்பு கொள்ளு, பிரவுன் கொள்ளு என கொள்ளு பல வகைகளில் கிடைக்கிறது. horse gram என்றுஅழைக்கப்படும் பிரவுன் கொள்ளு பயறில் புரதம், நார்ச்சத்து, மினரல்கள் போன்றவை அதிகம் இருக்கின்றன. உடல் சூடு அதிகமாக இருப்பவர்கள் மட்டும் மிதமான அளவில் கொள்ளுவை எடுத்துக் கொள்ள வேண்டும். கொள்ளு, அதிக உடல் எடை, தாதுப்பற்றாக்குறை, நீர்ச்சத்து குறைபாடு, மாதவிடாய் பிரச்சனை, மலச்சிக்கல் பிரச்சனைகளுக்கு நிவாரணம் தருகிறது.
'Black horse gram', 'கருப்பு கானம்' என்று அழைக்கப்படும் கருப்பு கொள்ளுவில் நார்ச்சத்து, ஆன்டி ஆக்சிடண்டுகள், கனிமச் சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்களும் அதிகமாகவே உள்ளது. கருப்பு கொள்ளு, பிரௌன் நிற கொள்ளுவை விட அதிக நன்மைகளைக் கொண்டது.
கருப்பு கொள்ளுவை போலவே பிரவுன் கொள்ளு பயறும் நம் உடலுக்கு அதிக சத்துக்களை கொடுக்க கூடியது. இதில் புரதச்சத்து, நார்ச்சத்து, கார்போஹைட்ரெட், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம் என பல சத்துக்கள் உள்ளன.
கருப்பு கொள்ளு உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பைக் கரைக்க உதவுகிறது. மழை மற்றும் பனிக்காலத்தில் உண்டாகும் சளி, இருமலை சரிசெய்ய உதவும். கொள்ளுவை முளைக்கட்டி சாப்பிடும் போது அதன் சத்துக்கள் பன்மடங்கு அதிகரிக்கும். கருப்பு கொள்ளுவை ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் பயன்படுத்துகிறார்கள். கொள்ளுவில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் தொடர்பான பிரச்சனைகளை குறைக்கிறது.
கருப்பு கொள்ளு பயறை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளும்போது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பலப்படுத்தும். கருப்பு கொள்ளு பயிறை வேகவைத்து அந்த நீரை காலையில் வெறும் வயிற்றில் தினமும் குடித்து வர, சிறுநீரகக் கற்கள் கரைய ஆரம்பிக்கும். கருப்பு கொள்ளு மற்றும் பழுப்பு கொள்ளு இரண்டும் சமையலில் மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் சிறுநீரக கற்கள், நீரிழிவு நோய், உடல் பருமன் மற்றும் செரிமான பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது.
100 கிராம் கருப்பு கொள்ளுவில் 22 கிராம் புரதமும், 56.6 கிராம் கார்போஹைட்ரேட்டும், 5.3 கிராம் நார்ச்சத்தும் உள்ளது.
அதேபோல் 100 கிராம் பிரவுன் கொள்ளுவில் 22.5 கிராம் புரதமும், 66.6 கிராம் கார்போஹைட்ரேட்டும், 16.3 கிராம் நார்ச்சத்தும் உள்ளது.
பிரவுன் கொள்ளுவை விட கருப்பு கொள்ளு சமைக்க அதிக நேரம் எடுக்கும். சமைத்த பின் கருப்பு கொள்ளுவை விட பிரவுன் கொள்ளு எடை அதிகமாக இருக்கும். பிரவுன் கொள்ளு பாரம்பரிய மருத்துவத்தில் காய்ச்சல், தொற்றுகள், மூல நோய் மற்றும் சிறுநீரக கற்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.
கருப்பு கொள்ளுவில் நிறைந்துள்ள இரும்புச்சத்து, கால்சியம் ஆகியவை இரத்த சிவப்பணுக்களின் தொகுப்பு, எலும்பு ஆரோக்கியம் மற்றும் தசை வலிமையை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் செரிமானத்தை சீராக்கவும், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பண்புகளுக்காக அறியப்படுகிறது. கருப்பு கொள்ளுவில் உள்ள அதிகளவு இரும்புச்சத்து ஹீமோகுளோபின் அளவை பராமரிக்க உதவுகிறது. இது மாதவிடாய் தொடர்பான பிரச்னைகளை குறைக்கிறது.
கருப்பு கொள்ளு அல்லது பிரவுன் கொள்ளு எதுவாக இருந்தாலும் தினமும் சாப்பிடுவது பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும். ஆனால் அதில் உள்ள அதிக புரதம் மற்றும் நார்ச்சத்து காரணமாக மிதமான அளவில் சாப்பிடுவது நல்லது.
கொள்ளுவில் அதிக ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும் சில தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது. அதாவது அதிகளவும் கொள்ளு எடுத்துக்கொள்வது கீல்வாதத்திற்கு வழிவகுக்கும், இதனால் மூட்டுகளில் வீக்கம் மற்றும் வலி ஏற்படலாம். அதுமட்டுமில்லாமல் வாயு தொல்லையையும் ஏற்படுத்தலாம். கொள்ளு சில சந்தர்ப்பங்களில் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பதால் மருத்துவரின் ஆலோசனை பெற்று சாப்பிடுவது நல்லது.