பிராணாயாமம் மற்றும் சரயோகம்: சரியான நேரத்தில் மூச்சுப் பயிற்சி செய்து முழு பலன் பெறுவது எப்படி?

விடியற்காலை மூச்சுப் பயிற்சியின் அற்புத நன்மைகள் மற்றும் அதைச் சரியாகச் செய்யும் எளிய வழிகாட்டல்.
பிராணாயாமம் | சரயோகம் | மூச்சுப் பயிற்சி
பிராணாயாமம் | சரயோகம் | மூச்சுப் பயிற்சி
Updated on

சரயோகம் என்பது நமது மூச்சு ஓட்டத்தை (சுவாசம்) கவனித்து, அதைக் கட்டுப்படுத்தி உடல் மற்றும் மன நன்மைகளைப் பெறும் ஒரு கலை ஆகும் (மூச்சுப் பயிற்சி). சரயோக பயிற்சி செய்பவர்கள் பயிற்சிக்கான விதிமுறைகளை கடைப்பிடித்தால் மட்டுமே முழுபயனையும் அடைய முடியும். அதனால் இப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை படித்து அவசியம் கடைபிடிக்க வேண்டும். அப்படி கடைப்பிடிக்கும் பொழுது ஆரோக்கியம் மேம்படும். அதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை இப்பதிவில் காண்போம்!

உடல் தூய்மை: காலை கடன்களை கழித்த பிறகு வெறும் வயிற்றோடு இருக்கும் போது பிராணாயாமமும் மற்ற சரயோக பயிற்சிகளையும் செய்ய வேண்டும். மலச்சிக்கல் உள்ளவர்கள் காலையில் 3 டம்ளர் வெண்ணீர் குடித்துவிட்டு பத்து நிமிடம் கழித்து பிரணாயாமத்தை துவங்க வேண்டும். மலச்சிக்கல் உள்ளவர்கள் மலச்சிக்கல் நீங்கும் வரைக்கும் கும்பகம் இல்லாத மூச்சை அடக்காமல் பிராணாயாமத்தை செய்ய வேண்டும்.

குளியல்: குளிப்பதற்கு முன்பு அல்லது குளித்த பிறகு சர யோக பயிற்சிகளை செய்யலாம். ஆனால் அரை மணி நேரம் இடைவெளி இருப்பது நல்லது.

பயிற்சிக்குரிய காலம்:

விடியற்காலை 4.00 மணி முதல் 6:00 மணி வரை உள்ள நேரம் பயிற்சிக்கு சிறந்தது. இந்நேரத்தில் இயற்கை சூழ்நிலை அமைதியுடனும் சூரியகாந்த அலைகள் நிரம்பியதாகவும் இருக்கும். இந்நேரத்தில் உடலில் இரைப்பையும் குடல்களும் காலியாக இருப்பதால் பிராணாயாமத்தில் அதிக அளவு காற்று சுவாசிக்க முடியும் மற்றும் கும்பக பிராணாயாமத்தில் மூச்சு சரியாக அடக்க முடியும்.

பிராணாயாமம் | சரயோகம் | மூச்சுப் பயிற்சி
பிராணாயாமம் | சரயோகம் | மூச்சுப் பயிற்சி

அது மட்டுமல்லாமல் ஜபம், தியானம் செய்யும்போது ஜீரண செயல் நடைபெறாமல் இரைப்பையும் குடல்களும் காலியாக இருப்பதால் விரைவில் மூச்சும், மனமும் அடங்கும். விடியற்காலையில் இயற்கையாகவே சற்று அமைதியாக மனம் இருப்பதால் பயிற்சியில் அதிக கவனம் செலுத்த முடிகிறது .

விடியற்காலை 4 மணிக்கு எழுந்து சாயோக பயிற்சிகளை செய்யும் போது உடல், மன இயக்கம் சீராகி சூரிய உதய காலத்தில் எந்த நாசியில் எந்த பூதத்தில் மூச்சு துவங்க வேண்டுமோ அதன்படி துவங்கி நடைபெறும். தினமும் சூரிய உதய காலத்தில் மூச்சை கவனிக்கும் போது மூச்சு நாசிகளில் மாறி இயங்கத் துவங்கினால் உடனே மூச்சை மாற்றி அமைக்க பயிற்சிகளை செய்து சுவாச இயக்கத்தை சரி செய்து கொள்ள வேண்டும்.

சூழ்நிலை: சுத்தமான காற்று நிறைந்த தூய்மையான அறை சரயோக பயிற்சிக்கு சிறந்தது . அந்த இடத்தில் உள்ள காற்றில் அதிக வெப்பமோ குளிர்ச்சியோ இல்லாமல் இருக்க வேண்டும். மனதிற்கு அமைதி தரும் இயற்கை காட்சிகள் உள்ள பூந்தோட்டம் மற்றும் அருவி நதி போன்ற நீர்நிலைகளின் கரைப்பகுதி போன்ற இடங்களில் பயிற்சி செய்ய வசதி இருந்தால் இன்னும் அதிக பயன் கிடைக்கும்.

இருக்கை: வெறும் தரையில் பயிற்சி செய்யக்கூடாது .மேடு, பள்ளம் இல்லாத தரையில் தர்ப்பை பாயை விரித்து போட்டு அதன் மேல் ஒரு வெள்ளைத் துணியை விரித்து போட்டு அதன் மேல் அமர்ந்து பயிற்சி செய்ய வேண்டும். கிழக்கு அல்லது வடக்கு திசையை நோக்கி அமர்ந்து பயிற்சியை பிரார்த்தனையுடன் துவங்க வேண்டும்.

உடை: இருக்கமான ஆடைகளை அணிந்து கொண்டு பயிற்சி செய்யக்கூடாது . பயிற்சியின்போது உடலின் இயக்கம் இயல்பாக இருக்க தளர்வான உடைகளை அணிந்து செய்வது நல்லது. அதிக குளிர் அல்லது வெப்ப பிரதேசத்தில் உள்ளவர்கள் அதற்கு ஏற்ற உடை அணிந்து பயிற்சி செய்யலாம். பொதுவாக பிராணாயாமத்திற்கு என்று குறைந்த ஆடைகளை அணிந்து செய்வது நல்லது. பொதுவாக மிதமான சீதோஷ்ண உள்ள இடங்களில் மென்மையான பருத்தி ஆடைகள் அணிந்து பயிற்சி செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

இறுக்கமான உடை விலாப் பகுதி, இருதயத்தின் துடிப்பு மற்றும் இயல்பான மூச்சிக்கு தொந்தரவு உண்டு பண்ணும். இரவு உடை, ஈரத்தலையுடன் சரயோக பயிற்சிகளை செய்யக்கூடாது. மொட்டைத் தலையானால் துணியால் மறைத்துக் கொள்ள வேண்டும்.

உமிழ்நீர்: பிராணாயாம பயிற்சியின் போது உண்டாகும் உமிழ் நீரை மூச்சை இழுக்கும்போது அல்லது மூச்சை அடக்கும் போதும் விழுங்கக்கூடாது. மூச்சுக் காற்றை வெளியே விட்ட பிறகு மீண்டும் மூச்சை உள்ளே இழுப்பதற்கு முன்பு உள்ளுக்கு விழுங்க வேண்டும்.

நகம்: விரல்களில் அதிகப்படியாக நகத்தை வளர விடாமல் சில நாட்களுக்கு ஒரு முறை வெட்டி விட வேண்டும்.

முதுகு கழுத்து தலை: பிராணாயாமம், ஜெபம் , தியான பயிற்சியின் போது முதுகு, கழுத்து, தலை ஒரே நேர் கோட்டில் இருக்க வேண்டும். கோணலாக இருக்கக் கூடாது.

உடல்நிலை: பிராணாயாமம், ஜபம் மற்றும் தியான பயிற்சியின் போது உடலின் எந்த பாகமானாலும் சரி இறுக்கமில்லாமல் தளர்வாக வைத்துக் கொள்ள வேண்டும்.

சுவாச இயக்கம்: எந்த ஒரு பிராணாயாமத்தை துவங்கும் போதும் முதலில் நுரையீரலில் இருக்கும் அசுத்தக் காற்றை வெளிமூச்சின் மூலம் வெளியேற்றிய பிறகு பிராணாயாம முறைப்படி மூச்சுக்காற்றை உள்ளே இழுக்க வேண்டும்.

மனநிலை: சரியோக பயிற்சிகளை செய்யும்போது மனதை அதில் முழுமையாக ஈடுபடுத்தி உற்சாகத்துடன் செய்ய வேண்டும்.

இதையும் படியுங்கள்:
கல்லீரல் பாதிப்பை தவிர்க்க வேண்டுமா? கொழுப்பு கல்லீரல் (Fatty Liver) பற்றிய முழுத் தகவல்!
பிராணாயாமம் | சரயோகம் | மூச்சுப் பயிற்சி

சில குறிப்புகள்:

  • பிராணாயாம மூச்சுப் பயிற்சியின் போது மூச்சுக்காற்றை உள்ளுக்கு இழுக்கும்போதும் வெளியே விடும் போதும் மூச்சுக்காற்றில் ஓசை உண்டாகாதபடி நிதானமாகவும், ஆழமாகவும் சுவாசிக்க வேண்டும்.

  • பிராணயாமம் செய்து முடித்த உடன் உரக்கப் பேசவோ ,வேகமாக நடக்கவோ கூடாது. பிராணாயாமத்திற்கு பிறகு பத்து நிமிடம் சவாசனத்தில் ஓய்வெடுத்த பிறகு அன்றாட பணிகளை செய்யலாம்.

  • தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்த பிறகும், உணவு உண்ட உடனேயும், பசியோடு இருக்கும்போதும், தலைவலி ,காது வலி , கண் வலி ,பல் வலி உள்ள போதும் ஆசனம், பிராணாயாமம் மற்றும் தியான பயிற்சியை செய்யக்கூடாது.

  • பிராணாயாமத்தின் போது வியர்வை உண்டானால் கையாலே துடைத்து கொள்ள வேண்டும் . துணியால் வியர்வையை துடைக்க கூடாது.

இதுபோல் பிராணாயாம பயிற்சிகளை மேற்கொண்டு ஆரோக்கியம் காப்போமாக!

இதையும் படியுங்கள்:
மூட்டு வலியை பறக்கவிட எளிய எருக்கன் இலை வைத்தியம்!
பிராணாயாமம் | சரயோகம் | மூச்சுப் பயிற்சி
மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.

Reference

logo
Kalki Online
kalkionline.com