சில வேளைகளில் ஒரு அறைக்குள் நுழைந்த பின்பு, எதற்காக அந்த அறைக்குள் வந்தோம்? என்பதைத் திடீரென்று மறந்து விடலாம் அல்லது ஒரு பெயரையோ அல்லது முக்கியமான நாளையோ நினைவில் வைத்துக் கொள்வதில் சிக்கல் ஏற்படலாம். இது அனைவருக்கும் அவ்வப்போது நடக்கக்கூடியதுதான். ஆனால், அந்தத் தருணங்கள் அடிக்கடி நடக்கத் தொடங்கினால் என்ன செய்வது? நினைவாற்றல் இழப்பு அல்லது சிந்திக்கும் திறனில் சிறிது சரிவு ஏற்பட்டுள்ளது என்று கருதினால், வெறுப்பும் பயமும் தானாகவே வந்துவிடும்.
வயதாகும் போது நினைவாற்றல் இழப்பு என்பது ஒரு பொதுவான பிரச்சனைதான். ஆனால், அது இளம் வயதினரிடத்திலும் ஏற்படலாம். நினைவாற்றல் இழப்புக்கான சில பொதுவான காரணங்கள் இருக்கின்றன. அவை;
1. முதுமை - வயதாகும்போது, மூளை சிறிது சிறிதாக மெதுவாகச் செயல்படுவது இயற்கையானது.
2. வைட்டமின் குறைபாடு - வைட்டமின் பி12 மற்றும் வைட்டமின் டி குறைபாடு இருப்பதால் அறிவாற்றல் மற்றும் நினைவாற்றல் குறைபாடு வருகிறது.
3. மன அழுத்தம் - மன அழுத்தம் அல்லது பதட்டமாக உணரும் போது, செய்திகளை நினைவில் கொள்வது கடினமாக இருக்கும்.
4. தூக்கப் பிரச்சினைகள் - போதுமான தூக்கம் இல்லாத போது மூளை எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்பதைப் பாதிக்கிறது. இதனால் பல செய்திகளை நினைவில் கொள்வது கடினமாகிறது.
5. மருத்துவ நிலைமைகள் - சில நேரங்களில், நினைவாற்றல் பிரச்சினைகள் அல்சைமர் நோய் அல்லது பிற வகையான டிமென்ஷியா போன்ற நிலைமைகளுடன் இணைக்கப்படலாம்.
அவ்வப்போது சில செய்திகளை அல்லது செயல்களை மறந்துவிடுவது என்பது இயல்பானது. ஆனால், நினைவாற்றல் இழப்பு அடிக்கடி ஏற்படத் தொடங்கினால் அல்லது மோசமாகி விட்டால், அது ஏதோ ஒரு பெரிய பிரச்னையின் அறிகுறியாக இருக்கலாம். இதனை அறிவாற்றல் வீழ்ச்சி என்கின்றனர். இதன் சில ஆரம்ப அறிகுறிகளாக:
1. முக்கியமான நிகழ்வுகள் அல்லது சந்திப்புகளை மறந்து விடுதல்.
2. பழக்கமான இடங்களில் தொலைந்து போவது
3. உரையாடல்களைப் பின்தொடர்வதில் அல்லது வார்த்தைகளை நினைவில் கொள்வதில் சிக்கல்
4. சாவிகள் அல்லது உங்கள் தொலைபேசி போன்ற பொருட்களை அடிக்கடி தவறாக வைத்துவிடுவது
5. நேரம் அல்லது நாட்கள் குறித்து குழப்பமாக உணர்தல்
இந்த அறிகுறிகளைக் கவனித்தால், ஆலோசனைக்காக மருத்துவரிடம் செல்வது நல்லது.
நினைவாற்றலை மேம்படுத்தக் கீழ்க்காணும் ஏழு வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
1. சுறுசுறுப்பாக இருத்தல்:
உடற்பயிற்சி உடலுக்கு மட்டுமல்ல; அது மூளைக்கும் நல்லது! உடல் செயல்பாடு மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது நினைவாற்றலைக் கூர்மையாக வைத்திருக்க உதவுகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு விறுவிறுப்பான நடைப்பயிற்சி கூட பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்.
2. போதுமான தூக்கம் பெறுதல்:
மூளை ஓய்வெடுக்கவும், புத்துணர்ச்சி பெறவும், வாய்ப்பு கிடைக்கும் நேரமெல்லாம் தூக்கம் போடலாம். ஒவ்வொரு இரவும் 7 முதல் 9 மணி நேரம் தூங்குவதை வழக்கமாகக் கொள்ளலாம். தூங்குவதில் சிக்கல் இருந்தால், வழக்கமான படுக்கை நேரத்தை அமைக்க முயற்சிக்க வேண்டும் அல்லது படுக்கைக்கு முன், செல்பேசி பார்த்தல், தொலைக்காட்சி பார்த்தல் போன்ற திரை நேரத்தைக் குறைக்க வேண்டும்.
3. ஆரோக்கியமான உணவுகளை உண்ணுதல்:
மூளையின் ஆரோக்கியத்திற்குச் சமச்சீரான உணவு முக்கியம். வைட்டமின்கள் பி12 மற்றும் டி குறைபாடு நினைவாற்றல் இழப்புக்கு பங்களிக்கக்கூடும் என்பதால், ஆக்ஸிஜனேற்றிகள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் உங்கள் மூளையைச் சேதத்திலிருந்து பாதுகாக்க உதவும். மீன்கள் , பெர்ரி (ப்ளூபெர்ரி), கொட்டை உணவுகள் மற்றும் இலை, கீரைகளை அதிக அளவில் சாப்பிடுவது நலம் தரும்.
4. மூளைக்குச் சவால் விடுதல்:
தசைகளைப் போலவே, உங்கள் மூளைக்கும் நல்ல உடற்பயிற்சி தேவை. புதிர்களைச் செய்தல், புத்தகங்களை வாசித்தல் அல்லது ஒரு புதிய பொழுதுபோக்கைக் கற்றுக்கொள்ள வேண்டும். சதுரங்கம் அல்லது குறுக்கெழுத்துக்கள் போன்ற விளையாட்டுகளை விளையாடுவது மூளையைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கவும், நினைவாற்றலை மேம்படுத்தவும் உதவும்.
5. சமூகமாக இருத்தல்:
நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுவது மூளையைக் கூர்மையாக வைத்திருக்க உதவும். பேசுவது, சிரிப்பது மற்றும் நல்ல உரையாடல்களை நடத்துவது அனைத்தும் அறிவாற்றல் நலத்திற்கு முக்கியம். எனவே, மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள நேரம் ஒதுக்குங்கள்.
6. மன அழுத்தத்தை நிர்வகித்தல்:
நாள்பட்ட மன அழுத்தம் மூளை மற்றும் நினைவாற்றலைப் பாதிக்கும். ஆழ்ந்த சுவாசம், யோகா அல்லது தியானம் போன்ற மன அழுத்த நிவாரண நுட்பங்களை முயற்சிக்கலாம். ஒரு நாளைக்குச் சில நிமிடங்கள் ஓய்வெடுத்துக் கொள்வது கூட பெரிய நன்மைகளைத் தரும்.
7. வழக்கத்தை வைத்திருத்தல்:
ஒரு வழக்கத்தை வைத்திருப்பது குழப்பத்தைக் குறைக்கவும், செய்திகள் மற்றும் செயல்களை எளிதாக நினைவில் வைத்துக் கொள்ளவும் உதவும். அன்றாட நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணிக்க நினைவூட்டல்கள், பட்டியல்கள் அல்லது நாட்காட்டிகளைப் பயன்படுத்தலாம்.
நினைவாற்றல் இழப்பு அல்லது அறிவாற்றல் குறைபாடு குறித்துக் கவலைப்பட்டால், ஒரு மருத்துவ வல்லுநரிடம் அல்லது உளவியல் வல்லுநரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது. அவர்கள் சரியான வழிகாட்டுதலுடன் உடல் நலத்திற்குத் தகுந்த தேர்வுகளைச் செய்து உங்கள் நினைவாற்றல் இழப்பு அல்லது அறிவாற்றல் குறைபாட்டை நீக்க உதவுவார்கள்.
நினைவாற்றல் இழப்பு இல்லாதவர்களாக இருப்பினும், நேர்மறையாக இருப்பதுடன், மனதைக் கூர்மையாக வைத்திருக்கத் தொடர்ந்து வேலை செய்திட வேண்டும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)