
மகிழிக்கீரை அல்லது பண்ணைக்கீரை (Celosia argentea) எனப்படும் கீரையானது தண்ணீர் பாசனம் தாராளமாக உள்ள இடங்களில் வளரும். வெப்ப மண்டல காடுகளில் செழித்து வளரும் தன்மை கொண்டது. இதன் பூக்கள் மிகவும் பிரகாசமான நிறங்களில் இருக்கும். பெரும்பாலும் மழைக்காலத்தில் மட்டுமே இதனை காண முடியும்.
மயில் கீரை, மவுலிக் கீரை, மசிலிக்கீரை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இதன் பூக்கள் கோழியின் கொண்டையை போன்ற உருவத்தை கொண்டுள்ளது.
இந்த கீரையில் பீட்டா கரோட்டின், வைட்டமின் ஈ, போலிக் அமிலம், வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்றவை நிறைந்துள்ளன. மேலும், புரதச்சத்து 4.7 சதவீதம், அமராந்தைன், அக்சாலிக் அமிலம் மற்றும் பைட்டிக் அமிலம் போன்றவையும் உள்ளன.
மென்மையான தண்டுகள் கொண்ட செடி இனமாக காணப்படும் மகிழிக்கீரையில், அவற்றின் இலைகள் மற்றும் தண்டை சமைத்து உண்ணலாம். மற்ற கீரைகளை சமைப்பதை போலவே இந்த கீரையையும் பருப்புடன் சேர்த்து சமைத்தால் அதிக சுவையாக இருக்கும். கீரையை சுத்தம் செய்து, அதனுடன் பருப்பு சேர்த்து வேகவைத்து கடைந்து சாதத்துடன் சிறிதளவு நெய் சேர்த்து உண்ணலாம். இதனால் நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைப்பது உறுதி.
இந்த கீரை ரத்தக்கசிவை போக்க கூடியது. நுண்கிருமிகளை அழிக்கவல்லது. புண்களை ஆற்றும் தன்மை உடையது. குடல் நச்சுகளை வெளியேற்றுகிறது. இரைப்பை புற்றுநோய் வராமல் தடுக்கிறது. பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல், வயிற்று வலி, ஊட்டச்சத்து குறைபாடு, மாதவிலக்கு தொடர்பான பாதிப்புகளை சரி செய்வதுடன், எலும்புகளுக்கு பலம் தருகிறது.
குடல் புண் மற்றும் சரும வியாதிகளை குணப்படுத்த இக்கீரையை பருப்புடன் சேர்த்து வேகவைத்து, இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து கடைந்து சாப்பிடலாம். மேலும், சரும நோய்களான சிரங்கு, சொரி போன்ற நாள்பட்ட நோய்கள் குணமாகும்.
பேதி, வயிற்றுப்போக்கு, சீதபேதி குணமாக மகிழிக்கீரையின் பூக்களை சுத்தம் செய்து வெந்நீர் விட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதை வடிகட்டி குடித்த நல்ல பலன் தெரியும்.
இதன் பூக்களில் காணப்படும் விதைகளை சேகரித்து பொடியாக்கி சிறிதளவு எடுத்து பொடித்து அதை பாலுடன் கலந்து காலை, மாலை இருவேளை குடிக்க இருமல் குணமாகும் என்கிறார்கள், சித்தா டாக்டர்கள்.
இந்த கீரையின் இலைகள் மற்றும் பூக்கள் உண்ணக்கூடியவை. இவை குறிப்பாக மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பயன்பாட்டிற்காக அதிகளவில் வீடுகளில் வளர்க்கப்படுகின்றன.
பண்ணைக்கீரை பாரம்பரிய மருத்துவத்தில் தலைவலி, புண்கள், கண் அழற்சிகள், தோல் வெடிப்பு, மாதவிடாய் வலி போன்ற சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி, இந்த கீரை விஷயத்தில் மிகச்சரியாக பொருந்தும். இந்த கீரை உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும் என்றாலும், அதை அதிகமாக சாப்பிடுவதால் சில தீமைகள் ஏற்படலாம். முக்கியமாக நமது உடலில் எதிர்மறை பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
பச்சிளம் குழந்தைகளுக்கு மசிலிக்கீரை கீரை அதிகமாக சாப்பிடக் கொடுத்தால், செரிமான பிரச்சினைகள் ஏற்படலாம். மேலும் இந்த கீரையை அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது சிறுநீரக கல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மசிலிக்கீரைகீரையில் அதிகளவில் வைட்டமின் கே உள்ளது. ரத்தம் உறைதல் தொடர்பான நோய்க்கு மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள் இந்த கீரையை சாப்பிடக்கூடாது.