அரிசி என்று நாம் பொதுவாகச் சொல்லி விடுகிறோம். உலகம் முழுவதும் 40 ஆயிரத்துக்கும் அதிகமான அரிசி வகைகள் விளைவிக்கப்பட்டு வருகின்றன. மரபியல், தானிய நீளம், நிறம், தடிமன், ஒட்டும் தன்மை, நறுமணம், வளரும் முறை மற்றும் பிற குண நலன்களில் அரிசி வேறுபடுகிறது. ஆசிய அரிசி வகைகளில் இண்டிகா, ஐபோனிகா என்று இரண்டு முதன்மை இனங்கள் இருக்கின்றன. இந்த இரண்டு இனங்களின் கூட்டாக அமைந்த அரிசிகளில் சம்பா அரிசியும் ஒன்றாக இருக்கிறது. சம்பா அரிசி (Champa Rice) விரைவாக முதிர்ச்சியடையும், வறட்சியைத் தாங்கும் அரிசியாகும். கிழக்கு இந்தியாவிலிருந்து தோன்றிய சம்பா அரிசி 11 ஆம் நூற்றாண்டில் சம்பா ராஜ்ஜியத்திலிருந்து சாங் சீனாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர், சம்பா அரிசி 11 ஆம் நூற்றாண்டில் சாங் பேரரசர் ஜென்சோங்கின் ஆட்சிக் காலத்தில் (ஆட்சி. 997–1022) சம்பாவிடமிருந்து ஒரு காணிக்கை பரிசாக சாங் சீனாவிற்கு அனுப்பப்பட்டது.
சாங் வம்ச அதிகாரிகள் சீனா முழுவதும் விவசாயிகளுக்கு அவர்களின் பயிர் விளைச்சலை அதிகரிப்பதற்காக விரைவாக வளரும் சம்பா அரிசியை வழங்கினர். விரைவான வளர்ச்சியைக் கொண்ட சம்பா அரிசி 100 மில்லியனுக்கும் அதிகமான வளர்ந்து வரும் சீன மக்கள்தொகைக்கு உணவளிப்பதில் முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கிறது.
சம்பா அரிசி என்று பொதுவாகக் குறிப்பிட்டாலும், இவற்றிலும் பல வகைகள் இருக்கின்றன. சம்பா அரிசி உடலுக்குப் பலமளிப்பதுடன், நல்ல உடல் நலத்திற்கும் உதவக்கூடியதாகவும் இருக்கிறது.
அகத்தியர் குணபாடம் (அகத்தியரால் எழுதப்பட்ட உணவு குறித்த நூல்) எனும் நூலில் சில சம்பா அரிசி வகைகள் குறிப்பிடப்பட்டிருப்பதுடன், அதனைச் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் மற்றும் விளைவுகள் குறித்துச் சொல்லப்பட்டிருக்கின்றன.
ஈர்க்குச்சம்பா அரிசி :
கடவுளுக்குப் படைப்பதற்காக வழங்கும் ஈர்க்குச்சம்பா அரிசி, நாவுக்குச் சுவையையும், பார்க்க விருப்பத்தையும் தரும். கொஞ்சம் தீக்குற்றத்தையும் உண்டு பண்ணும்.
புழுகுசம்பா அரிசி :
இவ்வகை அரிசியினைச் சமைத்து உண்பதால், அழகும், ஒளியும், பெரும் பசியும், வன்மையும் உண்டாகும். தாகம் நீங்கும். இது உடலிற்குக் களைப்பைத் தரும்.
கோரைச்சம்பா அரிசி :
இவ்வகை அரிசியினைச் சமைத்து உண்பதால், வெறி, உட்சூடு, வெள்ளை, நமைச்சல் இவைகளை நீக்கும். குளிர்ச்சியைத் தரும்.
குறுஞ்சம்பா அரிசி :
இவ்வகை அரியினைச் சமைத்து உண்பதால், உடலில் வெப்பம் அதிகரிக்கும். கரப்பான் போன்ற அரிப்புகளை ஏற்படுத்தும். ஆண்மையைப் பெருக்கும். உடலில் குத்துகின்ற வலி நோயை நீக்கும்.
மிளகுச் சம்பா அரிசி :
இவ்வகை அரிசியைச் சமைத்து உண்பதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. பழங்கால மல்யுத்த வீரர்கள் இதனை உண்டு தங்கள் உடல் வலிமையை அதிகரித்துக் கொண்டனர். இது பசித்தீயை வளர்க்கும். பெருவளி முதலிய பலவித நோய்களை அகற்றும்.
சீரகச்சம்பா அரிசி :
இவ்வகை அரிசியைச் சமைத்து உண்பதால், மீளவும் உண்பதற்கான பசியைத் தூண்டும். வளி நோய்களைப் போக்கும்.
காளான் சம்பா அரிசி :
இவ்வகை அரிசியைச் சமைத்து உண்பதால், உடலுக்கு மலை போன்ற உறுதியும் நன்மையும் உண்டாகும். சில வழி நோய்களை நீக்கும்.
மைச்சம்பா அரிசி :
இவ்வகை அரிசியைச் சமைத்து உண்பதால், சுவையின்மை, வாந்தி, வளி, தீ முதலிய குற்றங்களால் உண்டாகும் நோய்கள் போகும்.
கோடைச் சம்பா அரிசி :
இவ்வகை அரிசியைச் சமைத்து உண்பதால், முக்குற்றத்தால் பிறந்த வாத வலியும், உடலிலுள்ள சிற்சில நோய்களும் விலகும்.
காடைச் சம்பா அரிசி :
இவ்வகை அரிசியைச் சமைத்து உண்பதால், மேக அனல் போன்ற சில நோய்கள் நீங்கும். உடலிற்கு வன்மை தரும்.
மல்லிகைச் சம்பா அரிசி :
இவ்வகை அரிசியைச் சமைத்து உண்பதால், வாய்க்குச் சுவையும், உறுதியும் தரும். கரப்பான், வெள்ளை மேகம், கண் எரிச்சல் ஆகியவைகளைப் போக்கும்.
இலுப்பைப்பூச் சம்பா அரிசி :
இவ்வகை அரிசியைச் சமைத்து உண்பதால், தீக்குற்றத்தால் விளைகின்ற சிற்சில நோய், தலைகொதிப்பு, நீர்வேட்கை, வெப்பம் போன்றவைகளை உண்டாக்கும்.
மணிச்சம்பா அரிசி :
இவ்வகை அரிசியைச் சமைத்து உண்பதால், நீரிழிவை விலக்கும். உடலிற்கு நன்மை பயக்கும். மூத்தோரையும் இளையவரையும் வளர்க்கும். பசியை உண்டாக்கும்.
வளைத்தடிச் சம்பா அரிசி :
இவ்வகை அரிசியைச் சமைத்து உண்பதால், தீக்குற்றங்களின் பெருக்கு, வயிறு உளைதல், உப்புசம், கரப்பான், மிகுமந்தம் உண்டாகும்.
கைவரைச்சம்பா அரிசி :
இவ்வகை அரிசியைச் சமைத்து உண்பதால், உடலுக்கு மலை போன்ற வன்மையைத் தரும். ஆண்மையை உண்டாக்கும். உடலுக்கு மிக நன்று.
செஞ்சம்பா அரிசி :
இவ்வகை அரிசியைச் சமைத்து உண்பதால், கிளைக்கின்ற சிரங்கு, பெரும்புண், யானைசொறி ஆகியவை உண்டாகும், அதிகப் பசியைக் கொடுக்கும்.
கல்லுண்டைச் சம்பா அரிசி :
சுவையுள்ள இவ்வகை அரிசியைச் சமைத்து உண்பதால், பேசும் திறனைத் தரும்; குத்துச் சண்டைக்காரரும் எதிர்க்கமுடியாத வன்மையை உண்டாக்கும்.
குண்டுச்சம்பா அரிசி :
இந்த வகை அரிசியைச் சமைத்து உண்பதால், பசித்தீ கெடும். கரப்பான் பூச்சி ஒவ்வாமை உண்டாகும். நீர்வேட்கை போகும்.
குன்றிமணிச் சம்பா அரிசி :
இவ்வகை அரிசியைச் சமைத்து உண்பதால், வளி நோய்கள் விலகும். உடல் வலுக்கும். ஆண்மை பெருகும்.
இயற்கை உரங்களைப் பயன்படுத்தி சில உழவர்கள் உற்பத்தி செய்யப்படும் சம்பா அரிசிகள் குறிப்பிடத்தக்க பலன்களை அளிக்கின்றன. ஆனால், அதிக அளவிலான உற்பத்திக்கு வேதிப்பொருட்களைப் பயன்படுத்தி வரும் இக்காலத்தில், சம்பா அரிசிகள் முழுமையான பலன்களைத் தருமா? என்பது பெரும் கேள்விக்குறிதான்.