

படுவான்ஜின் (Baduanjin) என்பது 800 ஆண்டுகள் பழமையான பாரம்பரிய சீன உடற்பயிற்சி மற்றும் தியான முறையாகும். மென்மையான அசைவுகள் மற்றும் ஆழமான சுவாசத்தை அடிப்படையாகக் கொண்ட இப்பயிற்சி, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் பெரிதும் உதவுகிறது.
தமிழ்நாட்டில் யோகாசனங்கள் போல், சீன நாட்டில் ‘படுவான்ஜின்’ என்ற உடற்பயிற்சி முறை மிகவும் பிரபலமான ஒன்று. சுவாசம், உடல் இயக்கம், மன ஒருமைப்பாடு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் பயிற்சி முறை இதுவாகும். ஜிம் உபகரணங்கள் தேவையில்லை. மெதுவான அசைவுகள், ஒருங்கிணைந்த சுவாசம் மற்றும் தியானம் ஆகியவை இதில் அடங்கும்.
படுவான்ஜின் என்றால் 8 அரிய உடற்பயிற்சி முறை என்று பொருள். இந்த பயிற்சிகளை ஒருவர் தொடர்ந்து செய்து வந்தால் உடல் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தும். மூச்சு உள்வாங்குதலை ஒழுங்குபடுத்தும். மனஅழுத்தத்தை குறைக்க உதவும். ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.
தசைகள் மற்றும் மூட்டுகளின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும். ஒட்டு மொத்தத்தில் நோயின்றி வாழலாம் என்று சீனர்கள் நம்புகின்றனர்.
இரு கைகளையும் மேலே தூக்கி வானத்தை தாங்குவது போல நீட்டும் பயிற்சி, வில்லை இழுத்து கழுகை குறிவைத்தல் போன்ற அசைவு பயிற்சி, ஒரு கையை மேலே, மற்றொன்றை கீழே அழுத்துவது போல பயிற்சி, தலையை மெதுவாக பின்புறம் திருப்பி பார்க்கும் பயிற்சி, உடலை மெதுவாக வலது-இடது பக்கம் அசைக்கும் பயிற்சி, இரு கைகளாலும் பாதங்களை தொடுதல் பயிற்சி உள்ளிட்ட 8 பயிற்சிகள் உள்ளன. அதாவது 'எட்டு துண்டு ப்ரோகேட்' (Eight-piece brocade) என்றும் அழைக்கப்படும் இது, பட்டு போன்ற மென்மையான மற்றும் நேர்த்தியான 8 வெவ்வேறு அசைவுகளைக் கொண்டுள்ளது.
தினமும் 10–15 நிமிடங்கள் இந்த பயிற்சி செய்தவர்களின் BP கணிசமாக குறைந்தது கண்டறியப்பட்டுள்ளது. மெதுவான அசைவுகள் மற்றும் சுவாச பயிற்சிகளை கொண்ட இந்த முறை, மனஅழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது. அதேசமயம் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் BP மருந்துகளை நிறுத்தக்கூடாது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த பயிற்சியின் நன்மைகள்:
* விறுவிறுப்பான நடைப்பயிற்சிக்கு (Brisk walking)இணையான பலன்களை அளிக்கும் என்றும், சில சமயங்களில், குறிப்பிட்ட மருந்துகளுக்கு இணையான நன்மைகளை அளிக்கும் என்றும் ஆய்வுகள் காட்டுகின்றன.
* வயது வித்தியாசம் இன்றி யார் வேண்டுமானாலும் எந்த இடத்திலும் எளிதாகச் செய்யலாம். கற்றுக்கொள்வது எளிது. எந்த உபகரணமும் தேவையில்லை.
* உடலின் ஆற்றலைச் சீராக்கி, நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துகிறது.
* படுவான்ஜின் (Baduanjin) பலவிதமான உடல்நல நன்மைகளை ஒரே பயிற்சியில் ஒருங்கிணைப்பதால் அது பலனளிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
வீட்டில் படுவான்ஜின் பயிற்சி செய்வது எப்படி
இந்த பயிற்சியை தொடங்குவதற்கு உங்களுக்கு எந்த சிறப்பு ஏற்பாடுகளும் தேவையில்லை. பயிற்சி செய்வதற்கான ஒரு எளிய வழி இதோ:
* தோள்பட்டை அகலத்தில் பாதங்களை வைத்து நேராக நிற்கவும்.
* ஒவ்வொரு ஆசனத்திலும் மெதுவாகவும் மென்மையாகவும் நகரவும்.
* ஆழ்ந்த, சீரான சுவாசத்துடன் அசைவுகளை ஒருங்கிணைக்கவும்.
* சமநிலை மற்றும் ஓய்வில் கவனம் செலுத்துங்கள்.
* அமைதியான சூழலில் தினமும் 10–15 நிமிடங்கள் பயிற்சி செய்யுங்கள்.
சிக்கலான உடற்பயிற்சி முறைகள் பெரும்பாலும் பெரும் சுமையாகத் தோன்றும் இன்றைய காலகட்டத்தில், மிக எளிய பழக்கங்களே மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த தொன்மையான பயிற்சி நிரூபிக்கிறது.