
கோவிட் பாதிப்பிற்கு பிறகு உயர் இரத்த அழுத்தம் என்பது பலருக்கும் பொதுவான ஒன்றாக மாறி வருகிறது. உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தேசிய அளவில் அதிகரித்து வருகிறது. உயர் இரத்த அழுத்தம் பொதுவாக தலைவலி, தலைசுற்றல், மயக்கம், சிறுநீரக பாதிப்பு, இதய பாதிப்பு, பக்கவாதம் போன்றவைகளுக்கு காரணமாக உள்ளது. உயர் இரத்த அழுத்தத்தை கவனிக்காவிட்டால் அது உயிருக்கே ஆபத்தாக முடியும். இதற்கு சரியாக சிகிச்சை எடுத்துக் கொள்வதோடு உணவுக் கட்டுப்பாடும் கடைப்பிடித்தால் விரைவில் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.
மரபியல் ரீதியாக சிலருக்கு உயர் இரத்த அழுத்த பாதிப்பு ஏற்படுகிறது. மோசமான உணவுப் பழக்கம், மன அழுத்தம் ஆகியவை இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் மற்ற முக்கிய காரணிகளாக உள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில், மருத்துவ நிபுணர்கள், உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த பெரும்பாலும் டேஷ் டயட்டை பின்பற்ற தற்போது பரிந்துரைக்கின்றனர். உயர் இரத்த அழுத்த நோய் ஏற்பட்டால், உணவில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். டேஷ் டயட்டை பின்பற்றி உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம்.
டேஷ் டயட் உணவுமுறை:
டேஷ் டயட் என்பது இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், ஒட்டுமொத்த உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவும் ஒரு உணவு முறையாகும். டேஷ் டயட் முறையைப் பின்பற்றுவதன் மூலம், இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்து இதயம் தொடர்பான பிரச்சனைகளின் ஆபத்து குறைகிறது. இந்த உணவுமுறையில் உப்பின் அளவை படிப்படியாகக் குறைத்து, இதயத்திற்கு நன்மை விளைவிக்கும் உணவுகளை உண்ண அறிவுறுத்தப்படுகிறது.
குறிப்பாக நார்ச்சத்து நிறைந்த பச்சை காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள் டயட்டில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த உணவுமுறையை கடைப்பிடிப்பதால், இரத்த அழுத்தம் கட்டுப்படும் ,மேலும் சர்க்கரை நோய் பாதிப்பும் வெகுவாக குறையும். இதனால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
டேஷ் உணவுமுறையில் சோடியத்தின் அளவு (உப்பு) மிகக் குறைந்த அளவே உணவுகளில் சேர்க்கப்படுகிறது. இரத்த அழுத்தம் அதிகரிக்கும் முக்கிய காரணியாக உள்ள கொழுப்பு மிகுந்த உணவுப் பொருட்கள் முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. மற்றபடி கொழுப்பு அளவு குறைந்த இறைச்சி வகைகள் உண்ணலாம்.
டேஷ் டயட் உணவு பட்டியல்:
• தினமும் 3 முறை உணவு உண்ணும் போது அதில் 40% குறையாமல் காய்கறிகள் இருக்க வேண்டும். மற்ற நேரங்களில் இனிப்பு குறைந்த கொய்யா, தர்பூசணி போன்ற பழ துண்டுகள் ஒரு கப் அளவில் சாப்பிட வேண்டும். உணவில் பச்சைக் காய்கறிகள் சாலட்டாக சேர்த்துக் கொள்ள வேண்டும். வெள்ளரிக்காய், கேரட், புதினா, கொத்தமல்லி இலைகள் சேர்த்துக் கொள்ளலாம்.
• திட உணவில் பழுப்பு அரிசி அல்லது சிவப்பு அரிசி, ஓட்ஸ், சிறு தானியங்கள், சிறு தானியங்கள் பாதியளவு சேர்த்து அரைத்த கோதுமை மாவு போன்றவற்றில் செய்த உணவுகளை சாப்பிட வேண்டும்.
• பால் பொருட்களில், பால், தயிர், மோர், பன்னீர் போன்றவை சாப்பிடலாம். .வெண்ணெய் மற்றும் நெய் தவிர்க்க வேண்டும்.
• பருப்பு வகைகளில் கொண்டைக் கடலை, பட்டாணி, பயிறு, கொள்ளு ஆகியவற்றை வேக வைத்து சிற்றுண்டியாகவோ உணவில் கலந்தோ சாப்பிடலாம். பாதாம், சியா விதைகளை தண்ணீரில் ஊற வைத்தோ அல்லது அப்படியே சாப்பிடலாம்.
• அசைவ உணவுகளில் கோழிக்கறி, கடல் மீன்கள் , மஞ்சள் கரு நீக்கப்பட்ட முட்டை போன்றவை பொரிக்காமல் வேக வைத்து சாப்பிடலாம். அதிக கொழுப்பு மிகுந்த ஆட்டிறைச்சி போன்ற மற்ற இறைச்சிகள் தவிர்க்கப்பட வேண்டும்.