
ஏக பாத அதோ முக ஸ்வானாசனம் என்பது யோகாவின் மிக அடிப்படையான ஆசனங்களில் ஒன்றான அதோ முக ஸ்வானாசனத்தின் மேம்பட்ட மாறுபாடாகும். இந்த ஆசனம் அதோ முக ஸ்வானாசனத்தின் அடுத்த நிலை ஆசனமாகும். இந்த ஆசனம் உடலில் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது. இதன் சமஸ்கிருத வார்த்தையான ஏக, என்பது ‘ஒன்று’; பாத, என்பது ‘கால்’; அதோ என்பது ‘கீழ்நோக்கி’; முக, என்பது ‘முகம்’; ஸ்வானா, அதாவது ‘நாய்’; மற்றும் ஆசனம், என்பது ‘போஸ்’ என்பதிலிருந்து வந்தது. பாரம்பரியமாக, ஏக பாத அதோ முக ஸ்வானாசனம் நம் உடலில் உள்ள மூலாதாரம் (வேர்), மணிபூரா (ஞானம்) மற்றும் ஆக்ஞா (மூன்றாவது கண்) சக்கரங்களை இயக்குவதாக நம்பப்படுகிறது. இந்த ஆசனத்தை மிகுந்த கவனத்துடன் செய்வது மிகவும் முக்கியம். ஏனெனில் இந்த ஆசனம் பார்க்க எளிமையாக தெரிந்தாலும் சற்று கடினமானது.
செய்முறை :
யோகா விரிப்பில் முட்டி போட்டு முழங்காலில் அமர்ந்து கொண்டு நிதானமாக மூச்சை மூன்று முறை நன்றாக இழுத்து வெளியில் விடவும். பின்னர் நாய் நிற்பதை போன்று, கால் முட்டியை தரையில் ஊன்றி, அதேபோல் இரண்டு உள்ளங்கைகளையும் தரையில் அழுத்தமாக ஊன்றி உடலை மேலே(படம் 1-ல் உள்ளது போல்) உயர்ந்த வேண்டும்.
இப்போது இந்த போஸை பார்க்க நாய் நின்பது போல் தோன்றும். இந்நிலையில் இருந்து கால் முட்டியை நேராக நீட்டி உங்கள் இடுப்பை மேலே தூக்கி இரு கால் பாதங்களையும் தரையில் ஊன்ற வேண்டும். இப்போது பார்க்கும் போது உங்கள் முழு உடலும் V வடிவத்தில்(படம் 2-ல் உள்ளது போல்) இருக்கும். இந்த நிலையில் கைகள் மற்றும் கால் முட்டியை மடக்கக்கூடாது. கைகளுக்கும் கால்களுக்கும் இடையிலான தூரம் ஒரே மாதிரியாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தலையில் இரண்டு கைகளுக்கு இடையே தொங்கவிடவும்.
பின்னர் இடது காலை தரையில் ஊன்றியபடி இருக்க வலது காலை மட்டும் (படம் 3-ல் உள்ளது போல்)மேல் நோக்கி உயர்த்தி நீட்டவும். இந்த நிலையில் 30 வினாடிகள் முதல் ஒரு நிமிடம் வரை இருந்த பின்னர் உயர்த்திய காலை மெதுவாக தரையில் கீழே இறக்கி, பின்னர் இடது காலை மேலே தூக்கவும்.
இவ்வாறு இருகால்களுக்கும் ஒருமுறை செய்த பின்னர் நிதானமாக சுவாசத்தில் ஒரு நிமிடம் இருந்த பின்னர் மெதுவாக மூச்சை வெளியேற்றி, பழைய நிலைக்கு வரவும். இவ்வாறு இந்த ஆசனத்தை மூன்று முறை செய்யவும்.
நன்மைகள் :
* மனதை அமைதிப்படுத்துகிறது
* சமநிலை மற்றும் தன்னம்பிக்கையை மேம்படுத்துகிறது
* கால்கள், கைகள், இடுப்பு, முழங்கைகள், முழங்கால்கள், மணிக்கட்டு மற்றும் தோள்களை வலுப்படுத்துகிறது. முதுகு மற்றும் இடுப்பை வலுப்படுத்தி கீழ் உடலை நீட்டுகிறது, தொடை எலும்புகள், கன்றுகள், கணுக்கால், இடுப்பைத் திறக்கிறது மற்றும் இடுப்பு நெகிழ்வுகளை நீட்டுகிறது. இந்த ஆசனத்தை தொடர்ந்து பயிற்சி செய்வது உங்கள் கைகள் வலுமையடைச்செய்யும். வயிற்று தசைகளை வலுவாக்குகிறது.
* மூளைக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலம், இந்த ஆசனம் உங்கள் தூக்கமின்மை, மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை போக்க உதவுகிறது.
* இது பைசெப்ஸ், ட்ரைசெப்ஸ், தோள்கள் மற்றும் மேல் முதுகில் வலிமையை உருவாக்குவதற்கான ஒரு அற்புதமான ஆசனமாகும்.
* உங்கள் இரத்த ஓட்டத்தைத் தூண்டுகிறது. சுவாச செயல்பாட்டை மேம்படுத்துகிறது மற்றும் இதய ஆரோக்கியத்தைத் தூண்டுகிறது.
இந்த ஆசனத்தை செய்யக்கூடாதவர்கள் :
இந்த ஆசனத்தைப் பயிற்சி செய்யும் போது சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். இவை கீழே விளக்கப்பட்டுள்ளன:
* உயர் இரத்த அழுத்தம், ஒற்றைத் தலைவலி, கால்-கை வலிப்பு, தலைச்சுற்றல் மற்றும் இதய நோய் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்க வேண்டும்.
அல்லது இந்த ஆசனத்தைப் பயிற்சி செய்வதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
* உங்கள் முதுகு, இடுப்பு, கைகள், தோள்கள் அல்லது கால்களில் சமீபத்தில் காயங்கள் ஏற்பட்டிருந்தால் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும்.
* உங்களுக்கு மணிக்கட்டு காயம் அல்லது பிரச்சினைகள் அல்லது அறுவைச்சிகிச்சைஏதேனும் செய்து இருந்தால் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும்.
* முழங்கால், தொடை எலும்புகள், கணுக்கால் அல்லது இடுப்பு காயங்கள் அல்லது உடலின் எந்தப் பகுதியிலும் உள்ள எந்த தசைநார் தொடர்பான காயங்களும் இருந்தால் இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம்.
* இது ஒரு சமநிலைப்படுத்தும் ஆசனம் என்பதால், இதற்கு வலிமை தேவைப்படுகிறது. எனவே, பலவீனமான தசைகள் உள்ளவர்கள், மூத்த குடிமக்கள் அல்லது பொதுவான உடல் பலவீனம் உள்ளவர்கள் இந்த ஆசனத்தைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)