ரத்த அழுத்தம் என்பது இதயம் சுருங்கி, விரியும் போது ஏற்படும் அழுத்தத்தை குறிக்கும். இதயச் சதை சுருங்கி மகாதமனி, இடது வென்ட்ரிக்கிளிலிருந்து ரத்தத்தை பம்ப் செய்யும் போது ஏற்படும் அழுத்தம் சிஸ்டாலிக் ரத்த அழுத்தம் ஆகும்.
ரத்த அழுத்தத்தை பரிசோதிக்கும் போது மேலே குறிப்பிடுவது சிஸ்டாலிக் அழுத்தமாகவும். ரத்தத்தை உடலெங்கும் அனுப்ப சுருங்கிய இதய தசைகள் மீண்டும் விரிவடையும் போது ஏற்படும் ரத்த அழுத்தம் டயஸ்டாலிக் ரத்த அழுத்தம் ஆகும்.
பொதுவாக ரத்த அழுத்த மானியில், ரத்த அழுத்தம் (பிரஷர்), பரிசோதிக்கும் போது மேலே கீழே முறையே 120/80மி மீ எச்ஜி என்ற அளவில் ரத்த அழுத்தம் இருக்க வேண்டும். 140/90மி மீ எச்ஜி அல்லது அதற்கு மேல் இருந்தால் உயர் ரத்த அழுத்தமாக (Hyper Tension) கருதப்படும்.
வீட்டிலோ, மருத்துவமனை, லேப்-ல் பரிசோதிக்கும் போது சரியான முறையில் எடுத்தால் தான் அளவுகள் சரியாக இருக்கும். இந்த அளவுகளை கொண்டு தான் மருத்துவர் நோயாளிக்கு மாத்திரை, மருந்துகள் பரிந்துரைப்பார். இதில் தவறு ஏற்பட்டது எனில் மருந்துகள் ஹை டோஸாகவோ, குறைவான அளவாகவோ போய்விடும். எனவே ரத்த அழுத்தத்தை சரியாக அளவிட வேண்டும்.
இதற்கென உள்ள சில வழிமுறைகளை இந்த பதிவில் பார்ப்போம்...
இரத்த அழுத்தம் பார்க்கும் முன் ஒரு மணி நேரம் அல்லது குறைந்தது அரை மணி நேரத்திற்கு புகை பிடித்திருக்கக் கூடாது.
காஃபின் கலந்த பானங்களை அருந்தி இருக்கக் கூடாது.
உடற்பயிற்சி, யோகா, ஜாகிங் போன்றவற்றை செய்திருக்கக் கூடாது.
இரத்த அழுத்தத்தை பார்த்துக் கொண்டு இருக்கும் போது பேசுவதோ, செல்போன் பேசுவதோ கூடாது.
நன்றாக சாப்பிட்டு விட்டு செல்லலாம்.
யூரின் சென்று விட்டு பின் இரத்த அழுத்தம் அளவிட சரியாக இருக்கும்.
இல்லையெனில் அளவுகள் மாறுபட வாய்ப்புள்ளது.
உங்கள் கைக்கு பொருந்தக்கூடிய கஃபை அணிவது அவசியம். டைட்டாகவோ, லூஸாகவோ இருத்தல் கூடாது. மிகவும் சிறிய கஃப் எனில் கைக்கு அழுத்தம் கொடுத்து இரத்த அழுத்த அளவை கூட்டி காட்டும்.
வலது கையில் எடுத்தல் நல்லது. கைப்பட்டையை உங்கள் வெறும் கையில் அணிந்து கொண்டு முதுகை கூன் போடாமல் நன்கு நிமிர்ந்து உட்கார்ந்து ரிலாக்ஸ்டாக இருக்க வேண்டும். உங்கள் கைப்பட்டை நெஞ்சுக்கு நேராக இருக்கும்.
பாதங்களை நன்றாக தரையில் பதித்து உட்கார வேண்டும். கையை இதய மட்டத்திலிருந்து நேராக வைத்து அமர வேண்டும். கைப்பட்டையின் அடிப்பகுதி முழங்கையில் வளைவுக்கு நேர் மேலே இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அளவீடு செய்யும் முன் ரிலாக்ஸாக ஐந்து நிமிடம் உட்கார்ந்து விட்டு பின் எடுக்கலாம்.
சரியான அளவு தெரிந்து கொள்ள சீரான இடைவெளியில் இரண்டு முறை எடுக்க வேண்டும். வீட்டில் எடுக்கும் போது காலை, மாலை என இருவேளை பார்த்துக் கொண்டு முடிவுகளை மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெற வேண்டும். மருத்துவர் பரிந்துரையின்படி தொடர்ந்து மருந்துகளை எடுப்பது நல்லது. தாங்களாகவே தொடர்ந்து வீட்டில் பரிசோதனை செய்து கொண்டு டயப்படீஸ் க்கோ, பிளட் பிரஸர்க்கோ மருந்துகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். ஆறு மாத இடைவெளியில் முழு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
உயர் ரத்த அழுத்தம் இருந்து சரியாக கவனிக்கவில்லை யெனில் ரத்தக் குழாய்களின் எலாஸ்டிக் தன்மை குறைந்து ரத்தக் குழாய் சுவர் கடினமாகி விடும். ரத்த குழாய்கள் சுருங்க ஆரம்பிக்கும்.
பக்கவாதம் (stroke) வர முக்கிய காரணமே உயர் ரத்த அழுத்தம் தான். உயர் ரத்த அழுத்தத்தால் சிறுநீரக செயலிழப்பும் உண்டாகி விடும்.
உணவில் உப்பு, எண்ணெய், சர்க்கரை, கொழுப்பு போன்றவற்றை குறைக்க வேண்டும். புகை, மதுப் பழக்கத்தை விட வேண்டும். மன அழுத்தம் இன்றி நல்ல உணவு, நல்ல தூக்கம், போன்றவையே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவும்.
வருடத்திற்கு இருமுறை முழு உடற்பரிசோதனை அவசியம். இரத்த அழுத்தமோ, சர்க்கரையோ எதையும் அலட்சியப் படுத்தாமல் உடலை கவனித்துக் கொள்ள வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.