
உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் ஏற்படுத்திய தாக்கங்களுள் முக்கியமாகிறது நீரிழிவு பாதிப்பு. கணையத்தில் இருந்து சுரக்கும் ஹார்மோனான இன்சுலின், இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இதில் குறைபாடு ஏற்பட்டால், இரத்தத்தின் சர்க்கரை அளவு அதிகரித்து, உடல் பல பாதிப்புகளை சந்திக்கும். இதையே நீரிழிவு என்கிறோம்.
2022-ம் ஆண்டில் 830 மில்லியனாக உயர்ந்துள்ள நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில், பெரும்பாலோர் நீரிழிவு நோய்க்கான மருந்துகளை எடுத்துக்கொள்ளவில்லை என்றும் குறிப்பிடுகிறது உலக சுகாதார அமைப்பின் அறிக்கை.
ஆனால் ஆரம்ப நிலை சர்க்கரையை சரி செய்யவும் இன்சுலின் சுரப்பை கட்டுக்குள் வைக்கவும் நம் கண்ணெதிரே உள்ள சாதாரண இலை ஒன்றே போதும் என்பதை அறிவீர்களா?
காஸ்டஸ்பிக்டஸ் எனப்படும் கோஸ்டஸ் ஐஜியஸ் , ஹைப்பர் கிளைசீமியா என்றும் பல பெயர்களில் அழைக்கப்படும் இன்சுலின் செடி நம் கண் முன்னே இருக்கும் நீரிழிவை விரட்டும் அருமருந்து ஆகும். தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட வெப்பமண்டல தாவரமாக இஞ்சி குடும்பத்தை சேர்ந்த இது நர்சரிகளில் தாராளமாக கிடைக்கிறது.
அடிப்பகுதியில் இஞ்சி போன்ற வடிவில் கிழங்குடன் இருக்கும். இதை அப்படியே கிழங்கோடு மண்ணில் புதைத்து வைத்தால் சில நாட்களில் வாழை போல பக்க கன்றுகள் மூலம் புதர்போல வளர்ந்து விடும் தன்மை கொண்டது.
இந்த செடியின் இலைகளில் இருந்து பெறப்படும் சாறு, ரத்தத்தில் கலந்து சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதோடு இனிப்பு சாப்பிட வேண்டும் என்று ஆவலையும் படிப்படியாக குறைக்கிறது என்கின்றனர்.
இந்த இலையைத் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் ஐரோப்பிய, அமெரிக்க விஞ்ஞானிகள், ஆரம்ப நிலை சர்க்கரையாளர்களுக்கு இன்சுலின் செடி அதிக பலன் தருகிறது என ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் நம் பாரம்பரிய ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கடுமையான நோய்களையும் தீர்க்கும் சக்தி கொண்ட பல மூலிகைகளில் ஒன்றாக உள்ளது இன்சுலின் செடி.
கிராமப்புறங்களில் சாதாரணமாக வளரும் இதை நாம் நம் வீட்டுத் தோட்டங்களிலும் தொட்டிகளிலும் கூட வளர்க்கலாம். இது மலைக் காடுகளிலும் நீர் நிலைப் பகுதிகளிலும் 10 அடி உயரத்திற்கு மேல் வளரக் கூடியது.
சர்க்கரையை கிளைக்கோஜனாக மாற்றும் சில நொதிகள் இதில் உள்ளதாலேயே இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கிறது என்கிறது ஆராய்ச்சி. இதன் இலைகளை தினமும் புதிதாகக் பறித்து அப்போதே உட்கொள்வது நலம் தரும்.
சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி நோய் அபாயத்தை குறைக்கும் இந்த இலைகளில் புரதங்கள், ஆக்ஸிஜனேற்றிகள், அஸ்கார்பிக் அமிலம், இரும்புச்சத்து, டெர்பெனாய்டுகள், ஃபிளாவனாய்டுகள், பி-கரோட்டின் மற்றும் கார்சோலிக் அமிலம் போன்ற ஊட்டச்சத்துக்களும் உள்ளதால், இது செரிமானத்தை சீராக்கி நுரையீரலுக்கும் நன்மை பயப்பதாக குறிப்புகள் கூறுகின்றன.
என்றாலும் இன்சுலின் இலையைப் பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவர் ஆலோசனை கேட்பது நல்லது. குறிப்பாக நீரிழிவு நோய்க்காக மருந்துகளை எடுத்துக் கொள்கிறீர்கள் என்றாலும் ஒவ்வாமை போன்ற பாதிப்பு இருந்தாலும் இந்த இலைகளை பயன்படுத்தும் போது அரிப்பு, வீக்கம் , சுவாசிப்பதில் சிரமம் போன்ற பக்கவிளைவுகள் தரும் என்பதை கவனத்தில் கொள்வது அவசியம்.