
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28 ஆம் நாளன்று ‘உலகக் கல்லீரல் அழற்சி நாள்’ (World Hepatitis Day) கடைப்பிடிக்கப்படுகிறது.
மனிதர்களின் உடலில் உள்ள இதயம், மூளை போன்ற மற்றொரு முக்கிய உறுப்பு கல்லீரல். மனித உடல் செழுமையான முறையில் இயங்குவதற்கு கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கின்றது. நாம் உட்கொள்ளும் உணவுகளை ஆற்றலாக மாற்றி, தேவையான சத்துக்களைப் பிரித்துக் கொடுப்பது, உடலுக்குத் தேவையான சில புரதச்சத்துக்களை உற்பத்தி செய்வது, உணவில் உள்ள நச்சை நச்சற்றதாக மாற்றுவது போன்றவை கல்லீரலில் முக்கிய பணியாக இருந்து வருகிறது. செரிமானம், புரத உற்பத்தி, சேமித்தல், நச்சற்றத்தாக மாற்றுதல் என்பது போன்ற சுமார் 500 முக்கியப் பணிகளைக் கல்லீரல் செய்கிறது.
நமது கல்லீரலைப் பாதிக்கக்கூடிய முக்கியக் காரணியாக வைரஸ் தொற்று இருந்து வந்தது. ஆனால், தற்போது அதில் மது அருந்துதல் என்பது புதிதாகச் சேர்ந்து முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.
சுகாதாரமற்ற உணவு, போதிய அளவு தண்ணீர் பருகாமல் இருப்பது, போதிய உடற்பயிற்சி இல்லாமை போன்றவையும் கல்லீரலைப் பாதிக்கிறது.
மனித உடலில் உள்ள கல்லீரலானது அழற்சி அல்லது வீக்கம் கொள்வதை கல்லீரல் அழற்சி (Hepatitis) என்கின்றனர். அந்நிலைமையில் அந்த உறுப்பின் திசுக்கள் சார்ந்த உயிரணுக்கள் வீக்கத்துடன் காணப்படுவதே அதன் அறிகுறியாகும். கல்லீரல் அழற்சிக்கான ஆங்கிலப் பெயரான ஹெபடைடிஸ் எனும் பெயரானது பண்டைய கிரேக்க மொழி சொல்லான ஹெபர் என்பதிலிருந்து வந்ததாகும். இதன் மூலச்சொல் ஹெபட் ஆகும். அதாவது கல்லீரல் என்ற பொருள் தருகிறது, மற்றும் பின் ஒட்டுச்சொல்லான இடிஸ் என்பது 'அழற்சி' அல்லது 'வீக்கம்' என்ற பொருள் கொண்டதாகும். இரண்டு சொற்களும் இணைந்து ஹெபடைடிஸ் என்று ஆகியிருக்கிறது. இதனைத் தமிழில் கல்லீரல் அழற்சி என்று சொல்லலாம்.
கல்லீரல் அழற்சி எனப்படும் ஹெபடைடிஸ் தொடர்புடைய பாதிப்புகள் காரணமாக, ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழப்பதாகவும், ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 30 லட்சம் பேர் கல்லீரல் அழற்சி பாதிப்புக்கு உள்ளாவதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.
இந்நிலை தொடர்ந்தால், 2040ஆம் ஆண்டளவில் எச்.ஐ.வி, காசநோய் மற்றும் மலேரியா இறப்புகளை விட ஹெபடைடிஸ் காரணமாக ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்திருக்கிறது.
கல்லீரல் அழற்சியினை ஹெபடைடிஸ் வைரஸ் என்று குறிப்பிடுவதுடன், அதனை ஹெபடைடிஸ் ஏ, ஹெபடைடிஸ் பி, ஹெபடைடிஸ் சி, ஹெபடைடிஸ் டி, ஹெபடைடிஸ் இ என்று 5 வகைகளாகப் பிரிக்கின்றனர். இவற்றுள் பி, சி ஆகிய வைரஸ்கள் தீவிரத் தன்மை வாய்ந்தது என்கின்றனர்.
சுகாதாரமற்ற உணவு, தண்ணீர் ஆகியவற்றை உட்கொள்வதால் ஹெபடைடிஸ் ஏ பரவுகிறது. இதனால் ஏற்படும் பாதிப்பு குறுகிய காலமே இருக்கும். பாதுகாப்பற்ற உடலுறவு, ஒருவருக்கு பயன்படுத்திய ஊசியை மற்றொருவருக்கு பயன்படுத்துவது, ரத்தம் மாற்றுவது, பிரசவத்தின்போது தாயிடம் இருந்து குழந்தைக்கு போன்றவை மூலம் ஹெபடைடிஸ் பி ஏற்படுகிறது.
இந்த வைரஸின் பாதிப்பு ஆரம்ப நாட்களில் நமக்குத் தெரியாது. நீண்ட காலம் கழித்துப் பாதிப்பை ஏற்படுத்தும். ஹெபடைடிஸ் பி போன்றே உடலுறவு, ஒருவருக்கு பயன்படுத்திய ஊசியை மற்றொருவருக்கு பயன்படுத்துவது போன்றவற்றால் ஹெபடைடிஸ் சி ஏற்படுகிறது. இந்த வைரஸ்கள் உடலிலேயே தங்கிப் பல ஆண்டுகள் கழித்துப் பாதிப்பை ஏற்படுத்தும். ஹெபடைடிஸ் பி மற்றும் சி இரண்டுமே நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை.
ஹெபடைடிஸ் பி நோய்த்தொற்றுடன் தொடர்புடையது ஹெபடைடிஸ் டி. அதாவது ஹெபடைடிஸ் பி தொற்று பாதிப்பு இல்லாமல் ஒருவருக்கு ஹெபடைடிஸ் டி ஏற்படாது. இது மிகவும் அரிதானது. ஹெபடைடிஸ் ஏ-வை போன்று ஹெபடைடிஸ் இ தண்ணீருடன் தொடர்புடையது. மோசமான சுகாதாரம் உள்ள பகுதிகளில் காணப்படுகிறது. மலம் கலந்த தண்ணீரை உட்கொள்வதால் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது.
கர்ப்பிணி பெண்களுக்கு இந்த ஹெபடைடிஸ் வைரஸ் தொற்று ஏற்பட்டால் பாதிப்பு அதிகமாக இருக்கும். காய்ச்சல், உடல் சோர்வு, தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாதல் (மஞ்சள் காமாலை), அடர்ந்த நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல், குமட்டல் மற்றும் வாந்தி, வயிற்று வலி, ரத்த வாந்தி போன்றவை கல்லீரல் அழற்சியின் அறிகுறிகளாக இருக்கும்.
கல்லீரல் அழற்சியில் ஹெபடைடிஸ் ஏ, இ காரணமாக ஒரு சிலரது கல்லீரல் செயலிழப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. நாளடைவில் ஹெபடைடிஸ் பி அல்லது சி வைரஸ் பாதிப்பால் கல்லீரல் சுருக்கம் ஏற்படும். இந்த பாதிப்பைச் சரி செய்ய முடியாது. இதையே சிர்ரோசிஸ் என்கின்றனர். சிர்ரோசிஸ் நிலை ஏற்பட்டுவிட்டால், குணப்படுத்துவது கடினம். இந்நிலையில், கல்லீரல் மாற்று சிகிச்சை மேற்கொண்டு புதுவாழ்வைப் பெற வேண்டும்.
கல்லீரல் வேலை செய்யவில்லை என்றால் உடலில் உள்ள தண்ணீரை வெளியேற்ற முடியாமல் கால், கைகளில் நீர் சேர்ந்துவிடும், மயக்க நிலை ஏற்படும், ரத்த வாந்தி ஏற்படலாம். தீவிரம் அடைந்து மஞ்சள் காமாலை நோயையும் ஏற்படுத்துகிறது. மற்றொரு முக்கிய விஷயம் ஹெபடைடிஸ் பி காரணமாக எப்போது வேண்டுமானாலும் கல்லீரல் புற்றுநோய் ஏற்படலாம்.
ஹெபடைடிஸ் ஏ, இ போன்றவை பெரும்பாலும் தானாகவே சரி ஆகிவிடும். ஹெபடைடிஸ் இ-க்கு என்று குறிப்பிட்ட சிகிச்சைகள் எதுவும் இல்லை. இது தானாவே சரி ஆகிவிடும். போதிய நீர்ச்சத்துகளை எடுத்துகொள்ள வேண்டும்.
மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். கர்ப்பிணி பெண்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டால் அவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். ஹெபடைடிஸ் சி பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சைகள் உள்ளன. ஹெபடைடிஸ் பி, சி ஆகியவை வந்துவிட்டால் அவற்றுக்கு சிகிச்சை அளிக்க மாத்திரை, மருந்துகள் இருக்கின்றன.
நமது சுற்றத்தைச் சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் ஹெபடைடிஸ் ஏ, இ போன்றவை ஏற்படாமல் தடுக்க முடியும். உணவு சாப்பிடுவதற்கு முன்பாக கைகளைக் கழுவது, கழிவறையைப் பயன்படுத்திய பின்னர் கைகளைச் சுத்தமாகக் கழுவுதல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும். ஊசிகளை பாதுகாப்புடன் பயன்படுத்துவது மூலம் ஹெபடைடிஸ் சி வராமல் பார்த்துக் கொள்ளலாம். பச்சை குத்திக் கொள்ளுமிடங்களில் ஒருவருக்குப் பயன்படுத்திய ஊசிகளைத் நமக்குப் பயன்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முடி திருத்தகங்களில் ஒருவருக்குப் பயன்படுத்தப்பட்ட பிளேடை, நமக்கு மீண்டும் பயன்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். திருமணமானவர்கள் பாதுகாப்பான முறையில் மட்டும் உடலுறவு கொள்வது நலம் தரும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
உலகக் கல்லீரல் அழற்சியின் பாதிப்பு உடனடியாகத் தெரியாது என்பதுடன், நீண்ட காலம் கழித்தே பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இதுகுறித்த விழிப்புணர்வு ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும். சுத்தமான நீரை அருந்துவதுடன், மேற்காணும் சில முன்னெச்சரிக்கைகளையும் பின்பற்ற வேண்டும் என்பதுடன், இந்த உலகக் கல்லீரல் அழற்சி நாளில் நமக்குத் தெரிந்த அனைத்துத் தகவல்களையும் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.