
முதுகு தண்டை சிறப்பாக இயக்க கூடிய ஆசனம் எது என்று கேட்டால், அது பச்சிமோத்தாசனம் தான். விஞ்ஞான ரீதியாகவும் இந்த ஆசனத்தின் பலன்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. பச்சிமோத்தாசனம் என்பது உட்கார்ந்த நிலையில் முன்னோக்கி வளைந்து கைகளால் கால்களைத் தொடும் பயிற்சியாகும். இந்த ஆசனம் முதுகெலும்பு மற்றும் கீழ் முதுகில் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்க உதவுகிறது.
கைகளை கீழ் இருந்து மேல் நோக்கி உயர்த்தும் போது மூச்சை உள்ளே இழுக்க வேண்டும். மூச்சை விட்டுக் கொண்டே, பாதங்களை நோக்கி கைகளை எடுத்துச் சென்று கால் கட்டை விரல்களை பிடிக்க வேண்டும். இது தான் இந்த ஆசனத்தின் நடைமுறையாகும்.
பச்சிமோத்தாசனத்தின் நன்மைகள்:
* இந்த யோகாசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் என்றும் இளமையாக தோற்றம் அளிக்கலாம்.
* இந்த ஆசனம் உடலில் உள்ள சக்தி மையங்களைத் தூண்டி உடலுக்குத் தேவையான இரத்தத்தை அதிகரிக்க உதவுகிறது.
* முகுகில் உள்ள கூனை சரிசெய்ய இது சிறந்த ஆசனமாகும்.
* செரிமான அமைப்பைத் தூண்டி மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்கிறது.
* இந்த ஆசனம் மன அழுத்தம், பதட்டம், சோர்வு போன்றவற்றை போக்க உதவுகிறது.
* சர்க்கரை நோயாளிகள் இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
* தொடை எலும்புகள், தோள்பட்டை மற்றும் முதுகில் உள்ள வலியைப் போக்குகிறது; மற்றும் தோள்பட்டை, முதுகு, கால்களுக்கு வலிமை அளிக்கிறது.
செய்முறை
* விரிப்பில் உங்கள் கால்களை உங்களுக்கு முன்னால் நீட்டி நிமிர்ந்து உட்கார்ந்து கொள்ளவும்.
* மூச்சை உள்ளிழுத்து, உங்கள் கைகளை உங்கள் தலைக்கு மேல் நீட்டவும்.
* இப்போது மூச்சை வெளியில் விட்டுக்கொண்டே முன்னோக்கி வளைந்து, உங்கள் கால் கட்டை விரல்களை பிடிக்க வேண்டும். வலது கையால் வலது கால் கட்டை விரலையும், இடது கையால் இடது கால் கட்டை விரலையும் பிடிக்க வேண்டும்.
* நெற்றியால் உங்கள் கால்களின் முட்டியை தொட முயற்சிக்க வேண்டும். ஆனால் கால் முட்டியை மடக்கக்கூடாது.
* சுமார் 30 வினாடிகள் முதல் ஒரு நிமிடம் வரை இந்த நிலையில் இருந்து பின்னர் கைகளை மேலே தூக்கிய படி மெதுவாக பின்னோக்கி எழ வேண்டும்.
* அதாவது மூச்சை உள்ளிழுத்து, உங்கள் உடற்பகுதியை உயர்த்தி (நிமிர வேண்டும்), உங்கள் கைகளை உங்கள் தலைக்கு மேல் உயர்த்தவும். பின்னர் மூச்சை வெளியில் விட்டபடி உங்கள் கைகளை தளர்த்தி கீழே இறக்கி பழைய நிலைக்கு வரவும். இவ்வாறு இந்த ஆசனத்தை 3 முறை செய்ய வேண்டும்.
ஆரம்பத்தில் நெற்றியால் முட்டியை தொடமுடியாது. கால் கட்டை விரலையும் பிடிக்க கஷ்டமாக இருக்கும். ஆனால் தொடர்ந்து இந்த ஆசனத்தை செய்து கொண்டிருந்தால் படிப்படியாக சரியாக முறையில் செய்ய முடியும்.
குறிப்பு
முதுகில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் இந்த ஆசனம் செய்வதை தவிர்ப்பது அவசியம். முதுகு வலி, கால் வலி, முதுகெலும்பில் நாள்பட்ட வலி மற்றும் பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவர் அல்லது யோகா ஆசிரியரிடம் ஆலோசனை பெற்ற பின்னர் செய்வது நல்லது.