
யோகா நீட்சி மற்றும் வலுப்படுத்தும் பயிற்சிகள், நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. அனந்தாசனம், ஸ்லீப்பிங் விஷ்ணு போஸ், விஷ்ணு போஸ் மற்றும் பக்கவாட்டில் சாய்ந்த லெக் லிஃப்ட் போஸ் என்றும் அழைக்கப்படுகிறது. அனந்தாசனம் என்பது, பக்கவாட்டில் படுத்துக்கொண்டு ஒரு காலை உயர்த்தும் யோகாசனம். விஷ்ணு பகவான் ஆதிசேசனின் மீது சாய்ந்துள்ளபடி காட்சியளிப்பதை போல் இந்த யோகாசனம் இருப்பதால் விஷ்ணு போஸ் என்றும் அழைக்கப்படுகிறது.
நன்மைகள் :
* நெகிழ்வுத்தன்மை, சமநிலை மற்றும் வலிமை, மேம்பட்ட தளர்வு மற்றும் நினைவாற்றல் ஆகியவை கிடைக்கும்.
* முதுகின் மையப்பகுதி, தோள்கள், கழுத்து, இடுப்புப் பகுதி மற்றும் முழு உடலையும் நீட்டி, இந்த தசைக் குழுக்களை திறம்பட பலப்படுத்துகிறது.
* கால்களையும், குறிப்பாக உள் தொடைகள், தொடை எலும்புகள் மற்றும் கணுக்கால்கள் என ஒட்டுமொத்த கால்களின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்த உதவும்.
* செரிமான உறுப்புகளைத் தூண்டி, செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. வயிற்றுப் பகுதியை மெதுவாக நீட்டி மசாஜ் செய்வதன் மூலம், இது மலச்சிக்கல் மற்றும் அஜீரணத்தை போக்கவும், குடல்களின் சீரான செயல்பாட்டை ஊக்குவிக்கவும் உதவும்.
* முதுகு தசைகளுக்கு மென்மையான நீட்சியை வழங்குவதன் மூலம் முதுகெலும்பு நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகிறது.
* இடுப்பு தசைகளை வலுப்படுத்துவதோடு, புரோஸ்டேட் சுரப்பியின் செயல்பாட்டையும் ஊக்குவிக்கிறது.
* இந்த ஆசனத்தில் உடலை கிடைமட்டமாக வைத்திருப்பது சுழற்சியை மேம்படுத்துகிறது, மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
* ஆனந்தாசனம் இடுப்பு, கைகள் மற்றும் தொடைகளில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
செய்முறை :
தரையில் யோகா மேட்டை விரித்து அதில் மல்லாந்து கை, கால்களை நீட்டி படுத்து கொள்ளவும். பின்னர் இடது பக்கமாக சாய்ந்து படுத்து உங்கள் தலையை இடது கையால் தாங்கி, பிடித்து கொள்ள வேண்டும். கால்கள் நீட்டியபடி இருக்க வேண்டும். இப்போது வலது காலை மேல்நோக்கி 90 டிகிரிக்கு தூக்க வேண்டும். தூக்கிய கால் கட்டை விரலை வலது கையால் பிடிக்க வேண்டும். கால் முட்டியை மடக்கக்கூடாது.
உங்கள் வலது காலை தரையில் செங்குத்தாக வைத்து, இரண்டு கால்களையும் உடற்பகுதியையும் ஒரு நேர் கோட்டில் வைத்திருப்பதே குறிக்கோள். இந்த ஆசனம் பார்க்க சுலபமாக தோன்றலாம். ஆனால் மிகவும் சவாலானது மற்றும் கவனம் தேவை. இந்த நிலையில் 30 விநாடிகள் சீரான சுவாசத்தில் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவேண்டும். பின்னர் இதே போல் மறுபக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு இந்த ஆசனத்தை 2 முதல் 3 முறை செய்ய வேண்டும். காயங்கள் ஏற்படாமல் தவிர்க்க பயிற்சி பெற்ற ஆசிரியரின் முன்னிலையில் இந்த ஆசனத்தை செய்வது நல்லது.
எச்சரிக்கை :
* கழுத்து, தோள்பட்டை அல்லது முழங்கால்களில் ஏதேனும் காயம் அல்லது வலி இருந்தால், இந்த ஆசனம் செய்வதைத் தவிர்க்கவும். மேலும், நீங்கள் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்திருந்தாலும் தவிர்க்க வேண்டும்..
* உங்கள் இடுப்பு அல்லது கீழ் முதுகில் வலி அல்லது பிரச்சனைகள் இருந்தாலும் இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம்.
* கர்ப்பிணிப் பெண்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்க வேண்டும் அல்லது மகப்பேறுக்கு முந்தைய யோகா ஆசிரியரின் வழிகாட்டுதலின் கீழ் தேவையான மாற்றங்களுடன் மட்டுமே பாதுகாப்பாக பயிற்சி செய்ய வேண்டும்.
* உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த ஆசனம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
* அனந்தாசனம் நன்மை பயக்கும் என்றாலும், இது அனைவருக்கும், குறிப்பாக ஆரம்பநிலை அல்லது குறைந்த நெகிழ்வுத்தன்மை கொண்டவர்களுக்கும் ஏற்றதாக இருக்காது.