
யோகா ஆசனங்கள் முழு உடல், மனம் மற்றும் ஆன்மாவிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பெரும்பாலான ஆசனங்கள் சிறந்த உடல் ஆரோக்கியத்தையும் அமைதியான மனதையும் பெற உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
விருட்சாசனம் முன்னுரை:
பண்டைய முனிவர்கள் பெரும்பாலும் விருட்சாசனத்தை தங்கள் மனதை ஒருமுகப்படுத்தவும் தேவையற்ற எண்ணங்களை அகற்றவும் பயன்படுத்தினர். விருட்சாசனம் பலவிதமான உடல் மற்றும் மன ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் ஒரு சக்திவாய்ந்த யோகா ஆசனமாகும். விருட்சாசனம் ட்ரீ போஸ் (Tree pose) என்றும் அழைக்கப்படுகிறது. இந்த போஸ் மரம் நிற்பதை போல் காட்சியளிப்பதால் இந்த பெயர் பெற்றது. வெறும் வயிற்றில் இந்த ஆசனத்தை செய்வது சிறந்தது. உங்கள் உணவுக்கும் பயிற்சிக்கும் இடையில் குறைந்தது நான்கு முதல் ஆறு மணிநேரம் வரை இடைவெளி இருக்க வேண்டும்.
விருட்சாசனத்தை காலையில் செய்வது சிறந்தது. ஏனெனில் இந்த ஆசனம் கவனம் மற்றும் நினைவாற்றலை உள்ளடக்கியது.
காலையில் இந்த ஆசனத்தை செய்யும் போது, கவலைகள் மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியுடன் உங்கள் பணிகளை செய்ய உதவும்.
செய்முறை :
விரிப்பில் கால்களை ஒன்றாக இணைத்து வைத்து நேராக நிமிர்ந்து நிற்கவும். கைகளை தொடையின் பக்கவாட்டில் வைத்து, முன்னோக்கிப் பார்க்கவும். மூன்று முறை மூச்சை மெதுவாக உள்ளிழுத்து வெளியில் விடவும். உங்கள் இடது காலை தரையில் அழுத்தமாக ஊன்றியபடி வலது காலை முழங்கால் வரை மடித்து, வலது உள்ளங்காலை இடது தொடை மூட்டுக்கு மேலே தொடையில் (படத்தில் உள்ளபடி) வைக்கவும்.
அடுத்து உங்கள் இரண்டு கைகளையும் தலைக்கு மேலே தூக்கி நமஸ்கார முத்ராவில் வைக்க வேண்டும். இந்த நிலையில் கண்களை மூடி ஒரு நிமிடம் நின்ற பின்னர் காலை மாற்றி இடது காலில் செய்ய வேண்டும். இரண்டு கால்களில் செய்த பின்னர் உங்கள் கைகளை கீழே இறக்கி கால்களை தரையில் ஊன்றவும். இவ்வாறு இந்த ஆசனத்தை மூன்று முறை செய்ய வேண்டும். இந்த ஆசனம் செய்யும் போது முதுகுத்தண்டை நேராக வைத்து கொள்ளவேண்டும், கூன் போடக்கூடாது.
நீங்கள் இறுதியில் இந்த ஆசனத்தில் அசையாமல் நிற்கும்போது, மனதில் தோன்றும் தேவையற்ற எண்ணங்கள் அனைத்தையும் படிப்படியாக அகற்றவும் கற்றுக்கொள்கிறீர்கள். ஆரம்ப பயிற்சியாளர்கள், வயதானவர்கள் சுவர் அல்லது நாற்காலியின் உதவியுடன் இந்த ஆசனத்தை செய்து வருவது நல்லது.
பயன்கள் :
விருட்சாசனம் உங்கள் ஆரோக்கியத்திற்கு பல்வேறு வழிகளில் பயனளிக்கிறது. தொடர்ந்து பயிற்சி செய்தால் அது உங்கள் உடலுக்கு என்ன நன்மை பயக்கும் என்பதைப் பாருங்கள்.
* இது உடல்-மன ஒருங்கிணைப்பை மேம்படுத்துகிறது.
* மனச்சோர்வு, மன அழுத்தம் குறையும்.
* கைகளை மேல்நோக்கி நீட்டுவது மார்பைத் திறந்து ஆழமாக சுவாசிக்க உதவுகிறது. இதனால் உங்கள் நுரையீரல் ஆரோக்கியமாக வேலை செய்ய உதவுகிறது.
* இது முதுகெலும்புக்கு வலிமையளித்து முதுகெலும்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
* இது கால் தசைகளை வலுப்படுத்துகிறது, அதே நேரத்தில் கால்களின் தசைநார்கள் மற்றும் தசைநாண்களை வலுப்படுத்துகிறது. முழங்கால்கள் வலுவடைகின்றன, மேலும் இடுப்பு மூட்டுகள் தளர்வாகின்றன.
* இடுப்பு மற்றும் உள் தொடைகள், மார்பு மற்றும் தோள்களை நீட்டுகிறது.
* இது சியாட்டிகாவால் (sciatica) பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்கிறது மற்றும் தட்டையான பாதங்களைக் (flat feet)குறைக்கிறது.
முன்னெச்சரிக்கைகள் :
* இந்த ஆசனம் பாதுகாப்பானது என்றாலும், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தங்கள் கைகளை மேல்நோக்கி உயர்த்துவதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். அதற்கு பதிலாக, உங்கள் கைகளை உங்கள் மார்பில் பிரார்த்தனை நிலையில் வைத்திருங்கள்.
* நீங்கள் சோர்வாகவோ அல்லது தலைச்சுற்றலாகவோ உணர்ந்தால், இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம்.
* உங்கள் கையை உயர்த்தும்போது தோள்பட்டை வலி, மரத்துப்போதல், கூச்ச உணர்வு இருந்தால், உங்கள் கையை இடுப்பில் வைத்து பயிற்சி செய்யலாம்.
* இடுப்பு பிரச்சினை, உங்கள் முழங்கால்கள் அல்லது கணுக்கால்களில் சமீபத்திய அல்லது நாள்பட்ட காயம் இருந்தால் இந்த ஆசனத்தை தவிர்ப்பது நல்லது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை/ஆலோசகரை அணுகவும்)
* நீங்கள் இந்த ஆசனம் செய்யும் போது ஏதேனும் அசௌகரியத்தை அனுபவித்தால், யோகா ஆசிரியரின் உதவியுடன் செய்யவும்.
* தூக்கமின்மை அல்லது ஒற்றைத் தலைவலியால் அவதிப்பட்டால் இந்த ஆசனத்தைப் பயிற்சி செய்வதைத் தவிர்ப்பது நல்லது.