
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் பிரச்சனைகள் இல்லாமல் இல்லை. பல்வேறு சிரமங்களை சமாளித்தாலும் எடை அளவு கூடுதல், குறைதல்... தவிா்க்க இயலாத பிரச்சனைதான்.
நாம் மனது வைத்தால் நிச்சயமாக எதையும் சமாளிக்கலாம். நம்மால் முடியாது என எதுவும் இல்லை. உடல் எடையைக் கூட்டுவதும் குறைப்பதும் நமது கையில்தான் உள்ளது. உணவு பழக்கவழக்கங்கள், நடைப்பயிற்சி, தெளிவான சிந்தனை, கோபம் வராமல் பாா்த்துக்கொள்ளுதல், டென்ஷன் இல்லாமல் இருத்தல்... இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
பொதுவாகவே நாற்பது வயது வந்து விட்டால் போதும், நோய் எனும் விருந்தினா்கள் அழையா விருந்தாளியாய் வந்து வாழ்நாள் முழுவதும் ஏதாவது ஒரு நோயை உருவாக்கிவிடும்.
இப்படிப்பட்ட சூழலில் உடல் எடைப்பிரச்சனை வேறு பல்வேறு சங்கடங்களைத் தருவது அனைவருக்கும் தெரிந்ததே. எடை கூடினாலும் சிரமம், அதேநேரம் மிகவும் மெலிந்தாலும் சிரமம்.
ஆக உடல் எடையைக் குறைக்க எளிய வழிகள் நம் கையிலேயே உள்ளதே. அதிலும் உணவுப்பழக்க வழக்கங்களை நாம் சரிவர கடைபிடித்தாலே சிரமம் குறைய வாய்ப்புண்டு.
வீட்டிற்கு பூட்டு அவசியம் போல குறிப்பிட்ட வயது வந்ததும் வாய்க்கும் உணவுக் கட்டுப்பாடு என்ற பூட்டு அவசியம் தேவை.
அதன்படி பாா்த்தால் உணவு வகைகளில் சில கட்டுப்பாடுகளை கடைபிடித்தால் உடல் எடையை குறைக்கலாம்.
உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்கள் சாப்பிடக்கூடிய உணவு வகைகள் :
கோதுமை மாவிலான சப்பாத்தி
கோதுமை மாவு தோசை
கோதுமை ரொட்டி
கரைத்த மோா்
காய்கறி வகைகள் பச்சையாக
வேகவைத்த காய்கறிகள்
ஆப்பிள், கொய்யா, பப்பாளி, ஆரஞ்சு, சாத்துக்குடி, திராட்சை,
நாட்டு சா்க்கரை சோ்த்த பழச்சாறுகள்
புழுங்கல் அரிசி கஞ்சி,
ஓட்ஸ்
தக்காளி, கேரட், முள்ளங்கி, வெள்ளரிப்பிஞ்சு ஆகியவை கொண்ட சாலட்
கறிகாய்கள் அடங்கிய சூப் இவைகளை சாப்பிடலாம்.
எடையை குறைக்க விரும்பும் நபர்கள் தவிா்க்க வேண்டிய உணவு வகைகள் :
ஊறுகாய் வகைகள்
இனிப்பு, சாக்லேட்
ஐஸ்கிரீம்
ஆட்டுக்கறி
முந்திரி பருப்பு போன்ற நட்ஸ் வகைகள்
வெண்ணெய், நெய்
வோ்க்கடலை
எண்ணெயில் வறுத்த தின்பண்டங்கள்
மதுபான வகைகள்
சீஸ் வகைகள்
தேங்காய்
நமது ஆரோக்கியம் நமது கையில். வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி சேமிப்பது போல உணவுப்பழக்க வழக்கங்களிலும் வாய்ப்பூட்டு போடுவது சாலச்சிறந்தது.