
ஆசனங்களின் வகைப்பாடு முதுகெலும்பை ஆதாரமாகக் கொண்டது. அதன் நிலையை மட்டுமல்லாது ஆசனங்களினால் ஏற்படும் விளைவுகளையும் பொறுத்தது. வகைப்படுத்தப்பட்ட இந்த ஆசனங்களை செய்வதினால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை இப்பதிவில் காண்போம்.
சமஸ்திதி:
சமஸ்திதி வகை ஆசனங்கள் முதுகெலும்பின் சீரான நிலைப்படுதலை குறிக்கின்றன. அதாவது முதுகு நேராக இருக்கும். இவ்வகை ஆசனங்கள் பிராணாயாமத்திற்கோ அல்லது தியானத்திற்கோ தயார்படுத்திக் கொள்ள உதவும்.
சபாசனம், சுகாசனம், பிரம்மாசனம், சித்தாசனம், பத்மாசனம், வஜ்ராசனம் போன்றவை இவற்றில் சில. முதுகு நேராக இல்லாமல் இருந்தாலும், சவாசனம் சமஸ்திதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
பஸ்சிமதானா:
உடலின் முன் பகுதி கால்களை நோக்கிச் செல்லும் ஆசனங்கள் பஸ்சிமதானா வகையை சார்ந்தவை. இவ்வகை ஆசனங்கள் மூச்சு வெளிவிடும் பொழுது செய்யப்படுகின்றன . இவற்றில் வயிற்றுப் பகுதியில் கவனம் அதிகம் இருக்கும். தடாகமுத்ரா, அபானாசானம் போன்றவை இவற்றுக்கு உரியது.
பூர்வதானா:
முதுகு கால்களில் இருந்து அகலும் பொழுது, பூர்வதானா வகை ஆசனங்கள் பிறக்கின்றன. இவை மூச்சை உள்ளிழுக்கும் பொழுது செய்யப்படுகின்றன. இவற்றில் மார்பிலும், உடலின் மேல் பகுதியிலும் அதிக கவனம் செலுத்தப்படுகின்றது. முதுகெலும்பை ஒழுங்கான நிலையில் வைத்துக் கொள்ளாமல் சில நேரங்களில் அதிக வேலை செய்ய வேண்டிய அவசியம் இருப்பது உண்டு. உதாரணமாக வேலையின் தன்மைமையைப் பொறுத்து கணினியின் முன் பல மணி நேரங்கள் ஒரே மாதிரி உட்கார்ந்து இருக்க வேண்டிய நிலை அல்லது வாழ்க்கை முறையின் மாற்றங்களினால் உடலின் மேல் பகுதியில் கூன் விழுகின்றது என்றால் இதனைச் சீர்படுத்த பூர்வதானா வகை ஆசனங்கள் அளிக்கப்படுகின்றன.
குறிப்பு: ஒரு குறிப்பிட்ட நிலையில் பூர்வ தானா அல்லது பஸ்சிமதானா வகை ஆசனமாக வகைப்படுத்துவதில் இரு கருத்துகளுக்கு வாய்ப்பு இருப்பின் சுவாசமே அதை தீர்மானிக்கின்றது. மூச்சை உள்ளே இழுக்கும்போது செய்யப்பட்டால் அது பூர்வதானா. வெளியே விடும்போது செய்யப்பட்டால் அது பஸ்சிமதானா. சுவாசமே வகைப்படுத்தலின் இறுதிக் காரணி.
பார்ஷ்வ:
முதுகெலும்பு வலது புறமாகவோ இடது புறமாகவோ பக்கவாட்டில் சாய்ந்தால் அது பார்ஷ்வ வகை ஆசனமாகக் கருதப்படுகின்றது. உடலின் ஒரு பக்கத்தில் உள்ள விறைப்புத் தன்மையையோ, சக்தியின்மையையோ போக்க, இவ்வகை ஆசனங்கள் அளிக்கப்படுகின்றன. இந்த வகை ஆசனம் உத்தித பார்சுவ கோணாசனம்.
பரிவ்ரித்தி:
முதுகெலும்பு ஒருநிலையான பகுதியிலிருந்து (பெரும்பாலும் இடுப்பு) திரும்பும் பொழுது பரிவ்ரித்தியாக வகைப்படுத்தப்படுகின்றது. முறுக்கிய உடலைச் சரி செய்வதற்கு இவ்வகை ஆசனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் வயிற்றுப் பகுதியில் கவனம் செலுத்தப்படுகின்றது. உத்தித திரிகோணாசனம், ஜடார பரிவ்ரித்தி போன்றவை இதைச் சார்ந்தவை.
விபரீதா:
கால் மேலும் தலை கீழுமாக இருக்கும் ஆசனங்கள் விபரீதா வகை ஆசனங்களாக வகைப்படுத்தப்படுகின்றன. சிரசாசனம், சர்வாங்காசனம், விபரீதகரணி போன்றவை இதில் அடங்கும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. முறையான பயிற்சிக்கு தகுந்த பயிற்சியாளரை அணுகவும்)