
புஜங்காசனம், கோப்ரா போஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இது முதுகெலும்பு, தோள்பட்டை, மார்பு மற்றும் வயிற்றை நீட்டி, கை தசைகளை பலப்படுத்தும் ஒரு யோகா பயிற்சியாகும். இது உங்கள் உடலுக்கு (குறிப்பாக முதுகு) ஒரு நல்ல நீட்சியைக் கொடுக்கிறது. இந்த ஆசனம் நாகப்பாம்பு படம் எடுத்து ஆடுவதை போல் காட்சி தருவதால் கோப்ரா போஸ் என்றழைக்கப்படுகிறது.
செய்முறை:
யோகா மேட்டில் குப்புற படுத்து கொள்ளவும். இப்போது உங்கள் கால்விரல்களை தரையில் பதிந்தபடி வைத்து, உள்ளங்கால்கள் மேல்நோக்கி பார்த்தவாறு வைத்து கொள்ளவும். உங்கள் நெற்றியை தரையில் வைக்கவும். உங்கள் கால்களை நெருக்கமாக வைத்து, உங்கள் கால்கள் மற்றும் குதிகால் ஒன்றை ஒன்று லேசாகத் தொடும் வகையில் வைத்துகொள்ளவும். இரு கைகளும் உடலோடு ஒட்டியபடி, இருக்க வேண்டும். இப்போது உங்கள் கைகளை தரையில் ஊன்றி மூச்சை ஆழமாக உள்இழுத்து உங்கள் தலை, மார்பு வரை மெதுவாக மேலே உயர்த்தவும். உங்கள் வயிறு மற்றும் தொப்புள் தரையில் பதிந்த படி இருக்க வேண்டும்.
உங்கள் கைகளின் ஆதரவுடன் உங்கள் உடற்பகுதியை பின்னால் நன்றாக வளைத்து, தலையை பின்னால் சாய்ந்து (படத்தில் உள்ளபடி) மேலே பார்க்க வேண்டும். முதுகுத்தண்டை வளைக்கும்போது விழிப்புணர்வுடன் சுவாசிக்கவும். இந்த நிலையில் நீங்கள் இரண்டு உள்ளங்கைகளுக்கும் சமமான அழுத்தத்தை கொடுக்க வேண்டும். 30 விநாடிகள் சீரான சுவாசத்தில் இருந்த பின்னர் மெதுவாக மூச்சை வெளியே விட்டு கொண்டே ஆரம்ப நிலைக்கு வந்து ஓய்வெடுக்கவும். இவ்வாறு இந்த ஆசனத்தை 4 முதல் 5 முறை செய்ய வேண்டும்.
* உணவை சாப்பிட்ட 4-5 மணி நேரத்திற்குப் பிறகு தான் இந்த ஆசனத்தை செய்ய வேண்டும். ஏனெனில் இந்த ஆசனம் செய்யும் போது வயிற்றில் படுத்திருப்பது உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
* உங்கள் கைகள், தோள்கள், கழுத்து மற்றும் முதுகைத் தளர்த்த சில அடிப்படை வார்ம்-அப் மற்றும் நீட்சிப் பயிற்சிகளை செய்த பின்னர் இந்த ஆசனத்தை செய்ய தொடங்க வேண்டும்.
எச்சரிக்கை:
புஜங்காசனம் பல நன்மைகளைக் கொண்டுள்ளது மற்றும் கிட்டத்தட்ட அனைவரும் அதைச் செய்ய முடியும் என்றாலும், சில சந்தர்ப்பங்களில், ஒரு சிலருக்கு தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
* நீங்கள் கர்ப்பமாக இருந்தால் புஜங்காசனம் செய்வதைத் தவிர்க்கவும்.
* உங்களுக்கு விலா எலும்புகள் அல்லது மணிக்கட்டுகள் முறிந்திருந்தால், அல்லது சமீபத்தில் குடலிறக்கம் போன்ற வயிற்று அறுவை சிகிச்சைக்கு உட்பட்டிருந்தால், இதைப் பயிற்சி செய்வதை தவிர்த்து விடுவது நல்லது.
* கார்பல் டன்னல் சிண்ட்ரோம் (carpal tunnel syndrome) நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் புஜங்காசனம் செய்வதைத் தவிர்க்கவும்.
* ஆஸ்துமா பிரச்சனை இருப்பவர்கள் இந்த யோகாசனத்தை பயிற்சி செய்யாதீர்கள்.
* நீங்கள் கடந்த காலத்தில் நாள்பட்ட நோய்கள் அல்லது முதுகெலும்பு கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்தால், வழிகாட்டுதலுக்காக பயிற்சி பெற்ற ஆசிரியரின் கீழ் பயிற்சி செய்யவும்.
பயன்கள்:
தோள்பட்டை, முதுகு மற்றும் கழுத்து வலியை போக்கி வலிமை தருகிறது. அடிவயிறு பகுதியில் உள்ள தேவையற்ற சதைகள் குறைகின்றன. புஜங்காசனம் செய்யும் போது, மார்பு நன்கு அகன்று இருப்பதால், ஆழ்ந்த சுவாசம் நடக்கிறது. இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. செரிமானக் கோளாறுகளை சரிசெய்கிறது. கல்லீரல், சிறுநீரகம் ஆகியவற்றின் செயல்பாடுகள் சீராக்குகிறது. சோர்வு மற்றும் மன அழுத்தத்தை குறைக்கிறது.