இதற்கு ஒரே வரியில் பதிலை சொல்லி விடலாம். சிவாஜி தி பாஸ் படத்தில் ரஜினிகாந்த் சொல்வாரே "பணக்காரன் இன்னும் பணக்காரன் ஆகிக்கிட்டு இருக்கான், ஏழை இன்னும் ஏழையாகிட்டு இருக்கான்". என்பது தான் .
இந்திய பொருளாதாரத்தில் முகேஷ் அம்பானியின் பங்கு மட்டும் 10%. இந்தியா உலகில் 5 வது பெரிய பொருளாதார வல்லரசு நாடாக உள்ளது. இதில் அம்பானியின் வளர்ச்சியும் உண்டு. இந்திய பொருளாதாரத்தில் அம்பானியின் சராசரியும் ஆன்டி முத்துவின் சாரசரியும் சேர்க்கும் போது, இந்தியாவின் வளர்ச்சி உயர்கிறது. ஆனால், ஆன்டி முத்து வளர்வதில்லை. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிகவும் ஏற்றத் தாழ்வாக உள்ளது.
இந்தியா முதலாளித்துவ சோஷியலிச கலப்பு பொருளாதாரக் கொள்கை வைத்துள்ளது.1985 இல் அதிக வரி விகிதம் நீக்கப்பட்ட பிறகு சந்தைகளை உலக நாட்டிற்கு இந்தியா திறந்து விட்டதன் காரணமாக பொருளாதார வளர்ச்சி மேம்பட்டது. தாராளமயமாக்கல் மற்றும் தடையற்ற சந்தை மூலம் பொருளாதார வளர்ச்சி உயர்ந்து நாட்டில் வறுமையைக் குறைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், சராசரி பொருளாதார வளர்ச்சியானது ஏற்றத்தாழ்வை மறைக்கிறது. நாட்டில் பொருளாதாரப் பகிர்வு மிகவும் சமமற்றதாக உள்ளது, 50 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் குறிப்பிடத்தக்க செல்வம் எதுவும் இல்லாமல் உள்ளனர்.
உலகளவில், ஏற்றத்தாழ்வு நிலை நீடிக்கிறது. நீங்கள் பல்வேறு நாடுகளை ஒப்பிட்டுப் பார்த்தால், ஏற்றத்தாழ்வு அதிகமாக உள்ளது. இந்தியா பொருளாதார வளர்ச்சியில் பிரிட்டனை முந்திவிட்டது. ஆனால், உள்நாட்டில் ஏற்றத்தாழ்வு குறைபாடுகளை அரசால் களைய முடிவதில்லை. அரசின் நிர்வாகத்ததில் கூட அரசே ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குகிறது. ஒரு அரசு நிறுவனத்தில் அதன் மேலாளருக்கு வருடத்திற்கு ₹15 லட்சம் வரை அரசு சம்பளமாக வழங்குகிறது. அதே நிறுவனத்தில் கடைநிலை ஊழியருக்கு ₹4 லட்சத்தை வருட சம்பளமாக வழங்குகிறது. இந்த சம்பள முரண்பாடுகளை அரசு களைவது அவசியம்.
நாட்டில் புதிதாக ஒருவர் தொழில் தொடங்க மிகுந்த சிரமங்களை அனுபவிக்கிறார். அப்படியே அவர் தொழில் தொடங்கினாலும் வங்கிக் கொள்கைகள் அவருக்கு சாதகமாக இருப்பது இல்லை. பெரிய தொழிலதிபர்களுக்கு கடன்கள் உடனடியாக கிடைக்கிறது. அரசு நடைமுறையில் புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு கடன் திட்டங்கள் இருந்தாலும் வங்கிகள் அதைப் பின்பற்றுவதில்லை. இதனால்தான் பெரும் தொழிலதிபர்கள் மேலும் மேலும் தொழில் தொடங்கி பணம் குவிக்க முடிகிறது. புதியவர்கள் பணம் இல்லாமல் முடங்குகின்றனர்.
நாட்டின் வேகமாக வளரும் பொருளாதாரம் மக்களிடையே ஒரு இடைவெளியை உருவாக்குகிறது. பெரும்பாலான நாடுகளில், மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் எதையும் சொந்தமாக வைத்திருக்கவில்லை. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விட தனிநபர் பொருளாதார வளர்ச்சி தான் மிகவும் முக்கியம். இந்தியாவை விட பொருளாதாரத்தில் முக்கியத்துவம் பெறாத நாடுகளில் கூட தனி நபர் வருமானம் இந்தியாவை விட பல மடங்கு அதிகமாக உள்ளது.
மாலத்தீவு தனிநபர் வருவாயில் 61வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் நிதியுதவியில் பெரும்பாலும் வாழும் நாடு இது. உலகின் மிகவும் வறுமையான நாடுகளான மாலத்தீவு, பூடான், பிலிப்பைன்ஸ் , இந்தோனேஷியா, லிபியா, அர்ஜென்டினா, ஈரான், ஈராக் வரை இந்தியாவை விட அதிக தனி நபர் வருமானத்தை பெறுகின்றனர். மேலே கூறிய சில நாடுகள் இந்தியாவையே மட்டுமே பெரும்பாலும் நம்பி வாழ்கின்றனர். ஆனால், இந்தியாவோ தனி நபர் வருவாயில் 129 இடத்தில் உள்ளது. இதில் ஒரே ஆறுதல் பங்களாதேஷ் 130 வது இடம். நல்ல வேளையாக அந்த நாட்டில் உள்நாட்டுக் குழப்பம் வந்தது, இல்லாவிட்டால் இந்தியாவை முந்தி இருக்கும்.
நாட்டு மக்களின் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை குறைக்கும் வகையில் தேசிய நிதி அமைச்சகம் புதிய பொருளாதாரக் கொள்கைகளை வகுத்து இடைவெளியை குறைக்க வேண்டும்.