My Perfectt Husband Series Review 
சின்னத்திரை / OTT

My Perfectt Husband Series Review - மருமகளாக வரும் காதலியின் மகள் - தடுத்தாரா ஏற்றாரா சத்யராஜ்?

நா.மதுசூதனன்

மகனுக்குப் பார்க்கப் போன பெண்ணின் அம்மா தனது பள்ளிப் பருவக் காதலி என்று தெரிய வந்தால் என்ன நடக்கும்? வீட்டில் ராமன் என்ற முத்திரையை இருபத்தி ஐந்து ஆண்டுகள் காத்து வந்த மனைவிக்குத் ரகசியம் தெரியவந்தால் நடக்கும் பிரளயங்கள் என்ன? இது தான் மை பெர்ஃபெக்ட் ஹஸபண்ட். இந்தக் கதையை எவ்வளவு உணர்வுபூர்வமாகச் சொல்லலாம் அல்லது கலகலப்பாகச் சொல்லலாம்?

சிகரம் மூவீஸ் தயாரிப்பில் தாமிரா இயக்கத்தில் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி யில் வெளியாகி இருக்கும் சீரீஸ் தான் இது. சத்யராஜ், சீதா, ரேகா, லிவிங்ஸ்டன் நடிப்பில் வெளியாகியுள்ள இதில் வீட்டில், அன்பான கணவனாகவும் வெளியில் சற்றே ஜொள் பார்ட்டியாகவும் இருக்கும் சத்யராஜ் (பாரதி). அவரது மனைவியாகச் சீதா (சரஸ்வதி). அவரது பள்ளிப் பருவக் காதலியாக ரேகா (பாரதி). அவரது கணவராக லிவிங்ஸ்டன் (சுப்ரமணியன்). 

ஒரு சின்னக் கருவைக் கொண்டு இவர்கள் இதை ஆரம்பித்தாலும் முதல் எபிசோடிலேயே அந்த முடிச்சை அவிழ்த்து விடுகிறார்கள். அதன் பின் நடப்பது தான் கதையே. ஒரு கட்டத்தில் சத்யராஜ் அந்தத் திருமணத்தைத் தவிர்க்க நினைத்து மனைவி சீதாவிடம் உண்மையைச் சொல்ல வேண்டிய நிலை. அதன் பின்னர் நிகழ்காலத்திலும் பிளாஷ் பேக்கிலும் கதை நகர்கிறது. என்ன பிரச்சினை என்றால் பிளாஷ் பேக்கில் நடக்கும் காதலில் எந்தவிதமான அழுத்தமோ ஆழமோ இல்லை. இவர்களுக்குக் காதல் வருவதற்குண்டான ஒரு நிகழ்வும் மனதில் நிற்கவில்லை. பார்த்தவுடன் காதல் போன்ற விடலைப் பருவ ஈர்ப்பு தான் அதில் இருக்கிறது. என்னதான் அந்தக் காதல் ஜோடி பெரிய மனுஷத்தனமாக வசனங்கள் பேசினாலும் அந்தக் காதல் மனதில் ஒட்டவே இல்லை. சேரும்போது அழகோ பிரியும்போது வருத்தமோ இரண்டும் இல்லாமல் கடந்து போகிறது. இதற்குக் காரணம் பார்த்துப் பழகிய காட்சிகள்.

அடுத்து, இந்தக் கதை இப்படித் தான் நகரும் என்றும், வசனம் இது தான் இருக்குமென்றும் நாமே சொல்கிறோம். அந்த அளவு பலவீனமான திரைக்கதை. இவர்களது பிள்ளைகளாக, ரக்க்ஷன், அஜீஸ், வர்ஷா பொல்லம்மா ஆகியோர் வருகிறார்கள். நடிப்பு என்று குறிப்பாகச் சொல்லும்படி இவர்களுக்கு ஏதும் இல்லை.

முதல் காட்சியிலிருந்து இந்தச் சீரிஸை சற்றே அலுப்புத் தட்டாமல் கொண்டு போவது சீதாவின் நடிப்பு மட்டுமே. சத்யராஜின் காதலை அறிந்து, விடவும் முடியாமல் விலகவும் முடியாமல் சின்ன சின்ன முக பாவங்களாலும், வசனங்களிலும் அழகாக்க முயற்சிக்கிறார். சத்யராஜ் இந்த வயதிலும் ஃபிட்டாகப் பாத்திரத்திற்கு சட்டென்று பொருந்திக் கொள்கிறார். ஆனால் அவர் நடிப்புக்குத் தீனி போடும் காட்சிகள் இதில் அதிகம் இல்லை.

பெரிதும் எதிர்பார்க்கப்படும் சத்யராஜ், ரேகா சந்திப்பு அழகான ரம்யமான சூழ்நிலையில் அமைந்தாலும் அந்தக் காட்சிக்கு உண்டான சுவாரசியத்தை தரவில்லை. அதற்கு முக்கியக்காரணம் ரேகாவின் நடிப்பு. வயதாகிவிட்டதாலோ அல்லது டச் விட்டுப் போய்விட்டதாலோ என்னவோ, அவருக்கு உணர்ச்சிகள் வருவேனா என்கிறது. முணுக்கென்றால் ஆற்றின் நடுவே படகில் அமர்ந்து கொள்கிறார். மழையில் நனைகிறார். இவர் கடலோரக் கவிதைகள் டீச்சர். இதில் மாணவி அளவுக்குக் கூட நடிக்கவில்லை. இந்த ஜோடிப் பொருத்தமும் ஈர்க்கவில்லை.

இவர் இப்படியென்றால், ஒரு ரகசியம் சொல்ல வேண்டும் என்று மைல் கணக்கில் காரில் சென்று அத்துவானத்தில் தான் அதைப் பேசுவேன் என்று அடம் பிடிக்கிறது சத்யராஜ் குடும்பம். என்ன நோக்கமோ தெரியவில்லை. பள்ளிப் பருவ நடிகர் நடிகை தேர்வு பரவாயில்லை. ரேகாவின் கணவராக லிவிங்ஸ்டன். வழக்கமான நடிப்பை தந்திருக்கிறார். 

சீதாவின் நடிப்பிற்கு பிறகு குறிப்பிட்டுச் சொல்லும்படி இருப்பது ஆர்தர் வில்சனின் ஒளிப்பதிவும், லொகேஷன்களும். கொச்சியின் நீர் நிலைகளின் அழகும், சத்யராஜ் வீட்டின் உள்ளலங்கார லைட்டிங்களும் அருமை. அதுவும் அந்த நீச்சல் குளம். காட்சிகள் பளிங்கு போல் இருக்கின்றன.

இசை சொல்லிக் கொள்ளும் படி இல்லை. ஒரே மலையாள பாடல் மூன்று இடங்களில் வந்தாலும் முதல் முறை மட்டும் ரசிக்கும் படி இருக்கிறது. எங்கே வித்தியாசமாக முடித்தது விடுவார்களோ என்று எதிர்பார்க்க வைக்கும் அந்த நம்பமுடியாத பலவீனமான ட்விஸ்டை அடுத்தக் காட்சியிலேயே நீர்த்துப் போக வைத்துவிடுகிறார்கள். எனவே அதுவும் எதிர்பார்த்தது போல் நடந்து முடிந்து சுபம்.

எட்டு எபிசோட்கள் இருந்தே ஆக வேண்டும் என்று அடம் பிடிப்பது இருக்கட்டும் அதை அரை மணி நேரமாகக் குறைத்து செய்திருக்கலாம். ஒரே இடத்தில் நடக்கும் காட்சிகள், திரும்பத் திரும்ப வரும் சுவாரசியம் இல்லாத பிளாஷ் பேக் காட்சிகள் கொஞ்சம் பொறுமையைச் சோதிக்கின்றன. 

நிறைய நேரமும், பொறுமையும் இருந்தால் குடும்பத்துடன் அமர்ந்து இந்தச் சீரிஸை பார்த்து முடிக்கலாம். அதுவும் சீதாவிற்காக மட்டும்.

5 நிமிட பாடலுக்கு கோடிகளில் செலவு தேவையா? இந்திய சினிமாவின் மாயாஜாலம்! 

உடல் சூட்டையும் வலியையும் தணிக்கும் 6 வகை எண்ணெய்கள்!

திருமண வாழ்வில் முதல் ஆறு மாதங்கள் ஏன் முக்கியமானது தெரியுமா?

ஆந்திரா ஸ்பெஷல் தக்காளி பருப்பு கடையல்! 

அருவியின் மேல் கட்டப்பட்ட அழகு கட்டிடம்! ஃபாலிங்வாட்டர் வீடு!

SCROLL FOR NEXT