Kaviarasu Kannadasan Memorial Day 
வெள்ளித்திரை

காலம் கடந்து நிற்கும் கவியரசர் கண்ணதாசன்!

அக்டோபர் 17 - கவியரசு கண்ணதாசன் நினைவு தினம்!

ராதா ரமேஷ்

தமிழ் சினிமா வரலாற்றில் கவிஞர் என்றவுடன் அனைவருக்கும் முதலில் ஞாபகத்திற்கு வருவது கவிஞர் கண்ணதாசனே. தமிழ் மொழியை மிகவும் எளிமையாக மக்களிடம் கொண்டு சேர்த்த கவிஞர் கண்ணதாசன் 4000 கவிதைகள் 5000 திரை இசை பாடல்களுக்கும் மேலாக எழுதியுள்ளார். தமிழக அரசின் அரசவை கவிஞராக இருந்து அலங்கரித்த கவிஞர் கண்ணதாசனைப் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களை இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்!

கவிதை எழுதுவதில் தீவிர ஆர்வம் கொண்ட கண்ணதாசன் சென்னைக்கு வந்ததும் அவர் எழுதிய முதல் பாடல் 1949 ஆம் ஆண்டு வெளியான கன்னியின் காதலி என்ற படத்தில் இடம்பெற்ற 'கலங்காதிரு மனமே' என்ற பாடல். இந்தப் பாடல் எழுதியதில் தொடங்கிய இவரது பயணம் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஆளுமையாக இவரை அமரச் செய்தது.

எப்போதும் பாடல்களை எழுதும்போது கவிஞர் கண்ணதாசன் நடந்து கொண்டே கவிதைகளை சொல்லிக்கொண்டே இருப்பாராம். நடந்து கொண்டே இருந்தால் தான் சிந்தனை பிறக்கும் என்பதால் இவர் எழுதிய பெரும்பாலான பாடல்கள் வேட்டியின் நுனியை பிடித்தபடியே நடந்து கொண்டே எழுதியவை தானாம். அவ்வாறு பாடல்கள், கவிதைகளை எழுதும் போது எப்போதும் கால்களில் காலணி அணிய மாட்டாராம். செய்யும் தொழிலே தெய்வம் என்பதற்கு ஏற்ப கவிதைக்கு செய்யும் மரியாதையாகவே இதனை கருதியதால் தன் வாழ்நாள் முழுவதும் எழுதும்போது காலணி அணியாமல் இருப்பதை தொடர்ந்து வந்திருக்கிறார்.

கண்ணதாசன் மிகவும் நேசித்த இலக்கியம் என்றால் அது கம்பராமாயணம் தான். ஏனெனில் தான் கவிதை இயற்றும் சக்தியை இந்த இலக்கியத்தில் இருந்து தான் பெற்றதாகவும் இதுதான் தனக்கு பிடித்த இலக்கியம் என்றும் கூறுவாராம். கம்பரையும், பாரதியாரையும் மானசீக குருவாக ஏற்றுக் கொண்ட கண்ணதாசன் அவர்களுடைய எழுத்துக்களை பாமரனுக்கும் புரியும் வகையில் எளிமையாக்கம் செய்து தனது பாடல்களில் பயன்படுத்தி இருப்பார். காமராசரோடு நெருங்கிய நட்பு கொண்டிருந்த கவிஞர் கண்ணதாசன் அவரது வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க திட்டமிட்டு இருந்தாராம். ஆனால் அது அவரது காலத்தில் நடக்காமல் போய்விட்டது.

தான் வாழ்ந்த காலத்தில் பிறப்பு முதல் வாழும் காலம் வரை வரும் அனைத்து சூழல்களையும் தன்னுடைய பாடல்களில் எழுதிய கவியரசர் கண்ணதாசன் இறப்பு, இறப்புக்கு பின் செய்யப்படும் இறுதிச்சடங்கு போன்றவற்றையும் விட்டு வைக்காமல் தனது பாடல்களில் எழுத்துக்களாய் வடிவமைத்துச் சென்றார். அனுபவம் என்பது பெரிதாக ஒன்றும் கிடையாது, எல்லாவற்றையும் இழந்த பிறகு எஞ்சி நிற்பது தான்! என தன்னுடைய அனுபவம் முழுவதையும் தன்னுடைய வரிகளில் வடிவமைத்தவர் கண்ணதாசன்.

தன்னுடைய நண்பர்களிடம் எப்பொழுதும் ஏதாவது குறும்புத்தனம் செய்து கொண்டே இருப்பாராம் கண்ணதாசன். அப்படி ஒரு முறை தனது நண்பர்களுக்கு போன் செய்து கண்ணதாசன் இறந்து விட்டதாக கூறிவிட்டாராம். உடனே அனைவரும் அழுது கொண்டே வீடு தேடி வர அவர்கள் அனைவரையும் கேலி செய்து சிரித்துக் கொண்டிருந்தாராம் கண்ணதாசன். ஒரு காலகட்டத்தில் சினிமாவுக்கு பாட்டு எழுதியது போதும் என நினைத்த கண்ணதாசன் கடைசியாக MSV க்கு ஒரு பாட்டு எழுதிக் கொடுத்து விட்டு, இதுதான் என்னுடைய கடைசி பாட்டு என்று கூறினாராம். ஆனால் அதற்குப் பின்பு இளையராஜாவும், பாலு மகேந்திராவும் தாங்கள் எடுக்கும் ஒரு படத்திற்கு அவசரமாக ஒரு பாடல் எழுதி தர வேண்டும் என்று கேட்கவே மூன்றாம் பிறை திரைப்படத்தில் இடம் பெற்ற 'கண்ணை கலைமானே' என்ற பாடலை எழுதிக் கொடுத்து விட்டு இதுதான் என்னுடைய கடைசி பாடல் என்று கூறிவிட்டாராம். அதன் பிறகு கவியரசர் கண்ணதாசன் பாடலே எழுதவில்லை.

தன்னுடைய வரிகள் மூலம் வாழ்வியல் தத்துவங்களை பாமரனுக்கும் புரியும் வகையில் எழுதியவர் கவியரசர் கண்ணதாசன். இவ்வாறாக அவரது பாடல்கள் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருந்த வேளையில் கல்லூரி பேராசிரியை ஒருவர் வானொலி ஒன்றில் திரை இசை பாடல்களும், இலக்கியமும் என்ற தலைப்பில் கண்ணதாசன் பாடல்களை சுட்டிக்காட்டி பேசியிருக்கிறார். அப்படி பேசும்போது ஒவ்வொரு பாடலும் எந்தெந்த இலக்கியங்களில் இருந்து எடுக்கப்பட்டு கையாளப்பட்டிருக்கிறது! என்பதை கோடிட்டு காட்டியிருக்கிறார் அந்த பேராசிரியை. அந்தக் கல்லூரி பேராசிரியையின் வானொலி ஒலிபரப்பு வெளியானதும் அந்த பேராசிரியைக்கு ஒரு போன் கால் வந்திருக்கிறது.

போனை எடுத்தவுடன் மறுமுனையில் பேசுபவர் தன்னை கண்ணதாசன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, நீங்கள் பேசுவதை நான் கேட்டேன், மிகவும் அற்புதமாக பேசியிருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்! என்று கூறிவிட்டு நம் மொழியில் உள்ள பல்வேறு இலக்கியங்களும், இதிகாசங்களும், சங்க நூல்களும் படித்தவர்களான உங்களுடனே நின்று விடுகிறது. அதை பாமரனுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்பதால்தான், நான் அதனை மிகவும் எளிமைப்படுத்தி அவர்களுக்கு புரியும் வகையில் பாடல்களாக எழுதுகிறேன் என்று கூறி அதற்கு எடுத்துக்காட்டாய் பாடல் ஒன்றையும் கூறினாராம். இதைக் கேட்ட பின், தான் பேசியதை நினைத்து மிகவும் வருத்தப்பட்டாராம் அந்த கல்லூரி பேராசிரியை.

வாழ்க்கைக்கு தேவையான நெறிமுறைகளை கடைகோடி மனிதர்களுக்கும் கொண்டு சேர்ப்பதில் திரை இசை பாடல்களுக்கு ஒரு மிகப்பெரிய பங்கு உண்டு. இதனை கருதியே தன்னுடைய பெரும்பாலான எழுத்துக்களில் இலக்கியங்களை மிகவும் எளிமைப்படுத்தி தன்னுடைய பாடல்களில் பயன்படுத்தியிருப்பார் கண்ணதாசன். இப்படி வாழ்வின் ஒவ்வொரு சூழலிலும் மனிதர்களுக்கு தேவையான தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டு பாடல்கள் எழுதப்பட்டதால் தான் கண்ணதாசனின் வரிகள் காலம் கடந்தும் நம் நினைவுகளில் புரளுகின்றன. இன்றும் கூட நாம் கேட்கும் பாடல்களில் 10 ல் 2 பாடல்களுக்கு அடித்தளம் இட்டவர் நிச்சயம் கண்ணதாசனாகத்தான் இருப்பார்!

குளிர் காலத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான மொறு மொறு பக்கோடா வகைகள்!

சின்ன விஷயங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தின் அவசியம் தெரியுமா?

ஸ்ரீ சத்யசாயி பாபாவின் பொன்மொழிகள்!

நேர்மறை உணர்வோடு (Positive feeling) பயணியுங்கள்..!

வெண்ணெய் (Butter jeans) ஜீன்ஸின் தனித்துவம் தெரியுமா?

SCROLL FOR NEXT