Lubber Pandhu Movie 
வெள்ளித்திரை

விமர்சனம்: லப்பர் பந்து - தொடரும் கிரிக்கெட் செண்டிமெண்ட் வெற்றி! இயக்குனருக்கு பூங்கொத்து!

நா.மதுசூதனன்

கிரிக்கெட் என்றும் மக்களுக்கு உற்சாகத்தைத் தரக்கூடிய விளையாட்டு. சினிமாவில் கிரிக்கெட் அதில் செண்டிமெண்ட் என்பது வெற்றிக்கான உறுதியான பார்முலா. இதில் பல படங்கள் ஜெயித்திருக்கின்றன. சென்னை 28, கனா, ஜீவா, இந்தியில் கூமர், 83, ஜெர்சி, போன்ற படங்களைச் சொல்லலாம். கிரிக்கெட், செண்டிமெண்ட் அதில் லேசாகச் சாதிய பாகுபாடுகள் சேர்த்து விட்டால் இன்றைய வெற்றிப்படம் தயார். அப்படி வந்திருக்கும் ஒரு படம் தான் ஹரிஷ் கல்யாண், தினேஷ் நடிப்பில் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வந்துள்ள லப்பர் பந்து.

முதல் காட்சியில் இருந்தே ஒரு உற்சாக மனநிலைக்கு கொண்டு சென்று விடுகிறார் இயக்குனர். அதுவும் தொண்ணூறுகளில் பிறந்து கிராமப்புறங்கள், மற்றும் சிறு நகர்ப்புறங்களில் வளர்ந்தவர்களுக்கு இந்த லப்பர் பந்து மற்றும் டென்னிஸ் பந்து கிரிக்கெட் தான் உலகமே. பொட்டல் காடுகளில் வியர்வை குளியலில் வெறும் கால்கள் அல்லது ஹவாய்/ரப்பர் செருப்போடு விளையாடிய மக்கள் கூட்டம் அதை இன்றளவும் நினைத்துப் பார்க்காமல் இருக்காது. 

கிராமத்தில் உள்ள ஒரு கிரிக்கெட் அணியில் துவக்க ஆட்டக்காரராக இறங்கி அனைத்துப் பந்துகளையும் சிதற அடிப்பவர் கெத்து (தினேஷ்) அவரைப் பார்த்து வளர்ந்த ஒரு பையனாக அன்பு (ஹரிஷ்). அனைவருக்கும் அவர் சிம்ம சொப்பனமாக இருந்தாலும் அவரது வீக்னஸ் தெரிந்த ஒரு பௌலர் அன்பு. அவரது பேச்சை அவர் வேற்று சாதிக்காரர் என்பதாலேயே யாரும் மதிப்பதில்லை. ஆட்டத்திலும் சேர்த்துக் கொள்வதில்லை.

காலத்தின் வளர்ச்சியில் அவர் யாரென்று தெரியாமலேயே தினேஷின் மகளைக் (சஞ்சனா) காதலிக்கிறார். ஒரு சூழ்நிலையில் அன்புவும் கெத்தும் எதிரெதிர் அணியில் விளையாட நேர்கிறது. அதில் அவரது பலவீனத்தைப் பயன்படுத்தி அவரை வீழ்த்திவிடுகிறார் அன்பு. அடுத்து என்ன ஆகிறது. இவர்கள் இணைந்தார்களா காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா என்பது தான் கதை.

ஒரு கதையில் அனைத்துக் கதாபாத்திரங்களுக்கும் நல்ல ஆட்களைப் போட்டுவிட்டால் போதும் கதை அதன் பாட்டுக்குச் சுவாரசியமாக நம்மை இழுத்துப் போகும் என்பதற்கு இந்தப் படம் ஒரு உதாரணம். பத்து நிமிடங்களுக்குப் பிறகு இவர்கள் அன்பு, கெத்து, இவர்களது காதலி மனைவி (ஸ்வாஸ்விகா) இவர்கள் நண்பர்களாக வரும் பால சரவணன், ஜென்சன் பிரபாகர், அம்மாக்களாக வரும் கீதா கைலாசம், தேவதர்ஷினி போன்றவர்கள் அந்தப் பாத்திரங்களாகவே தான் தெரிகிறார்கள்.

வசனங்கள் இயல்பாக நகைச்சுவையுடன், அழுத்தத்துடனும் எழுதப்பட்டுள்ளன. சாதி வித்தியாசங்கள் பார்ப்பதாகக் காட்டப்பட்டாலும் அதை ஒரேயடியாக ஓங்கி அறைவது போலச் சொல்லாமல், இன்னொருவர் மேல் வெறுப்பை உமிழும் காட்சிகளை வைக்காமல், மேலோட்டமாகக் கடத்திச் செல்கிறார் இயக்குனர்.

தங்கள் மேல் வைக்கப்படும் அடக்குமுறையை எப்படிக் கடந்து செல்கின்றனர். நம்பிக்கையுடன் இருந்தால் கண்டிப்பாக ஒரு மாற்றம் வரும் என்று காட்சிப்படுத்தியதில் இந்தப் படம் தனித்துத் தெரிகிறது. பெரும்பாலும் உணர்ச்சிகளைக் கொட்டி நடிப்பதில் தினேஷுக்கு ஒரு தடுமாற்றம் இருக்கும். நிலையான முகபாவத்தோடு தான் அவர் நடிக்கிறார். சில சமயம் அது நமக்கு வித்தியாசமாகத் தெரியும். ஆனால் அந்த ஸ்டைல் தான் இந்தப் படத்தில் அவருக்குக் கச்சிதமாகப் பொருந்தி இருக்கிறது. களத்தில் அனாயசமாக அடித்து வெற்றி பெறுவது, மனைவியைக் கண்டதும் பயத்தில் பம்முவது, காதலை நளினமாக வெளிக்காட்டுவது, மகள்மீது பாசத்தைக் காட்டுவது என வேறு பரிமாணம் காட்டியிருக்கிறார். தன்னை விட்டுப் போன மனைவி திரும்பி வந்ததை அவர் உணர்ந்து உடைந்து அழும் காட்சி ஒன்று சாட்சி. அவர் மனைவியாக வரும் ஸ்வாஸ்விகா நல்ல தேர்வு. பார்வையாலேயே மிரட்டுகிறார்.

தினேஷுக்கு சரிசமமாக நடித்திருக்கிறார் ஹரிஷ் கல்யாண். மீசையை எடுத்து ஒரு ஊர் பையனாகக் கோபப்பட வேண்டிய இடத்தில் கோபப்பட்டு இறங்கிப் போக வேண்டிய இடத்தில் இறங்கிப் போய்த் தரமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தன்னை சாதியைக் காரணம் காட்டி ஒதுக்குகிறார்கள் எனது தெரிந்தும் பெரிதாக எதிர்த்துப் போராடாமல் நின்று சாதித்துக் காட்டுவோம். நமக்கு நடந்ததை நாம் பிறருக்குச் செய்யக் கூடாது எனக் கிளைமாக்ஸ் மேட்சில் அவர் செய்யும் காரியம் சபாஷ் என்று சொல்ல வைக்கிறது.

இந்தப் படம் இப்படி ஆரம்பித்து இப்படித் தான் முடியும் என நம்மால் நன்றாக ஊகிக்க முடிந்தாலும் கிளைமாக்சில் ஒரு சின்னத் திருப்பத்தைக் கொடுத்துத் தினேஷும், ஹரிஷும் நடந்து போகையில் அவர்கள் பனியனில் இருக்கும் அன்பு, கெத்து என்ற பெயர்களைக் காட்டி அன்பு தான் கெத்து எனச் சொல்லாமல் சொல்லும் காட்சி அழகு.

சாதியைச் சொல்லி ஒதுக்கி வைக்கிறார்கள் என அனாவசியக் கூக்குரலோ சண்டை சச்சரவுகளோ இல்லாமல் தங்களை ஏற்றுக் கொள்ள வைப்பதில் கவனமாக இருந்தால் போதும் என இறுதியில் அவர்கள் காட்டும் காட்சியில் விளங்குகிறது. டீம் கேப்டனாகக் காளி வெங்கட்டும் கச்சிதம். 

ஷான் ரோல்டனின் இசை, தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவு, ஜி மதனின் எடிட்டிங் இவை கிரிக்கெட் காட்சிகளை அடுத்த கட்டங்களுக்கு நகர்த்தி செல்கின்றன. பாடல்கள் மான்டேஜ் காட்சிகளாக அமைந்துவிட்டது ஆறுதல். ஒரு படம் வெற்றி பெற சண்டையோ, வில்லன்களோ, குத்துப்  பாட்டுகளோ தேவையில்லை. பிழியப் பிழிய அழவைக்க வேண்டியதில்லை. சந்தர்ப்பங்களே சில சமயம் வில்லலன்கள். மனிதர்கள் அனைவரும் நல்லவர்களே. இதைத் தொடர்ந்து பயன்படுத்தி வெற்றியடைந்தவர் இயக்குனர் விக்ரமன். இந்தப் படத்தின் இயக்குனரும் அந்த நிலைப்பாட்டை இதில் காட்டியிருக்கிறார்.

ரத்தம், அரிவாள், சாதி வெறியெனத் தொடர்ந்து படங்கள் உச்சஸ்தாயியில் சத்தம் போட்டுக் கொண்டிருக்க சத்தம் இல்லாமல் ஒரு வெற்றிப்படத்தைக் கொடுத்திருக்கும் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்துவிற்குப் பாராட்டு. சாதிய அடையாளங்களைப் பெயர்களாகவோ, குறியீடுகளாகவோ கூட (அம்பேத்கார் படம் தவிர) எந்தவொரு சாதியினரையும் குறிப்பிடாமல் கடந்து சென்றதற்கு அவருக்கு ஒரு பூங்கொத்து.

வருடத்தில் இருமுறை சூரிய பகவான் வழிபடும் ஸ்ரீமுக்தீஸ்வரர்!

கிரிக்கெட்டை கருவறுத்த Baseball! 

தூய தமிழ் போயே போச்சு! எங்கும் எதிலும் 'தமிங்கிலம்' வந்தாச்சு!

நாராயணீயம் காவியம் தோன்றிய வரலாறு தெரியுமா?

ஹாரர் ஃபேனாகவே இருந்தாலும், இரவில் இந்த 5 படங்களை பார்க்காதீங்க!

SCROLL FOR NEXT