இன்றைய நகர வாழ்க்கையில் பெரும்பாலும் இடப்பற்றாக்குறை காரணமாக தோட்டம் இல்லாத வீடுகளையே பரவலாகக் காண முடிகிறது. ஆனால், வீடு என்பது பலரும் நினைப்பது போல வெறும் செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட அமைப்பல்ல! தோட்டம் சூழ இருப்பதுதான் வீடு!
இருக்கும் இடத்தில் இயன்றவரை சில முக்கியமான மரங்களை வீட்டைச் சுற்றி வளர்ப்பது நமக்கு பல்வேறு வகைகளில் பயனளிக்கும்.
1. வாழை: வாழையின் இலை, பூ, பிஞ்சு, காய், பழம், பட்டை, தண்டு, சாறு ஆகியவை அனைத்துமே மருத்துவ குணமுடையவை. வாழையிலையில் தினமும் உணவைச் சுடச்சுட பரிமாறி சாப்பிடுவதன் சிறப்புகள் சொல்லி மாளாது. எண்ணிலடங்காத நன்மைகளை அள்ளித் தரும் வாழை மரங்களை வீட்டின் தண்ணீர் செல்லும் இடங்களில், நல்ல சூரிய ஒளி படும் இடங்களைத் தேர்வு செய்து வைக்க வேண்டும். விருந்து முதல் மருந்து வரை அனைத்தும் வாரி வழங்கும் வாழை மரம் கட்டாயம் நம் தோட்டத்தில் இடம்பெற வேண்டும்.
2. முருங்கை: வீட்டின் பின்புறத்தில் வைக்க வேண்டிய மரம் முருங்கை. ஏராளமான நன்மைகள் மிகுந்த இந்த முருங்கை மரம் ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் இரத்த சோகை, சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் நம்மை அண்டாது. முருங்கைக் கீரையும், முருங்கைக்காயும் மருத்துவ ரீதியாக பல்வேறு நன்மைகளைத் தருகின்றன.
3. வேப்பமரம்: வீட்டின் முன்புறம் வைக்க வேண்டிய மரம் வேப்பமரம். பல்வேறு நோய்களுக்கு அருமருந்தாக உள்ள வேப்பமரத்தின் கசப்புத் தன்மை நோய் கிருமிகளை வீட்டிற்குள் அண்ட விடாது. அது மட்டுமின்றி, மிகவும் சுத்தமான மற்றும் குளிர்ச்சியான காற்றைத் தரும்.
4. தென்னை: வீட்டில் நாம் பாத்திரங்கள் கழுவும் நீர் செல்லும் இடத்தில் நட வேண்டிய மரம் தென்னை. இதில் காய்க்கும் தேங்காய்கள் வீட்டின் உணவுத்தேவைகளை பூர்த்தி செய்யும். மேலும், தேங்காயை சேர்த்து வைத்து நமக்குத் தேவையான எண்ணெயாகவும் ஆட்டி வைத்துக்கொள்ள முடியும். வாழையைப் போலவே மிகுந்த பயன்களைத் தரக்கூடியது தென்னை.
5. பப்பாளி: வீட்டின் வேலி ஓரங்களில் வைக்க வேண்டிய மரம் பப்பாளி. இதன் இலை, காய், பழம் மூன்றும் மருத்துவ குணங்கள் மிக்கவை. 18 வகையான சத்துக்கள் உள்ள ஒரே பழம் பப்பாளி என்றால் அது மிகையாகாது. இந்த மரமும் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கவேண்டியது கட்டாயம்.
மரம் வளர்ப்போம்! மண் வளம் காப்போம்! தன்னிறைவு அடைவோம்.